Published:Updated:

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்
`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

"ராஜ்ய சபா தேர்தலில் கனிமொழியை ஆதரிப்பது என்பது ஹைதர் அலி உட்பட நிர்வாகக் குழுவினர் சேர்ந்து எடுத்த முடிவு. கனிமொழிக்கு பண உதவியின் அடிப்படையில் ஆதரவு கொடுத்திருந்தால், அடுத்து வந்த ஏற்காடு இடைத்தேர்தலில் நாங்கள் தி.மு.க-வைத்தான் ஆதரித்திருக்க வேண்டும்."

ம.ம.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அரசியல் முடிவுகள், பண விவகாரம், சதி வேலைகள் எனப் 18 பக்கங்களுக்குக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் ஹைதர். `கனிமொழிக்குப் பண உதவியின் அடிப்படையில் ஆதரவு கொடுத்திருந்தால், அடுத்து வந்த ஏற்காடு இடைத்தேர்தலில் நாங்கள் தி.மு.க-வைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். நாங்கள் அப்படிச் செய்யவில்லையே?' என ஹைதருக்கு எதிராகப் பொங்குகின்றனர் த.மு.மு.க மூத்த நிர்வாகிகள். 

ஹைதர் அலியிடம் பேசினோம். 

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

ஜவாஹிருல்லாவோடு `திடீர்' மோதல் ஏன்? 

``இது தத்துவார்த்தரீதியான முரண்பாடுதான். மோடி செய்தால் அது பாசிசம்; ஜவாஹிருல்லா செய்தால் அது பாசிசம் இல்லை எனக் கூறிவிட முடியுமா? அமைப்புக்குள் யார் செய்தாலும் தவறு தவறுதான். தூய்மை வேண்டும் என்றால் அது அனைத்து நிலைகளிலும் இருக்க வேண்டும். நல்லது என நாம் நினைப்பதைச் சொல்வதால் வருகிற பிரச்னைகள்தான் இது. இயக்கத்தின் ஆளுமையைக் காப்பாற்றக் கூடியவராக அவர் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்". 

த.மு.மு.க-வில் இருந்து பிரிந்து தனி அமைப்பு ஒன்றை நீங்கள் உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்களே? 

``நிச்சயமாக இல்லை. இந்த இயக்கத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். சமூகப் பார்வையில்லாமல் தேர்தல் அரசியல் பக்கம் இவர்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். தேர்தலில் பங்கு வகிப்பது என்பது ஒரு சிறுபான்மை அமைப்புக்கு அவசியமானதுதான். அதேநேரம், ஒரு எம்.எல்.ஏ, 2 எம்.எல்.ஏ என வாங்கிக் கொள்வதால் பெரிதாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாது. இதை வேண்டாம் என நான் சொல்லவில்லை. அது ஒருபுறம் இருந்தாலும் சமூக இயக்கத்தின் பணி என்பது இளைஞர்களை நல்வழிப்படுத்தி, தீவிரவாதப் பாதைக்கு அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து பயிற்சியளிப்பதுதான். அதுதான் மிக முக்கியமானது. இதனைச் செயல்படுத்தும் முனைப்பில் மாநிலத் தலைவர் இல்லை. சொல்லப் போனால், அவருடைய செயல்பாடுகள் சரியானதாக இல்லை. நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், `எப்படி லஞ்சம் வாங்குவது?' என்பது குறித்து ஒருவர் பேசுகிறார். அவர் மீது இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை". 

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

நீங்கள் எழுதிய 18 பக்க விளக்க கடிதத்தில், `கனிமொழிக்கு ஆதரவு கொடுப்பதற்காக 6 கோடி ரூபாய் பெற்றார்கள்' என அ.தி.மு.க தரப்பில் கூறியதாகக் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தீர்களே? 

``ஆமாம். தவறு நடந்திருந்தால் அது தவறு என ஏற்றுக் கொள்ளாமல் ஆட்களைத் தயார் செய்து, `அப்படியெல்லாம் நடக்கவில்லை' எனக் கூறத்தான் இவர்கள் முயற்சி செய்கிறார்கள். அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. மனிதன் தவறு செய்யக் கூடியவன்தான். அதனை ஏற்றுக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் செய்யவே இல்லை என்பது எந்த வகையில் நியாயம்? இவர்கள் தவறு செய்யும்போது அதனை நான் அனுமதிப்பதில்லை. ஜவாஹிருல்லாவை ஒரு மாஃபியா கும்பல் இயக்கிக் கொண்டிருக்கிறது. அதை நான் தட்டிக் கேட்கிறேன். தாம்பரம் பொதுக்குழுவில் அமைப்பின் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது சில விஷயங்களைக் கூறினேன். `இந்த அமைப்புத் தவறாகப் போகும்போது, நான் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன். தட்டிக் கேட்பேன்' என்றேன். இப்போது என்னைச் சந்திக்க வருகிறவர்கள், `ஏதேதோ நடக்கிறது. நீங்கள் எதையாவது செய்யுங்கள்' என வேதனையோடு கூறுகின்றனர். த.மு.மு.க உட்கட்சித் தேர்தலின்போது பல மாவட்டங்களில் தேர்தலே நடத்தாமல் செய்வதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார்கள். இவர்களுக்கு வேண்டியவர்களைப் பதவிக்குக் கொண்டு வரும் வேலைகளும் நடந்தன. அப்படித் தேர்தலே நடத்தப்படாத மாவட்டங்களில் ராமநாதபுரமும் ஒன்று. இப்படிப்பட்ட செயல்களை எப்படி அனுமதிக்க முடியும்?" 

