Published:Updated:

எதையும் பேசு... பொய்யைப் பேசு... திரும்பத் திரும்பப் பேசு... பாசிச ஹிட்லர் வீழ்ந்த கதை!

விகடன் விமர்சனக்குழு

மரபு மற்றும் தேசபக்தர்களே ஹிட்லரின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தனர். பேசு... எதையும் பேசு... பொய்யைப் பேசு... பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசு... கத்திப் பேசு... என்ற பாணியே ஹிட்லரின் உத்தி. அது உண்மையோ பொய்யோ, பார்வையாளனின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட தன் பேச்சின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்தார்.

எதையும் பேசு... பொய்யைப் பேசு... திரும்பத் திரும்பப் பேசு... பாசிச ஹிட்லர் வீழ்ந்த கதை!
எதையும் பேசு... பொய்யைப் பேசு... திரும்பத் திரும்பப் பேசு... பாசிச ஹிட்லர் வீழ்ந்த கதை!

`தோல்வியின் இறுதித் தீர்வு தற்கொலை' என்பது நாஜியின் கொள்கைகளில் ஒரு சாரம். 1945-ம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஜெர்மனியை நோக்கி முன்னேறியது சோவியத் படை. எதிரிகளிடம் ஒருபோதும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக நாஜிக்கள் தங்கள் இறுதி ஆயுதமான தற்கொலைக்குத் தயாராயினர். ஏப்ரலில் தலைநகர் பெர்லினில் எதிரிப் படைகள் நுழைந்ததும், தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்தது. பெர்லின் நாடாளுமன்றக் கட்டடத்தின் கீழ் நிலவறையில் இறுதிக்காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார் ஹிட்லர். எதிரியிடம் சிக்கி அவமானப்படவும், அதே நேரத்தில் தப்பித்து ஓடவும் தன்மானம் இடம்கொடுக்கவில்லை. ஏப்ரல் 30, 1945 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவசர அவசரமாக ஒரு குழியில் ஹிட்லரின் உடலும், உடன் இறந்த அவர் மனைவி ஈவா பிரவுன் உடலும் எரிக்கப்பட்டன. நாஜிக்களில் சிலரைத் தவிர ஹிட்லர் இறந்த விஷயம் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஹிட்லரின் சாம்பல்கூட எதிரிகளுக்குக் கிடைத்துவிடக் கூடாது என உறுதியாக இருந்தனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திய சர்வாதிகாரி ஹிட்லரின் முடிவு, இழிவாக அமைந்தது.

உலகை ஆட்கொள்ளத் தொடங்கிய பாசிசத்தை தன் கொள்கையாகக்கொண்டவர்தான் ஹிட்லர். தீவிர தேசியவாதத்தை அடிப்படையாகக்கொண்ட அரசை உருவாக்கிய முசோலினி, `பாசிஸ்ட்' என்ற சொல்லின் முதல் அடையாளமாகிறார். இதை அடியொற்றி 1933-ம் ஆண்டு ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஹிட்லர், தன் இனவாதப்போக்கின் காரணமாகப் பாசிசத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கிறார். இவர்களுக்கு முன்னும் பின்னும் பாசிச வடிவத்தின் மூலம் அரச இயக்கங்கள் உருப்பெற்றாலும், பாசிசத்தின் அடையாளமாக இவர்கள் இருவரே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இதில் இவர்களின் செயல்களை ஒப்பிடும்போது, பயங்கரவாதத்தின் முகவரியாக என்றும் உலகம் உச்சரிக்கும் ஒரு பெயர்... `அடால்ஃப் ஹிட்லர்!'

ஜெர்மனியின் ஹிட்லர்...

முதல் உலகப்போரின் தோல்வி, ஜெர்மனியின் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. தொழிலாளர்கள், ராணுவக் குழுக்கள், பெண்களுக்குச் சலுகை என்ற அடிப்படையில் புதிய புதிய குடியரசு அமைந்தது. தொடர்ந்து, போரின் விளைவால் 1919-ம் ஆண்டு வெர்செயில்ஸ் அமைதி ஒப்பந்தத்துக்கு அடிபணிந்தது ஜெர்மனி. ஜெர்மனியின் வளம், எல்லை, ராணுவம் அனைத்தும் குறைக்கப்பட்டன. அதிருப்தியடைந்த தேசியவாதிகள்  `முதுகில் குத்தப்பட்டதாக' உணர்ந்தனர். இந்தச் சூழலின் விளைவாகத் தீவிர தேசியவாதம், இனவாதம் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் உருவாயின. 1920-ல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, 1923-ல் ஹிட்லரின் `Beer Hall Putsch' என்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்தன. 1929-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி (*Black Tuesday) அதைச் சார்ந்த ஜெர்மனியின் நிலையை முற்றிலுமாகச் சீர்குலைத்தது. மரபுவாதிகள் மற்றும் ராணுவத்தினரின் கோபம் அரசின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.

