Published:Updated:

சபாநாயகரை ஆதரிக்கும் பிரேமலதாவுக்கு 8 கேள்விகள்!

சபாநாயகரை ஆதரிக்கும் பிரேமலதாவுக்கு 8 கேள்விகள்!
சபாநாயகரை ஆதரிக்கும் பிரேமலதாவுக்கு 8 கேள்விகள்!
சபாநாயகரை ஆதரிக்கும் பிரேமலதாவுக்கு 8 கேள்விகள்!

``எதிர்க்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டதான் செய்வார்கள். மூன்று எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வது என்பது சபாநாயகரின் முடிவுக்கு உட்பட்டது. தி.மு.க ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தாரா?'' எனக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் பிரேமலதா. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பிறகு, `அ.தி.மு.க. போற்றி' என துதி பாட ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா.

எந்தக் கட்சியால் தே.மு.தி.க. பாதிக்கப்பட்டதோ அதே கட்சிக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறார். `தி.மு.க ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தாரா?' என்கிற கேள்வியை எழுப்பும் பிரேமலதாவிடம் கேட்பதற்கு 8 கேள்விகள் இருக்கின்றன.

1. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 2015-ம் ஆண்டு பேசிய தே.மு.தி.க. சட்டமன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் ஜெயலலிதா பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், வெங்கடேசன், சி.எச்.சேகர், தினகரன் ஆகிய 6 பேர் மீது உரிமை மீறல் கொண்டு வரப்பட்டு, அவர்களைக் கூட்டத்தொடர் முடிய சஸ்பெண்டு செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் தங்கும் விடுதி அறைகளும், அலுவலகமும் மூடப்பட்டன. இந்த உத்தரவை மேற்கொண்டது சபாநாயகர் தனபால்தான். அதே தனபாலுக்கு இப்போது பாராட்டு பத்திரம் வாசிக்கும் பிரேமலதா அன்றைக்கு தங்கள் மீது எடுத்த நடவடிக்கை சரி என்கிறாரா?

சபாநாயகரை ஆதரிக்கும் பிரேமலதாவுக்கு 8 கேள்விகள்!

2. சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தே.மு.தி.க. வழக்கு போட்டது. அப்போது எதிர்த்து வழக்கு போட்ட தே.மு.தி.க. இப்போது தனபாலை பாராட்டுவது முரண்பாடாக தெரியவில்லையா?

3. ``எம்.எல்.ஏ-.க்களை சஸ்பெண்டு செய்ய சட்டசபைக்கே அதிகாரம் உண்டு'' என உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் பதில் அளித்தபோது, அதை எதிர்த்து வாதாடிய தே.மு.தி.க. இப்போது அதே தனபாலுக்கு வெண்சாமரம் வீசுவது ஏன்?

4. ஆறு தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அப்போது அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை இப்போதும் பிரேமலதா ஆதரிக்கிறாரா?

5. சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனச் சொல்லி முன்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தே.மு.தி.க. ஆனால், அதை ஏற்கவில்லை சட்டசபை. அன்று சட்டசபைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தே.மு.தி.க. சட்டசபைக்கு ஆதரவாக இப்போது சப்பைக் கட்டு கட்டுவது அரசியல் ஆதாயத்துக்குதானே?

6. சுந்தரராஜன் (மதுரை மத்தி), அருண் சுப்பிரமணியம் (திருத்தணி), பண்ருட்டி ராமச்சந்திரன் (ஆலந்தூர்), சுரேஷ் குமார் (செங்கம்), தமிழழகன் (திட்டக்குடி), அருண் பாண்டியன் (பேராவூரணி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரையும் அ.தி.மு.க. தன் பக்கம் இழுத்தபோது கொதித்த பிரேமலதா இப்போது அதே கொதிநிலையில்தான் இருக்கிறாரா?

7. தஞ்சாவூரில் விஜயகாந்த் முன்னிலையில் ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்தனர் தே.மு.தி.க-வினர். பதிலுக்கு தமிழகம் முழுவதும் விஜயகாந்த் உருவபொம்மைகளை அ.தி.மு.க-வினர் எரித்தார்கள். இந்தச் சம்பவத்தை பிரேமலதா மறந்து விட்டாரா?

8. சிறைக் கைதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முசிறி அருகே தா.பேட்டையில் 2015-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா, ``2016 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தோம். இனி ஒருபோதும் அந்த தவறை செய்யமாட்டோம்'' என்றார். அப்படிச் சொன்ன பிரேமலதா இப்போது ஏன் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார்?

Vikatan