Published:Updated:

`செந்தில்பாலாஜிக்கு கூஜா தூக்கவா நான் இருக்கிறேன்?'- பொங்கிய கே.சி.பி; சிக்கலில் அரவக்குறிச்சி

ந.பொன்குமரகுருபரன்
`செந்தில்பாலாஜிக்கு கூஜா தூக்கவா நான் இருக்கிறேன்?'- பொங்கிய கே.சி.பி; சிக்கலில் அரவக்குறிச்சி
`செந்தில்பாலாஜிக்கு கூஜா தூக்கவா நான் இருக்கிறேன்?'- பொங்கிய கே.சி.பி; சிக்கலில் அரவக்குறிச்சி

மே 19-ம் தேதி இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் உள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதி கவுரவம் சம்பந்தப்பட்டதாக இருதரப்புக்கும் மாறிவிட்டது. இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை எதிர்த்து, அ.தி.மு.க-வில் செந்தில்நாதன் நிறுத்தப்பட்டுள்ளார்.

கரூர் தி.மு.க-வில் நடைபெறும் உட்கட்சி மோதல் அறிவாலயத்தைக் கவலைகொள்ளச் செய்துள்ளதாக தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ``தன்னுடைய அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை செந்தில்பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்தவர் கே.சி.பழனிச்சாமி. 2016 தேர்தலில்கூட, செந்தில்பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட்டு பெரும் தொகையை செலவு செய்து தோற்றுப் போனார். இதனால் கோடிக்கணக்கில் கடனாளியாகவும் ஆகிவிட்டார். இன்று செந்தில்பாலாஜிக்காக தேர்தல் பணியாற்றுமாறு கூறியிருப்பது, கே.சி.பி.யை கொதிப்படையச் செய்துள்ளது. ‘இவ்வளவு காலமும் எதிரும் புதிருமா இருந்துட்டு, இப்ப ஒண்ணா வேலை பாருங்கனு சொன்னா எப்படிய்யா ஏத்துக்க முடியும். செந்தில்பாலாஜிக்கு கூஜா தூக்கவா நான் இருக்கிறேன்’ என்று கே.சி.பி. கொதித்தாராம்.

அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க.வுக்குத் தாவிய இரண்டு வாரங்களிலேயே நன்னியூர் ராஜேந்திரனிடம் இருந்த கரூர் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இதில் ராஜேந்திரன் கடும் அப்செட். இப்போது அரவக்குறிச்சி வேட்பாளராகவும் செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் தி.மு.க-வில் இருக்கும் சீனியர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் உள்ளடி வேலை பார்க்கக்கூடும் என்பதால், கரூர் தட்பவெட்பம் பற்றி ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

இரண்டு நாள்களுக்கு முன்னர் கரூர் தி.மு.க. பெருந்தலைகளின் நம்பருக்கு வந்த ஸ்டாலின், `அரவக்குறிச்சில நாமதான் ஜெயிக்கணும். உங்க பஞ்சாயத்தெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஒழுங்கா வேலையைப் பாருங்க. நீங்க என்னலாம் பண்றீங்கனு எனக்கு ரிப்போர்ட் வந்துகிட்டே இருக்கு. ஏதாவது தப்பாச்சுனா, அப்பறம் ஒருத்தரும் பதவில இருக்க முடியாது’ என்று கர்ஜித்தார். இதன் பிறகாவது கரு மேகங்கள் அகலும் என நம்பிக்கையோடு இருக்கிறது செந்தில்பாலாஜி தரப்பு. ஆனால், நிலைமை இடியும் மின்னலாகவும்தான் மாறிக் கொண்டிருக்கிறது” என்றார்.

தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றதால், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியை தோற்கடித்தே தீர வேண்டும் என்று அ.ம.மு.க-வினரும் சபதமேற்றுள்ளனராம். ``2011 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க.வுக்கு சேகர்பாபு தாவினார். அந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் இரட்டை இலையில் இருந்தவர், திடீரென உதயசூரியனுக்காக வாக்கு கேட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் வெற்றிவேலிடம் தோற்றுப் போனார். இதேநிலைதான் செந்தில்பாலாஜிக்கும் ஏற்படப் போகிறது.

2016 தேர்தலில் இரட்டை இலை. அதன்பிறகு குக்கர். இப்போது உதயசூரியன் என இரண்டு வருடத்தில் செந்தில்பாலாஜி மூன்று சின்னங்கள் மாறிவிட்டார். நாங்கள் ஜெயிக்கின்றோமோ, இல்லையோ, செந்தில்பாலாஜியை ஜெயிக்க விடமாட்டோம்” என்று அ.ம.மு.க. மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.

செந்தில்பாலாஜியைச் சுற்றி வலைகள் பின்னப்படுகிறது. எதையும் பணத்தால் அறுத்து எறிந்துவிட முடியும் எனக் கருதுபவர் அவர். இந்த வலையையும் அறுத்துவிடுவாரா அல்லது சிக்கிக் கொள்வாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.