தேர்தல் பரப்புரைக்காக இணைய விளம்பரங்களில் எந்தக் கட்சி அதிகம் செலவு செய்தது? #VIkatanInfographics

தேர்தல் கட்சிகள் மட்டுமல்லாமல், மூத்த தலைவர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள் முதலானோரும் பணம் செலவளித்து, விளம்பரங்கள் அளித்துள்ளனர்.
இந்தியாவில் வாழும் 90 கோடி வாக்காளர்களில் 26 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகத் தரவுகள் கூறுகின்றன. 70 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பிரதிகள், துண்டுப் பிரசுரங்கள் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரைகள் தற்போது இணையவழியில் தொடர்கின்றன. கட்சியின் கொள்கைகள், எதிர்க்கட்சி மீதான விமர்சனங்கள், வாக்குறுதிகள் முதலானவை இணைய விளம்பரங்களில் பெரிதாக இடம்பெறுகின்றன.
அரசியல் விளம்பரங்களை இணையதளங்களில் வெளியிடும்போது, அவை பரிசீலிக்கப்படுகின்றன. ஃபேஸ்புக், கூகுள் முதலான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் விளம்பரங்கள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுகின்றன. இவை Sponsored என்ற வாசகத்துடன் வெளியிடப்படுகின்றன. ஒரு விளம்பரம் எத்தனை பேரைச் சென்றடைய வேண்டும், எவ்வளவு நேரம் அந்த விளம்பரம் பயனாளர்கள் பார்வையில் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூகுள் விளம்பரங்கள் இணையதளங்களில் இடம்பெறுகின்றன.
அனைத்துக் கட்சிகளும் கூகுளைவிட ஃபேஸ்புக் பயனாளிகளை ஈர்க்கவே அதிகளவில் பணம் செலவழித்துள்ளன. இந்தியா முழுவதும் நடப்பு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஃபேஸ்புக் தளத்தில் மொத்தமாக 95 ஆயிரம் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஃபேஸ்புக் தளத்தால் வசூலிக்கப்பட்டிருக்கும் தொகை 20 கோடி ரூபாய். கூகுள் தளத்தில் மொத்தமாக 22.3 கோடி ரூபாய் செலவில், அரசியல் கட்சிகள் 13 ஆயிரம் விளம்பரங்களை அளித்துள்ளன.
தேர்தல் விளம்பரங்களில் அதிக விளம்பரங்கள் அளித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம். அடுத்த மூன்று இடங்களையும் பி.ஜே.பி.யின் ஆதரவுப் பக்கங்களே பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக் விளம்பரங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கட்சிகள் மட்டுமல்லாமல், மூத்த தலைவர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலானோரும் பணம் செலவழித்து, விளம்பரங்கள் அளித்துள்ளனர். பொதுப்பெயரில் இயங்கி, அதிகளவில் ஃபாலோவர்களைக் கொண்ட ஃபேஸ்புக் பக்கங்கள் பல்வேறு கட்சிகளுக்காகவும், வேட்பாளர்களுக்காகவும் விளம்பரங்கள் அளித்திருக்கின்றன.
இந்திய அளவில் கட்சித் தலைவர்களில் அமித் ஷா 2.1 லட்ச ரூபாய்க்கும், ராகுல் காந்தி 1.3 லட்ச ரூபாய்க்கும் விளம்பரங்கள் அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அளவில் அதிக ஃபாலோவர்கள் இருப்பதால், sponsored விளம்பரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் தி.மு.க தனது அதிகாரபூர்வ பக்கம் மூலம் 4.5 லட்சம் செலவு செய்துள்ளது. அ.தி.மு.க-வுக்குத் தனியாக ஃபேஸ்புக் பக்கம் இல்லையெனினும், அதன் ஆதரவுப் பக்கம் ஏறத்தாழ 16 லட்ச ரூபாய் செலவழித்துள்ளது. வேட்பாளர்களில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களைவிட, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான ஆர்.ரங்கராஜன் சுமார் 2.2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இது பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் செலவு செய்துள்ளதைவிட அதிகமாகும்.

கூகுள் தளத்திலும் பி.ஜே.பி அதிக விளம்பரங்கள் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறது. ஏறத்தாழ 11 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பது தி.மு.க. தமிழகத்தில் தேர்தலுக்கு முன், இணையத்தில் தி.மு.க நடத்திய `ஆதிக்கவாதிகளும் வேண்டாம்; அடிமைகளும் வேண்டாம்' என்ற பரப்புரைக்கு ஆகியிருக்கும் செலவு 4 கோடி ரூபாய். தெலுகு தேசம் கட்சி, தி.மு.க-வைவிட அதிகமாக ஏறத்தாழ 5.5 கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலும், அவை மூன்று கன்சல்டிங் நிறுவனங்களின் பெயரில் அளிக்கப்பட்டிருக்கின்றன.
கூகுள் விளம்பரங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏழாவது இடம். 68 லட்ச ரூபாய் செலவில் 355 காங்கிரஸ் விளம்பரங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அ.தி.மு.க எய்வா மீடியா என்ற நிறுவனத்தைப் பயன்படுத்தி, 17.8 லட்ச ரூபாய் பணத்தை விளம்பரங்களுக்காகச் செலவு செய்துள்ளது.

இணையப் பயனாளர்களைக் கவர்ந்து வாக்குகளாக மாற்ற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டாலும், விளம்பரங்களுக்கான ரேஸிலும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே திட்டங்களைவிட விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்வதாக பி.ஜே.பி.யை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் சூழலில், இந்தத் தரவுகள் பி.ஜே.பிக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றன.