Published:Updated:

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தியை மோடி இழிவுபடுத்தியது சரியா?

தேர்தல் பிரசாரங்களில் தனிநபர் இழிதாக்குதல்கள் இருக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஆனால், எந்த ஒரு அரசியல் கட்சியுமே அந்தத் தேர்தல் விதியைப் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்துப் பேசி பிரதமர் மோடியே அந்த விதியை மீறியிருக்கிறார்.

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தியை மோடி இழிவுபடுத்தியது சரியா?
வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தியை மோடி இழிவுபடுத்தியது சரியா?

``நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர். எனக்குச் சிறுநீரகப் பிரச்னை இருப்பது ராஜீவுக்கு (மறைந்த முன்னாள் பிரதமர்) எப்படியோ தெரிந்திருந்தது. சிறுநீரகப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அமெரிக்காவில்தான் பெறமுடியும் என்கிற சூழல். அதனால், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துக்குச் சென்ற உறுப்பினர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அங்கே, அமெரிக்காவில் தங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில், 'எனக்கான சிகிச்சையை நான் பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர் கூறியிருந்தார். தன் உதவியாளர்களிடமும் எனக்காக உதவியாக இருக்கும்படி கூறியிருந்தார். நான் தற்போது உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்தான் காரணம்” - 1991-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்ட நிலையில், அவர் குறித்த தனது நினைவலைகளைத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பகிர்ந்திருந்த மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இப்படியாகத் தெரிவித்திருந்தார். 

"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை, நம்பர் ஒன் ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது" என்று அண்மையில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதற்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பிலிருந்தும் வலுத்த எதிர்ப்புகளைப் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொன்னதை நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது. மோடியின் இந்தத் தாக்குதலுக்குப் பதில் கூறியிருக்கும் ராகுல் காந்தி, “உங்களது கர்மா உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது, மோடி அவர்களே. உங்களைப் பற்றிய உங்கள் உள்ளார்ந்த நினைப்புகளை என் தந்தையாக உருவகப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது நிச்சயம் உங்களைப் பாதுகாக்காது” என்று கூறியிருக்கிறார்.

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தியை மோடி இழிவுபடுத்தியது சரியா?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள கருத்தில், `எக்ஸ்பைரி பிரதமர் அப்படித்தான் பேசுவார்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் புராண வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தேவதத் பட்நாயக் கூறுகையில், “ராமன்கூட ராவணனைக் கொல்லத்தான் செய்தாரே ஒழிய, அவரை இழிவுபடுத்தவில்லை. ஆனால், ராமரின் பக்தர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் வேறுவிதமாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். சிரோமணி அகாலிதளம் கட்சி மட்டும் மோடியின் கருத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறது. அந்தக் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி கூறியதில் தவறில்லை. ராஜீவ் காந்தி, நம்பர் ஒன் ஊழல்வாதிதான். அவர் ஊழல்வாதி மட்டுமல்ல... நாட்டின் மிகப் பெரும் இனப்படுகொலையாளரும்கூட. 1984 சீக்கியக் கலகத்துக்குக் காரணம், அவர்தான். தன் தந்தையைப் பற்றி மோடி கூறியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தியும் அவரது கட்சியும் இன்றுவரை சீக்கிய இனப்படுகொலை தொடர்பாக வாய்திறந்து விளக்கம் அளிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.          

தேர்தல் பிரசாரங்களில் தனிநபர் இழிதாக்குதல்கள் இருக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஆனால், எந்த ஒரு அரசியல் கட்சியுமே அந்தத் தேர்தல் விதியைப் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்துப் பேசி பிரதமர் மோடியே அந்த விதியை மீறியிருக்கிறார். யார் விதியை மீறினாலும் நாட்டின் பிரதமர் விதியை மீறலாமா என்பதுதான் ஜனநாயகவாதிகளின் கேள்வி. இந்த நிலையில்தான் தேர்தல் குறித்தான ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக மோடி மற்றும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா மீது பதிவு செய்யப்பட்ட ஐந்து புகார்களிலிருந்து அவருக்கு விலக்கு அளித்திருக்கிறது, மத்திய தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சியினர் என்பதால்தான் அலட்சியமாய் இருக்கிறதோ, தேர்தல் ஆணையம்? 

Vikatan