Published:Updated:

உச்ச நீதிமன்ற உத்தரவு... அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவா?

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அ.தி.மு.க-வுக்கு சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவா?
உச்ச நீதிமன்ற உத்தரவு... அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவா?

ட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு ரத்தினசபாபதி உள்ளிட்ட மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் அளித்த நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதையடுத்து, விளக்கம் கேட்டு மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை தி.மு.க கொடுத்துள்ளது. 

உச்ச நீதிமன்ற உத்தரவு... அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவா?

இந்தச் சூழலில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சபாநாயகர் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடுநிலையாகச் செயல்படவில்லை என்று, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை தி.மு.க கொடுத்தது. எனவே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதற்குச் சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. எனவே, எங்களுக்கு எதிராகச் சபாநாயகர் நடவடிக்கையும் எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர், ‘ஏற்கெனவே அருணாசலப் பிரதேசம் தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலோ, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலோ, எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அந்த சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது என்று அந்த அமர்வு உத்தரவிட்டது’ என்று கபில்சிபல் வாதாடினார். 

சபாநாயகர் தனபால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, எம்.எல்.ஏ-க்களின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். 

உச்ச நீதிமன்ற உத்தரவு... அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவா?

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும், சபாநாயகர் மற்றும் தமிழக அரசுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை, இனி நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. வருகிற வெள்ளிக்கிழமையுடன் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை காலம் தொடங்குகிறது. அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சபாநாயகர் முறையிட்டால், அது குறித்து தலைமை நீதிபதி முடிவுசெய்வார். 

‘‘நீதி வென்றுள்ளது... தர்மம் வென்றுள்ளது’’ என்று உற்சாகமாகப் பேட்டியளித்துள்ளார் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி.
‘‘ஆதாரங்களின் அடிப்படையிலேயே மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்’’ என்று விளக்கம் அளிக்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

அமைச்சர் ஜெயக்குமார், ‘‘உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது வெறும் இடைக்கால தடைதான். அரசைக் கவிழ்ப்பதற்கு தி.மு.க-வும் தினகரனும் கூட்டாகச் சதிசெய்துள்ளனர். தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் கைகோத்திருப்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அ.தி.மு.க-வுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. நடைபெறவிருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் தேர்தல் பிரசாரத்தில் இது பெரிதாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Vikatan