Published:Updated:

`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்!' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்

`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்!' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்
`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்!' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்

``அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சின்னத்தை வாங்குவதற்காக இப்படிச் செய்ததாக தினகரன் கூறுகிறார். இதில் சின்னம் மட்டுமே பிரச்னை கிடையாது."

அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக தினகரன் பொறுப்பேற்றுக் கொண்டாலும், சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வரவில்லை. `குடும்ப ஆட்களை ஓரம்கட்டியது போல் உங்களையும் ஒதுக்கிவிட்டார்' எனச் சசிகலாவுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர் நிர்வாகிகள் சிலர். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த மறுநாள் அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டார் தினகரன். தேர்தல் ஆணையத்திலும் இதுதொடர்பான மனு ஒன்றை அளித்தனர் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள். இந்த நடவடிக்கைகளை ரசிக்காத சசிகலா தரப்பினர், ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை சசிகலா வழிகாட்டுதலுடன் மீட்டெடுப்பதுதான் எங்கள் லட்சியம். அதற்காகத் தற்காலிக ஏற்பாடாகத்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கினோம். இப்போது இரட்டை இலை தொடர்பான வழக்கை சசிகலா நடத்துவார் எனக் கூறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அ.ம.மு.க-விலிருந்து சசிகலாவைப் பிரிப்பதுதான் தினகரனின் நோக்கமாக இருந்தது. அதைச் செயல்படுத்திக் காட்டிவிட்டார்" என வேதனைப்பட்டனர். 

இதையடுத்து, அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நிலவும் சலசலப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தினகரன். இதற்காகக் கடந்த 23-ம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரட்டை இலை தொடர்பான வழக்குக்காக சில தாள்களில் சசிகலாவின் கையொப்பத்தை வாங்கினார். தொடர்ந்து பேசும்போது, நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் அ.ம.மு.க-வுக்கான வெற்றி நிலவரம் குறித்தும் சசிகலாவிடம் விவரித்திருக்கிறார் தினகரன். இந்தச் சந்திப்பு குறித்து பேட்டி கொடுத்தபோதும், `சசிகலாவின் ஒப்புதலுடன்தான் அ.ம.மு.க-வைத் தனிக்கட்சியாகப் பதிவு செய்தோம். அவரை ஓரம்கட்டும் வேலைகள் நடப்பதாகச் சொல்வது தவறான தகவல்' என விளக்கம் கொடுத்தார். 

இந்த நிலையில், தினகரனின் முழுக் கட்டுப்பாட்டில் அ.ம.மு.க இருப்பது மன்னார்குடி குடும்பங்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. `சசிகலாவின் கை ஓங்கும் வகையில் அவரது பிரதிநிதியாக யாராவது ஒருவருக்குப் பொறுப்பு கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதைப் பற்றி நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவுகள் சிலர், ``கட்சியின் முழு அதிகாரமும் தினகரன் பக்கம் சென்றுவிட்டது. சசிகலா இல்லாமல் தனிக்கட்சியாக இயங்குவதில் சில நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை. இதைப் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தங்களுடைய பெயரைக் குறிப்பிட்டே நிர்வாகிகள் சிலர் கடிதங்களை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், `திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சின்னத்தை வாங்குவதற்காக இப்படிச் செய்ததாக தினகரன் கூறுகிறார். இதில் சின்னம் மட்டுமே பிரச்னை கிடையாது. குடும்ப ஆதிக்கம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் உங்களை நீக்கியிருக்கிறார். நீங்கள் கட்சியை டி.டி.வி-யிடம் விட்டுவிட்டீர்கள். அவர் தனித் தலைவராக உருவெடுக்க நினைக்கிறார். இனி அவர் பக்கம் இருந்து கட்சியைப் பெறுவது கடினம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக நடந்த விவாதத்தில், `குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அ.ம.மு.க-வில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும்' எனச் சிலர் முன்வைத்தனர். சசிகலாவின் நம்பிக்கைக்குரிய விவேக் ஜெயராமனைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பேசியுள்ளனர். அப்படிச் செய்யும்போது, `சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.ம.மு.க இருப்பது போலத் தோற்றம் கொடுக்கும்' என நினைக்கின்றனர். இதற்கு விவேக் தரப்பில் விருப்பம் தெரிவிக்கவில்லை. `இளைஞர் பாசறையின் பொறுப்பை விவேக்குக்குக் கொடுக்கலாம்' எனத் தொடக்க காலத்தில் சிலர் கூறியபோதே, அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

`என்னுடைய பாஸ் சின்னம்மாதான்' எனக் கூறிக் கொண்டு தொழில்களைக் கவனித்து வருகிறார். போயஸ் கார்டன், சிறுதாவூர், பையனூர், கோடநாடு, மிடாஸ், ஜெயா டி.வி, ஜாஸ் என அனைத்துக் கணக்கு வழக்குகளையும் அவர்தான் கவனித்து வருகிறார். வரவு செலவு கணக்குகளில் துல்லியமாக இருப்பதால், விவேக்கை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பெயரை சசிகலா அறிவித்தபோதுகூட, நிதி விவகாரங்களை விவேக் கையில் ஒப்படைத்தார். இதில், தினகரனுக்கு உடன்பாடில்லை. தவிர, ஒருவர் கையிலேயே அனைத்து அதிகாரங்களும் குவிவதில் சசிகலாவுக்கு உடன்பாடில்லை. அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்தார். இதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது அ.ம.மு.க-வில் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு விவேக்கைச் சிலர் முன்னிறுத்துகின்றனர். 

தற்போது அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராக விவேக் இருக்கிறார். `நான் எப்போதும் அ.தி.மு.க-தான்' என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அ.ம.மு.க-வில் எந்தப் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அது அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டைக்குச் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக, அ.ம.மு.க-வில் பதவியைப் பெறுவதற்கும் அவர் ஆர்வம் காட்டவில்லை. `தொழிலைக் கவனித்தால் போதும்' என்ற முடிவில் இருக்கிறார். இதையடுத்து, `வேறு யாரை முன்னிறுத்தலாம்?' என்ற விவாதங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன" என்றார் விரிவாக. 

பின் செல்ல