Published:Updated:

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?

"என்னதான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டாலும், இதுவரை ராசிபுரம் போலீஸ் எதுவரை கொண்டுபோயிருக்கிறார்களோ, அதுவரைதான் சி.பி.சி.ஐ.டி-யும் கொண்டுசெல்லும். பெரிதாகக் கொண்டுசெல்ல நிச்சயம் வாய்ப்பில்லை."

குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வெளியான ‘வாட்ஸ்-அப்’ உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ வைரலாக, இதனைத் தொடர்ந்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராசிபுரத்தைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு, தற்போது விசாரணை வளையத்தில் உள்ளனர். தனியார் கருத்தரிப்பு மைய செவிலியரான பர்வீன், கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டைகளைப் பெற்றுத்தரும் பொறுப்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பில்லாத தம்பதிகளை, வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளார். நாமக்கல், திருச்சி, மதுரை எனப் பல மாவட்டங்களில் 4 குழந்தைகளை விற்றதாக பர்வீன் கூறியுள்ளார். மேலும், பலரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர், காவல் துறையினர். அமுதா மற்றும் அவருடைய கணவர் ரவிச்சந்திரனின் வங்கிக்கணக்கை போலீஸார் ஆய்வுசெய்தனர். இதில் அவர்கள் பணப் பரிமாற்றம், அவர்களுடன் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் எனப் பெரிய பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், ஈரோடு எனப் பல மாவட்டங்களிலிருந்து பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?

பல குழந்தைகளுக்குப் போலியான பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை அமுதா வாங்கிக் கொடுத்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில், இதுகுறித்து மாவட்டச் சுகாதாரத் துறை விசாரணை நடத்திவருகிறது. இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராசிபுரத்தில் மட்டும் 4,500 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் குறித்துச் சரிபார்ப்பும் நடந்துவருகிறது. சி.பி.சி.ஐ.டி. சார்பில் இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரிகளாகச் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சாரதா, பிருந்தா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: சூடுபிடிக்காததற்குக் காரணம், அமைச்சரின் தலையீடா?

இந்நிலையில், இதுபற்றிப் பேசிய வழக்கறிஞரும்,சமூக ஆர்வலருமான நல்வினை விஸ்வராஜ், “கடந்த 10 வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஏழைக் குழந்தைகளைக் குறிவைத்தே, 'குழந்தை விற்பனை' தொழில் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் சில செவிலியர்கள் குழந்தை மற்றும் பெற்றோர்கள் விவரங்களை புரோக்கர்களுக்குச் சொல்ல, அவர்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில், அக்குழந்தையின் பெற்றோர்களைக் கவனித்து அவர்களின் தேவை என்ன என அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு காயை நகர்த்தி தங்களின் காரியத்தை முடித்துக்கொள்வார்கள்.

சில தனியார் மருத்துவமனைகளும் சட்டத்துக்குப் புறம்பான இந்தச் செயலினைச் செய்கிறார்கள். ஒரு பிறப்புச் சான்றிதழுக்குக் கையெழுத்துப்போட, இருபதாயிரம் ரூபாய் முதல் வாங்குகிறார்கள். கொல்லிமலை போன்ற மலைக்கிராமங்களில் உள்ளவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, குழந்தையை வாங்கி விற்பனை செய்துவருகின்றனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாகத் தமிழகம் முழுக்க இன்னும் 74-க்கும் மேற்பட்ட குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவர்களையும் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் குழு ஒன்று அமைத்து, இதுகுறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “இவர்கள் அனைவரின் நெட்வொர்க் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை, நாமக்கல், பெங்களூரு என எங்கும் பரவியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொழிலில் கொடிகட்டிப் பறந்துள்ளனர். அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் தமிழகச் சமூக நலவாழ்வுத் துறை அமைச்சர் சரோஜாவுக்கு நெருங்கிய உறவினர்கள் ஆவர். என்னதான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டாலும், இதுவரை ராசிபுரம் போலீஸ் எதுவரை கொண்டுபோயிருக்கிறார்களோ, அதுவரைதான் சி.பி.சி.ஐ.டி-யும் கொண்டுசெல்லும். பெரிதாகக் கொண்டுசெல்ல நிச்சயம் வாய்ப்பில்லை. அரசியல் தலையீடு மற்றும் அதிகார தலையீடு இருப்பதால் இவ்வழக்கு மூட்டைகட்டப்பட்டுள்ளது” என்கின்றனர்.

அமுதவள்ளி உள்ளிட்ட சிலரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி-யினர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்.

அரசியல் தலையீடும் அதிகார தலையீடும் இருந்தால் எல்லோருக்கும் எல்லாம் சாத்தியமே!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு