Published:Updated:

`மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் தீக்குளிப்பேன்!' - உ.பி வக்ஃபு வாரியத் தலைவர்

தினேஷ் ராமையா
`மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் தீக்குளிப்பேன்!' - உ.பி வக்ஃபு வாரியத் தலைவர்
`மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் தீக்குளிப்பேன்!' - உ.பி வக்ஃபு வாரியத் தலைவர்

'மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், அயோத்தியில் ராமர் கோயில் இருந்த பகுதியில் தீக்குளிப்பேன்' என உத்தரப்பிரதேச மாநில ஷியா பிரிவு வக்ஃபு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வி தெரிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநில வக்ஃபு வாரியத் தலைவராக இருக்கும் வசீம் ரிஸ்வி, தனது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வெளிப்படையாக ஆதரித்துப் பேசிய அவர், மத நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள். 'ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ சென்றுவிடுங்கள்' என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல, மதராஸாக்களால் தீவிரவாதம் அதிகரிப்பதாகக் கூறி, அதனைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இவர் சமீபத்தில் எழுதிய கடிதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், 'மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால், அயோத்தியில் தீக்குளிப்பேன்' என்று வசீம் ரிஸ்வி அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்ததற்காகப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் கொலைமிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். 'மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால்  தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்று குறிப்பிட்டுள்ள அவர், மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.