இந்நிலையில், ஹிட்லரின் வெற்றியைப் பற்றி எழுத்தாளர் கெவின் பாஸ்மோர் இவ்வாறு குறிப்பிடுகிறார், `1930-களில் நாஜிக்களுக்கு வாக்களித்தவர்கள், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தீவிர தேசியவாத அரசியலுக்கு உடன்பட்டனர். போருக்கு முன்பே இதில் ஈடுபாடுகொண்ட இவர்கள், 1920-களில் தங்கள் வாக்கை வெவ்வேறு உதிரி தேசியவாதக் கட்சிகளுக்குச் சிதறடித்திருக்கலாம். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மையின் காரணமாக நாஜிக்களின் பலம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஆட்சியில் ராணுவத்தின் தலையீடு தொடர்ந்தது. ஹிட்லர் ஆட்சியைக் கைப்பற்றும் முன்பே ஜெர்மனியின் ஜனநாயகம் இறக்கும் நிலையில் இருந்தது.'

ஹிட்லரின் ஜெர்மனி...

`என்றாவது ஒரு நாள் சர்வ வல்லமை பொருந்திய தேசமாக ஜெர்மனி மாறும். ஐரோப்பா கண்டத்தின் ஆதிக்க சக்தியாக, யூதர்களே இல்லாத, ரோமின் தலையீடே இல்லாத என் ஜெர்மனி உருவாகும். இதுவே என் கனவு' என்பதே ஹிட்லரின் வாழ்நாள் குறிக்கோள். ஆஸ்திரியாவில் பிறந்தாலும், தான் ஒரு ஜெர்மானியன் மற்றும் ஆரியன் என்ற கற்பித வெறியுடன் இருந்தார். ஆஸ்திரிய கட்டாய ராணுவத்தில் சேர விருப்பமில்லாதவர், முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் விரும்பி இணைந்தார். ஜெர்மனியைத் தோற்கடித்து, வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தில் தலைகுனியவைத்தன மற்ற நாடுகள். அப்போது ஹிட்லருக்கு எழுந்த பெருங்கோபமே, உலக நாடுகளை அழிக்கும் இரண்டாம் உலகப்போருக்கு அடித்தளமாகியது. 1923-ல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தோல்வியடைந்தவர், மக்களை உள்ளடக்கிய தேர்தலின் மூலமே ஆட்சியதிகாரம் சாத்தியம் எனத் தீர்மானித்தார்.

மக்களிடத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார். அதில் மரபு மற்றும் தேசபக்தர்களே ஹிட்லரின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தனர். பேசு... எதையும் பேசு... பொய்யைப் பேசு... பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசு... கத்திப் பேசு... என்ற பாணியே ஹிட்லரின் உத்தி. அது உண்மையோ பொய்யோ, பார்வையாளனின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட தன் பேச்சின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்தார். `நன்றாகப் பேசத் தெரிந்தவர்களால், சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தைச் சொர்க்கமாகவும் காட்ட முடியும்' என்கிறார் ஹிட்லர்.

சூழலிலிருந்த நெருக்கடியில், ஹிட்லர்  பலருக்கு ஒரு மீட்பராகத் தெரிந்தார். பாசிசத்தின் வெற்றி, மக்கள் துணையில்லாமல் நிகழ்ந்துவிடவில்லை. தன் ஜெர்மனி என்ற தேசத்துக்காக நடத்திய போரில், இறுதி வரை ஜெர்மானியர்கள் பலிகடா ஆயினர். `மக்களுக்கானதே தேசம் என்பதற்கு மாறாக, தேசத்துக்கானவர்கள் மக்கள்' என்ற கற்பித்து உலக அழிவுக்கு இட்டுச் சென்றார் ஹிட்லர்.

ஹிட்லரின் முடிவில்...

ஹிட்லர் என்ற தனிநபரால் மட்டும் பாசிசம் வெற்றி பெறவில்லை. நாடுகளின் தொழில் போட்டியில் உருவான உலகப்போர் முதல் ஜெர்மனியின் சாமானியன் வரை அதற்கு ஏதோ ஒருவிதத்தில் துணை நின்றனர். இன்றும் வல்லாதிக்கச் சக்திகள் பிற நாட்டு அரசியலைச் சீர்குலைப்பது, நாட்டை முன்னிறுத்தி மக்களின் இருப்பை அச்சுறுத்துவது, தேசியவாதத்தைக் காரணம் கூறி போரை ஆதரிப்பது, இனவெறியைத் தூண்டி குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைக் கக்குவது என்று பாசிசம் பல்வேறு வடிவங்களில் கையாளப்படுகிறது. `அனைத்து மக்களுக்கான நன்மை' என்ற அரசியல் உறுதியாகும்போது, ஹிட்லரின் சாம்பலைப்போல் பாசிசம் காற்றில் கரைந்துபோகும்.