Published:Updated:

`வேட்டிக்கு யார் காப்பிரைட் கொடுத்தது?' - அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க, அ.ம.மு.க!

ந.பொன்குமரகுருபரன்

அ.தி.மு.க சின்னத்துக்காக அடித்துக்கொண்ட அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும், இப்போது வேட்டி கரைக்காக சண்டை போட தொடங்கிவிட்டனர்.

`வேட்டிக்கு யார் காப்பிரைட் கொடுத்தது?' -  அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க, அ.ம.மு.க!
`வேட்டிக்கு யார் காப்பிரைட் கொடுத்தது?' - அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க, அ.ம.மு.க!

“பிரிக்க முடியாதது என்னவோ?” எனத் திருவிளையாடல் தருமி இப்போது கேள்வி எழுப்பியிருந்தால், “அ.தி.மு.க, அ.ம.மு.க இடையிலான சண்டை” என சிவன் பதிலளித்திருக்கக்கூடும். இருதரப்புக்கும் இடையே கட்சிக்காகத் தொடங்கிய யுத்தம், இப்போது வேட்டி வரை வந்து நிற்கிறது.

அ.தி.மு.க-வினர் பயன்படுத்தும் கறுப்பு, வெள்ளை, சிவப்புக் கரை போட்ட வேட்டியைத்தான் இன்று வரை அக்கட்சியினரும், அ.ம.மு.க-வினரும் பயன்படுத்திவருகின்றனர். அ.ம.மு.க-வை தனிக்கட்சியாக தினகரன் பதிவுசெய்ததில் இருந்து, சிவப்பு, வெள்ளை, கறுப்புக் கரை வேட்டியை அ.ம.மு.க-வினர் பயன்படுத்த அ.தி.மு.க-வினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதன் எதிரொலியாக இன்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க தான் உண்மையான அ.தி.மு.க என நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இரட்டை இலைக்காகவும், அ.தி.மு.க-வுக்காகவும் சொந்தம் கொண்டாட மாட்டேன் என தினகரன் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த இந்த உறுதிமொழிக்கு மாறாக, எங்கள் கட்சிக் கொடியின் மாதிரியையும், தங்கள் கொடிக்கு நடுவே எங்கள் கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் படத்தையும் போட்டுக்கொள்கிறார்கள். அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க கரை வேட்டியைப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் ஆட்சேபத்தைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளோம்” என்றார்.  

சி.வி.சண்முகத்தின் மனுகுறித்து, அ.ம.மு.க-வின் செய்தித்தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியனிடம் பேசினோம். “கறுப்பு, சிவப்புக்கு நடுவே அண்ணாவின் உருவம் பொறித்ததுதான் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கொடி. இதைத்தான் தேர்தல் ஆணையத்தில் எம்.ஜி.ஆர் பதிவுசெய்தார். கறுப்பு, சிவப்பு சரிசமமாகவும், நடுவே வெள்ளை நிறம் சற்று அதிகமாகவும் வைத்து, எங்கள் கட்சிக் கொடியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளோம். அ.ம.மு.க கட்சிக் கொடி போட்ட வேட்டியைத்தான் அவர்கள் அணிந்து கொண்டிருக்கிறார்கள். நியாயப்படி பார்த்தால், அண்ணா படம் போட்ட வேட்டியைத்தான் அ.தி.மு.க-வினர் அணிய வேண்டும். கட்சிக் கொடியைத்தான் உரிமைகொண்டாட முடியாதே தவிர, வேட்டிக்கு யார் காப்பிரைட் கொடுத்தது?

தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அண்ணா படத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார். பெரியார், காமராஜர் படங்களை ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே பயன்படுத்துகின்றன. அவர்களைப் போலத்தான் ஜெயலலிதாவும் தமிழகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். அவர் படத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு சி.வி.சண்முகத்துக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமை இல்லை. யார் கொடுத்த இந்த முட்டாள்தனமான ஐடியாவை தூக்கிக்கொண்டு சி.வி.சண்முகம் டெல்லி சென்றாரோ தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, “எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கறுப்பு, வெள்ளை, சிவப்பு வேட்டியைத்தான் அ.தி.மு.க தொண்டர்கள் பயன்படுத்துகின்றனர். இன்று புதிதாக முளைத்தவர்கள், அந்த உரிமையை எடுத்துக்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சொந்தமாக ஒரு கொடி நிறத்தையும், வேட்டியும்கூட இல்லாத நிலையில்தான் தினகரன் கட்சி இருக்கிறது. கறுப்பு, சிவப்புக்கு நடுவே வெள்ளை நிறத்தின் அளவை சற்று கூடுதலாக வைத்து அ.தி.மு.க வேட்டிக் கரையைப் போன்றே தாங்களும் பயன்படுத்திக்கொள்ள அ.ம.மு.க தரப்பு கருதுகிறது. இதைத் தடுப்பதற்காக, தேவையான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

இரட்டை இலை, கட்சிப் பெயரில் ஆரம்பித்த சண்டை இப்போது வேட்டி வரையில் வந்து நிற்கிறது. அடுத்ததாக, “அம்மா” என்கிற பெயரை எப்படி தினகரன் கட்சி பயன்படுத்தலாம் எனச் சண்டை ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.