Published:Updated:

தி.மு.க - 1,87,593, அ.தி.மு.க - 70,744 - தபால் ஓட்டுக் கணக்கு...!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

கடந்த சட்டசபைத் தேர்தலைவிட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு குறைவான தபால் வாக்குகளே கிடைக்கும்.

தி.மு.க - 1,87,593, அ.தி.மு.க - 70,744 - தபால் ஓட்டுக் கணக்கு...!
தி.மு.க - 1,87,593, அ.தி.மு.க - 70,744 - தபால் ஓட்டுக் கணக்கு...!

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள் பொதுமக்களைப் போல வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவர்களின் வாக்குகள் பதிவாகாது. அவர்கள் வாக்களிக்கத் தனியாக தபால் ஓட்டுகள் வழங்கப்படும். வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும் பொறிக்கப்பட்ட பழைய வாக்குச்சீட்டு முறையில்தான் இவர்கள் வாக்களிப்பார்கள். இந்த வாக்குச்சீட்டுகள் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். அதில் விருப்பமான வேட்பாளர்களுக்கு முத்திரை குத்தி வாக்களிப்பார்கள். தேர்தல் பயிற்சி முகாமிலோ பொதுவான ஓர் இடத்திலோ உள்ள பெட்டிகளில் தபால் ஓட்டுகள் போடப்படும். வாக்குஎண்ணிக்கை தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்புவரை தபால் ஓட்டுகளைப் போடமுடியும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 23-ம் தேதி வரை, மொத்தம் 2,61,592 தபால் ஓட்டுகள், தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 1,33,632 ஓட்டுகள் பதிவுசெய்யப்பட்டு திரும்ப அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தபால் ஓட்டுகளை அளிக்க மே 23-ம் தேதிவரை கால அவகாசம் இருக்கிறது. போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்ட 90,002 தபால் ஓட்டுகள் மொத்தமும் பதிவு செய்யப்பட்டு, மீண்டும் அளிக்கப்பட்டுவிட்டது. அதாவது போலீஸாரின் தபால் ஓட்டுகள் 100 சதவிகிதம் பதிவாகியிருக்கின்றன. ``தபால் ஓட்டு படிவங்களை அளிக்கவில்லை'' எனப் பல இடங்களில் அதிகாரிகளிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம் செய்தது ஒரு பக்கம் என்றால், திருநெல்வேலியில் தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு போலீஸ்காரர் விற்ற விவகாரம் இன்னொரு பக்கம் புகைச்சலைக் கிளப்பியது. வேட்பாளர்களின் வெற்றி வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாகப் போனால் தபால் ஓட்டுகள்தாம் கைகொடுக்கும்.

அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் எந்தக் கட்சிக்கு போகும்? அரசு ஊழியர்கள் யார் பக்கம் இருப்பார்கள்? இந்தக் கேள்விக்கு விடை, வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியவரும் என்றாலும் இப்போதே அதைக் கணக்கிட முடியும். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளைக் கட்சி வாரியாகப் பிரித்து அலசியபோது கிடைத்த முடிவுகள் இங்கே....

முதலில் தே.மு.தி.க. கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரத்தைப் பார்ப்போம். (தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிட்டது).

* தே.மு.தி..க கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மொத்தமாக 2,355 அரசு ஊழியர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அரூர் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்தசாமிக்குத்தான் அதிகபட்சமாக 676 ஓட்டுகள் விழுந்தன. அதற்கு அடுத்த இடத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு 306 அரசு ஊழியர்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட வசந்தி தேவிக்கு 13 ஓட்டுகள் கிடைத்தன.

* தே.மு.தி.க. கூட்டணியில் 26 தொகுதிகளில் போட்டியிட்ட ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மொத்தமாகக் கிடைத்த அரசு ஊழியர்களின் ஓட்டுகள் 1,307. இதில் அதிகபட்சமாக கம்பம் தொகுதியில்தான் 131 அரசு அலுவலர்கள், அந்தக் கட்சிக்கு ஓட்டு  போட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த அளவாக அணைக்கட்டு தொகுதியில் ஐந்து ஓட்டுகள் கிடைத்தன.

* தே.மு.தி.க கூட்டணியில் அங்கம்வகித்த ம.தி.மு.க-வுக்கு மொத்தமாகக் கிடைத்த அரசு ஊழியர் ஓட்டுகள் 2,385. அதிகபட்சமாகக் கோவில்பட்டி தொகுதியில் 375 ஓட்டுகளும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் இரண்டு ஓட்டுகளும் கிடைத்தன.