மீண்டும் உங்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? 

``யாருக்கும் தெரியாமல் கூட்டத்தை நடத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். 5-ம் தேதி இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தைக் கன்னியாகுமரி மாவட்டம் கூட்டியிருக்கிறது. `அந்தக் கூட்டத்தை ரத்து செய்யுங்கள்' என்றார். `இல்லை, கூட்டத்தை ரத்து செய்ய முடியாது' என அம்மாவட்ட நிர்வாகிகள் கூறிவிட்டனர். இந்தக் கூட்டம் நடப்பது தலைமை நிர்வாகிகளுக்குத் தெரியும். பிறகு எப்படி ரகசியக் கூட்டம் எனச் சொல்ல முடியும்? இந்த இயக்கத்தை சீர்படுத்தி சுத்திகரிப்பு செய்வதுதான் என்னுடைய நோக்கம். அரசியல் ரீதியாக அவர்கள் செல்லட்டும். நான் போகத் தயாராக இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார். 

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

ஹைதர் அலியின் குற்றச்சாட்டுகள் குறித்து த.மு.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஹாஜாகனியிடம் பேசினோம். ``பேராசிரியரின் செயல்பாட்டை பாசிசம் என விமர்சிக்கிறார் ஹைதர் அலி. இது மிகவும் தவறானது. தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவுக்கு எதிராகச் செயல்படுவதுதான் பாசிசம். தான் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பதுதான் பாசிசம். உதாரணத்துக்கு சிலர் மீது நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்கிறது நிர்வாகக் குழு. அவர் எழுதிய 18 பக்கக் கடிதமும் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் அவர் தெரிவித்த ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் பொய்யானது, அவதூறானது என நிரூபிக்கப்பட்டுவிட்டது. தலைமை நிர்வாகக் குழுவுக்கும் ஹைதர் அலிக்கும் இடையில் தான் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர் ஜவாஹிருல்லாவோடு மோதல் என்பதே தவறானது. கனிமொழிக்கு ஆதரவு கொடுத்தது பற்றி வேலூரில் நடந்த கூட்டத்தில் எ.வ.வேலுவும் ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் துரைமுருகனும் தெளிவாக விளக்கிவிட்டனர். `ஒரு தேநீர்கூட அருந்தாமல் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கனிமொழிக்கு ஆதரவு கொடுத்தார்கள்' என இருவரும் தெரிவித்தனர். இவ்வளவு காலம் கழித்து அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது ஆட்சேபனைக்குரியது" எனக் கொதித்தவர், 

`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்!' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்

`` கனிமொழிக்குப் பண உதவியின் அடிப்படையில் ஆதரவு கொடுத்திருந்தால், அடுத்து வந்த ஏற்காடு இடைத்தேர்தலில் நாங்கள் தி.மு.க-வைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். நாங்கள் அப்படிச் செய்யவில்லையே... விலை போயிருந்தால் எப்படி தி.மு.க-வை எதிர்த்திருக்க முடியும்? அதேநேரம், கனிமொழிக்கு ஆதரவு கொடுத்ததற்காக, ` வரக் கூடிய தேர்தலில் எங்களுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தோம். அதன் அடிப்படையில் 2014 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது வேட்பாளராகக் களம் இறங்கியவர் ஹைதர் அலி. அவர் 2 முறை தேர்தலில் நின்றார். தலைமை நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளுக்கு முரண்பாடாகச் செயல்பட்டதால்தான் பிரச்னை ஏற்பட்டது. இதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் கொடுத்த விளக்கம் பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. எதாவது குறைகள் இருந்தால் அதை அமைப்பில் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வர வேண்டும். அதைப் பொதுத்தளத்தில் விவாதிப்பது தவறான செயல். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சரியான பாதையைக் காட்டும் பணியை முதன்மைப் பணியாகச் செய்து வருகிறது த.மு.மு.க. கோடை கால பயிற்சி, அரசியல் பயிற்சி வகுப்பு, மாணவர் அரங்கம் என நாங்கள் நடத்திய முகாம்களுக்கு ஹைதர் அலி வரவில்லை.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அமைப்பின் பணிகளில் ஹைதர் அலி இல்லை. அந்த 6 ஆண்டுகளில் தனிப்பட்ட ரியல் எஸ்டேட் பணிகளில் தீவிரமாக இருந்தார். ஒக்கி புயல், வெள்ளப் பாதிப்பு, கஜா புயல் என அனைத்திலும் த.மு.மு.க சிறப்பாகச் செயல்பட்டது. பிற உயிர்களுக்கு உதவி செய்வதை இறைக் கடமையாக நினைக்கிறோம். தற்போது அமைப்பின் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதை திசைதிருப்பும் செயலாகத்தான் பார்க்கிறோம்" என்றார் நிதானமாக. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு