Published:Updated:

சாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை? - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட்

வெவ்வேறு சாதியினரால் நிகழ்த்தப்படும் இந்தத் தீண்டாமை குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது மட்டுமே நிகழ்த்தப்படுவதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டியது. ஆம். தலித் மக்கள் மீதுதான் சாதியை முன்வைத்து இந்தத் தீண்டாமை நிகழ்த்தப்படுகிறது.

சாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை? - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட்
சாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை? - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட்

சாதி பற்றிய உரையாடல்களும், சாதிப் பெருமைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் வெளிப்படையாக நிகழத் தொடங்கியிருக்கிற ஒரு காலகட்டமாக தற்போது உருவாகி இருக்கிறது. கிராமங்களில் ஊர்த் திண்ணைகளில் சாதிப்பெருமை பேசிக் கொண்டிருந்தவர்களின் வாரிசுகள் அல்லது அடுத்த தலைமுறையினர், ஃபேஸ்புக்கையும், டிக்-டாக்கையும் அதற்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதன் எல்லையும் வீச்சும் தமிழகம் தாண்டி, தமிழ் பேசும் எல்லோரையும் இணைத்திருக்கிறது.

இன்னொருபுறம், சாதி இல்லை என்கிற நகர்வை நோக்கி இளைஞர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். சாதிப் பெருமிதம் பேசுகிறவர்களையும் சாதியை முன்னிலைப்படுத்தி வருகிற படங்களையும் கடுமையான விமர்சனம் செய்யும் புதிய தலைமுறையாக உருவாகி நிற்கிறார்கள்.

இருதரப்பும் மோதிக்கொள்ளும் இந்தச்சூழல் ஆபத்தான ஓர் எதிர்காலத்தை உருவாக்குகிற ஒரு பயணமாகவே இருக்கும். ஆனால், ஆபத்தாக முடியாது. சாதி என்கிற கருத்தாக்கம் மைய விவாதத்திற்கு வந்திருக்கிறது. இது மேலும் மேலும் உரையாடப்படும், இந்த உரையாடல் தரவுகளின் அடிப்படையிலும், கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் நிகழும்போது, உண்மையின் பக்கம் அதிகம்பேர் நகரும்போது இன்னொரு பக்கம் வலுவிழக்கும். அதுவும் இந்த உண்மைகள் இருதரப்பிலும் அல்லாத அரசாங்கத்திடமிருந்தே வரும்போது அது நாம் அனைவரும் கவனிக்க வேண்டியதும் பொருட்படுத்தத்தக்கதுமாய் மாறுகிறது. அப்படியோர் உண்மையைத்தான் 'இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்' (Social Awareness Society for Youths) என்கிற மனித உரிமை இயக்க தலைவர் பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திடம் பெற்றிருக்கிறார்.

தமிழகத்தில் சாதி ரீதியான வன்கொடுமைகள் இன்னும் நடக்கிறதெனில் எத்தனை கிராமங்களில் நடக்கிறது? அவை எந்தெந்த பகுதிகள்? எந்த மாவட்டத்தில் அதிக சாதியத் தீண்டாமை இருக்கிறது? போன்ற தகவல்களை வேண்டிக் கேட்டிருந்தனர்.

தமிழகத்தில் தற்போது 500 கிராமங்களில் சாதியத் தீண்டாமை நடைமுறையில் இருப்பதோடு, அந்தக் கிராமங்களையும் அவை அமைந்துள்ள மாவட்டங்களையும் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறது ஆர்.டி.ஐ. தகவல்.

சாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை? - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட்

இதுகுறித்து பாண்டியனிடம் பேசினோம். ``தமிழகத்தில் சாதித் தீண்டாமை குறித்த கள ஆய்வில் கடந்த 21 வருடங்களாக எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. வெவ்வேறு சாதியினரால் நிகழ்த்தப்படும் இந்தத் தீண்டாமை, குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது மட்டுமே பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டியது. ஆம். தலித் மக்கள் மீதுதான் சாதியை முன்வைத்து இந்தத் தீண்டாமை நிகழ்த்தப்படுகிறது. அந்தந்த கிராமங்களில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை வைத்துக் கொடுக்கப்பட்ட கணக்குகள் மட்டுமே ஐந்நூறு கிராமங்கள். ஆனால், தமிழகத்தில் குறைந்தது பதினைந்தாயிரம் கிராமங்களிலாவது சாதித் தீண்டாமை இருக்கிறது என்பதுதான் கசக்கும் உண்மை.

சாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை? - ஆர்.டி.ஐ. ரிப்போர்ட்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே வன்கொடுமைச் சட்டத்திற்கு மட்டும்தான் வழக்குப்பதிவு செய்ததிலிருந்து 120 நாள்களுக்குள் தீர்ப்பு சொல்ல வேண்டுமென்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, அரசாங்கம் இந்த ஐந்நூறு கிராமங்களிலாவது சாதித் தீண்டாமை இருக்கிறதென்று ஒப்புக் கொண்டார்களே. அங்கேனும் இனி சாதித் தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடக்காத வண்ணம் அவர்கள் கண்காணிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றங்களை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டுமெனச் சட்டம் இருக்கிறது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. சாதித் தீண்டாமைக்கு எதிராக அரசாங்கம் தீவிரமாகக் களமிறங்க வேண்டும். அதற்கு இந்தத் தகவல்கள், அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்" என்றார்.

Vikatan