* தே.மு.தி.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் மொத்தமாக வாங்கிய தபால் ஓட்டுகள் 1,705. இதில் அதிகபட்சமாக ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லிங்கம் 237 ஓட்டுகள் வாங்கினார். குறைந்தபட்சமாக குடியாத்தம் தொகுதியில் ஏழு ஓட்டுகள் கிடைத்தன.

* தே.மு.தி.க கூட்டணியில் போட்டியிட்ட இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம்., 25 தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தமாக அந்தக் கட்சிக்குக் கிடைத்த அரசு ஊழியர் ஓட்டுகளின் எண்ணிக்கை 2,180. அதிகபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 195 ஓட்டுகளும் குறைந்தபட்சமாக திரு.வி.க. நகர் தொகுதியில் 24 ஓட்டுகளும் பெற்றது.

* 29 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சிக்குத் 25 தொகுதிகளில் மட்டும் அரசு ஊழியர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மொத்தமாக எஸ்.டி.பி.ஐ. வாங்கிய தபால் ஓட்டுகள் 116. மிக அதிகபட்சமாகக் கம்பம் தொகுதியில்தான் 16 ஓட்டுகள் கிடைத்தன.

* 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 224 தொகுதிகளில் மட்டும் பா.ம.க-வுக்கு அரசு ஊழியர்கள் வாக்களித்தனர். மொத்தமாக 15,149  தபால் ஓட்டுகள் பா.ம.க-வுக்குக் கிடைத்தன. இதில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 781 வாக்குகள் கிடைத்தன. பென்னாகரத்தில் போட்டியிட்ட அன்புமணிக்கு 427 அரசு ஊழியர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். குறைந்தபட்சமாக 11 தொகுதிகளில் தலா ஒரு ஓட்டை வாங்கியது பா.ம.க. ஒவ்வொரு தொகுதிகளிலும் நூற்றுக்கும் அதிகமான அரசு ஊழியர் ஓட்டுகள் வாங்கிய தொகுதிகள் 52.

* பா.ம.க-வைப் போலவே தனித்து 231 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 224 தொகுதிகளில் தபால் ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. மொத்தமாக விழுந்த வாக்குகள் 2,794. மிக அதிகபட்சமாகக் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமானுக்கு 128 ஓட்டுகள் கிடைத்தன. குறைந்தபட்சமாக எட்டுத் தொகுதிகளில் தலா ஒரு ஓட்டு விழுந்திருக்கிறது.

* இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சில கட்சிகளோடு இணைந்து 2016 சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது பி.ஜே.பி. அந்தக் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் 186 இடங்களில் கிடைத்த அரசு ஊழியர்களின் ஓட்டுகள் 6,890. மிக அதிகபட்சமாக வேதாரண்யம் தொகுதியில் 628 ஓட்டுகள் கிடைத்தன. குறைந்தபட்சமாக வேப்பனஹள்ளி, வானூர், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஆறு தொகுதிகளில் தலா இரண்டு ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

* ஜான் பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 52 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 30 தொகுதிகளில் மட்டும் மொத்தமாக வாங்கிய வாக்குகள் 190. இதில் அதிகபட்சமாக திருவாடானை தொகுதியில்தான் 101 வாக்குகளைத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அரசு ஊழியர்கள் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு அதிகமான ஓட்டுகள் விழுவதற்குக் காரணம் அங்கே போட்டியிட்டது ஜான் பாண்டியன்.

* கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 59 தொகுதிகளில் மொத்தமாக 855 வாக்குகள் விழுந்தன. குறைந்தபட்சமாகத் ஒன்பது தொகுதிகளில் தலா ஒரு ஓட்டும் அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 123 ஓட்டுகளும் கிடைத்தன.

தி.மு.க. கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு மொத்தமாக 2,877 அரசு ஊழியர்கள் வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றிருந்ததால் தி.மு.க. ஆதரவு அரசு ஊழியர்களின் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இதில் புதிய தமிழகம் ஆதரவு அரசு ஊழியர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த இன்னொரு கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு மொத்தமாகக் கிடைத்த அரசு ஊழியர் ஓட்டுகளின் எண்ணிக்கை 2,035. குறைந்தபட்சமாக ஆம்பூரில் 351 வாக்குகளும் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 738 வாக்குகளும் கிடைத்தன. மனிதநேய மக்கள் கட்சிக்கு என இருக்கிற அரசு ஊழியர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். தி.மு.க. ஆதரவு அரசு ஊழியர்கள் ஓட்டுகள்தாம் மனிதநேய மக்கள் கட்சிக்கும் கிடைத்திருக்கும்.

