Published:Updated:

பொன்பரப்பி சம்பவம்: ராமதாஸ் கண்டனமும்... முத்தரசனின் விளக்கமும்!

பொன்பரப்பி சம்பவம்: ராமதாஸ் கண்டனமும்... முத்தரசனின் விளக்கமும்!
பொன்பரப்பி சம்பவம்: ராமதாஸ் கண்டனமும்... முத்தரசனின் விளக்கமும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசிய கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ராமதாஸ். 

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசிய கருத்துகளைக் கண்டித்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, செல்போனில் தொடர்புகொண்டு சிலர் தன்னை மிரட்டுவதாகவும் ஆபாசமாகத் திட்டுவதாகவும் முத்தரசன் தெரிவித்தார். இந்தச் சூழலில், முத்தரசனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தின் சுருக்கமான பின்னணி...

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்றது. தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசிய சில கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ராமதாஸ். 

அந்த அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், வன்னியர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கொக்கரித்திருக்கிறார். உழைக்கும் பாட்டாளிகளாகிய அவர்கள் அப்படி என்ன தவற்றைச் செய்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மற்ற தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தைக் கொட்டியிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்களாகவும் இருந்தால், பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும் வன்னிய சமுதாயப் பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து முத்தரசனிடம் கேட்டபோது, “அந்தப் போராட்டத்தில் நான் பேசிய பேச்சு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை முழுமையாகப் பார்த்துவிட்டு டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட வேண்டும். நான் பேசாத ஒன்றைப் பேசியதாகக் கூறுவது சரியல்ல. இதுதொடர்பாக எங்கள் கட்சியின் சார்பில் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளோம்” என்று முடித்துக்கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விடுத்துள்ள அறிக்கையில், “சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் ஏப்ரல் 18-ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, பட்டியலின வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் சிலர் தடுத்து வாக்குரிமையை மறுத்துள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது கடுமையான குற்றச் செயலாகும். இதுதொடர்பாக, கடந்த 24-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில் எந்த இடத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், குறிப்பாக வன்னியர் சமூக மக்கள் பகுதியை அச்சுறுத்தும் வகையில் ஒரு வார்த்தையும் பயன்படுத்தவே இல்லை. அவரது உரையைக் காணொலியில் முழுமையாகப் பார்த்து, கவனமாகக் கேட்பவர்கள் இதை ஏற்பார்கள். சமூகநீதி சார்ந்த ஜனநாயகத்தைக் கொள்கைநிலையாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு 20 சதவிகிதம் பெறுவதற்காக பா.ம.க நடத்திய போராட்டத்தை ஆக்கபூர்வமான செயலாகவே மதிப்பீடு செய்தது என்பதை மருத்துவர் ராமதாஸ் மறுக்க மாட்டார் என நம்புகிறோம். 

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் முத்தரசன் பேசியதை அனைவரும் காண்பதற்கு வசதியாகக் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உண்மைநிலை இவ்வாறு இருக்க, வன்னியர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என முத்தரசன் பேசினார் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். வன்முறையைத் தூண்டும் விதத்தில் வதந்‘தீ’யை பரப்புரை செய்து வருகின்றனர். மேலும், சிலர் முத்தரசனின் அலைபேசியில் தொடர்புகொண்டு ஆத்திரமூட்டியும் ஆபாசமாகவும் பேசிவருகின்றனர். இந்த அநாகரிகச் செயலைக் குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுள்ளோர் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். 

இந்த இழிச்செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், தோழர் முத்தரசனை அலைபேசியில் தரம்தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது. யூடியூப், சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டுள்ள முத்தரசனின் உரையை மருத்துவர் ராமதாஸ் முழுமையாகப் பொறுமையுடன் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு