

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரான்சிஸ் கிருபா, இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் எழுதிய மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை.
பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார். பிரான்சிஸ் கிருபா சில மாதங்களாக கோயம்பேடு சந்தைப் பகுதியிலேயே தங்கியிருந்ததாகவும் தகவல்.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸாரிடம் பேசியபோது, ``இறந்து கிடந்தவருக்கும், கிருபாவுக்கும் முன்பின் தெரியாது. அப்படியிருக்க, ஏன் அவரை இவர் கொல்ல வேண்டும் என்கிற கோணத்தில் விசாரித்து வந்தோம். இன்றுதான் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் தகவல் எங்களுக்கு வந்தது. இறந்து கிடந்தவர் இயற்கையாகத்தான் மரணம் அடைந்திருக்கிறார். அவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்யவில்லை என்று அதில் உள்ளது. இன்று கிருபாவிடம் நாங்கள் பேசியபோது, `அவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியுள்ளதாகச் சொன்னார். ஏதோ ஷூட்டிங் நடப்பதாகத் தகவல் கேள்விப்பட்டு அங்கே போனதாகச் சொல்கிறார். இருந்தாலும், சட்ட சம்பிரதாயங்களை நாங்கள் முறைப்படி முடிக்கவேண்டியிருக்கிறது. அரசு தரப்பு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ஆலோசனையைப் பெற்று அதன்படி நடவடிக்கை எடுப்போம்' '' என்கிறார்கள்.
இவர்கள் சொல்லுவதைப் பார்க்கும்போது, கிருபா கொலையாளி அல்ல என்பது உறுதியாகிறது. எனவே, இன்றோ அல்லது நாளையோ கோயம்பேடு காவல்நிலையத்தில் இருந்து அவர் விடுவிக்கப்படலாம்.