*  தி.மு.க. கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சிக்கு மொத்தமாக 3,501 ஓட்டுகள் கிடைத்தன. குறைந்தபட்சமாக வாணியம்பாடியில் 316 வாக்குகளும் அதிகபட்சமாக மணப்பாறையில் 1,004 வாக்குகளும் கிடைத்தன.

*  தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தமாகக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தபால் ஓட்டுகள் எண்ணிக்கை 32,200. இதில் அதிகபட்சமாகக் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.ராமசாமிக்கு 1,405 ஓட்டுகள் கிடைத்தன. குறைந்தபட்சமாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட கராத்தே தியாகராஜனுக்கு 325 வாக்குகள் விழுந்தன.

* அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஷேக் தாவூத்தின் தமிழ் மாநில முஸ்லிம் லீக், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தக் கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டதால் இந்தக் கட்சிகளுக்கு தனித்தனியாகக் கிடைத்த தபால் ஓட்டுகளைக் கணக்கிட முடியாது. 234 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிட்டது. அந்த அடிப்படையில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த மொத்த அரசு ஊழியர்கள் ஓட்டுகள் 70,744. மிக அதிகபட்சமாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட கோவிந்தராஜுவுக்கு 908 ஓட்டுகள் கிடைத்தன. குறைந்தபட்சமாக தளி தொகுதியில் போட்டியிட்ட நாகேஷுக்கு 48 வாக்குகள் விழுந்தன.

*  `யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்கிற நோட்டாவுக்கும் அரசு ஊழியர்களிடம் ஆதரவு இருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 2,721 ஓட்டுகளை நோட்டாவுக்கு அளித்திருக்கிறார்கள். மிகக் குறைந்தபட்சமாக செய்யூர், சோளிங்கர், வாணியம்பாடி, செங்கம், மயிலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 தொகுதிகளில் மட்டும் தலா ஒரு நோட்டா வாக்கு  அளிக்கப்பட்டிருந்தது. மிக அதிகபட்சமாக சேலம் வடக்கு தொகுதியில் 62 ஓட்டுகள் நோட்டாவுக்குக் கிடைத்தன.

*  சுயேச்சைகளுக்குக் கிடைத்த தபால் ஓட்டுகளையும் பார்த்துவிடலாம்.

*  2016 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 1,575 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இவர்களில் 373 சுயேச்சைகளுக்கு 1,233 அரசு ஊழியர்கள் ஓட்டு போட்டனர். மிக அதிகபட்சமாக போளூர் தொகுதியில் போட்டியிட்ட ஏழுமலைக்கு 247 அரசு ஊழியர் ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

* அரசு ஊழியர்கள் போட்ட மொத்த ஓட்டுகளையும் கூட்டணிவாரியாகப் பிரித்து கணக்குப் போட்டால் தி.மு.க. கூட்டணிக்குத்தான் மிக அதிகமாக 1,87,593 வாக்குகள் கிடைத்துள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 70,744. மூன்றாவது இடத்தில் இருக்கும் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணிக்கு 15,133 ஓட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் இருக்கும் பி.ஜே.பி கூட்டணிக்கு 7,074 வாக்குகள் விழுந்திருக்கிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் நடத்தினார்கள். அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது எடப்பாடி அரசு. அந்த வடுக்கள் எல்லாம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தபால் ஓட்டில் வெளிப்படலாம். அதனால், கடந்த சட்டசபைத் தேர்தலைவிட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு குறைவான தபால் வாக்குகளே கிடைக்கும். போலீஸ்காரர்கள் மீது ஜெயலலிதா காட்டும் தனிப் பாசத்தால் அவர்களின் பெரும்பாலானோர் அ.தி.மு.க-வுக்குதான் வாக்களிப்பார்கள். அந்த ஓட்டுகள் இப்போது என்ன ஆகும் எனத் தெரியவில்லை. இதற்கெல்லாம் வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் விடை சொல்லும்.