Published:Updated:

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!
வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

சமீபத்தில் தன் 26ம் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது ம.தி.மு.க. கட்சி. கட்சிக்குள் இளைஞர்கள் இல்லாதது, சரியும் வாக்கு வங்கி ஆகியவை அக்கட்சிக்கு வயதான தோற்றத்தை உருவாக்கியுள்ளன. அதை களைய வேண்டிய பொறுப்பு வைகோவுக்கு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 15, 2014 பூந்தமல்லி ம.தி.மு.க. மாநாடு. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்ட முதல் கூட்டம் அது. வைகோவின் சொல்வீச்சைக் கேட்கத் தமிழகமெங்கும் இருந்து தொண்டர்கள் திரண்டிருந்தனர். இருண்ட வானத்தைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார், வைகோ. இடிமுழக்கமாகத் தெறித்த வார்த்தைகளில், வானமும் அதிர்ந்து மழையைப் பொழிந்தது. ஒன்றரை மணிநேரம் நீடித்த வைகோவின் உரையை, கொட்டும் மழையிலும் மயிர்க்கூச்செறிய கேட்டுக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில்கூட தொண்டர்கள் எழுந்துசெல்லவில்லை. அவர்தான் வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மே 6-ம் தேதி தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. எந்தப் பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தாயகத்தில் இனிப்புகளை வழங்கி, கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார் வைகோ. கால் நூற்றாண்டைத் தாண்டிய இக்கட்சியை, வைகோ என்னும் அடையாளத்தைத் தாண்டி காண முடியாது. எத்தனையோ போராட்டங்கள், அடக்குமுறைகள், தோல்விகள், வெற்றிகளை எதிர்கொண்டாலும், அவை அத்தனையும் வைகோ என்னும் ஆளுமைக்குள் அடங்கிவிடுகின்றன. மல்லை சத்யா, ஈரோடு கணேசமூர்த்தி போன்ற ஒருசில இரண்டாம்கட்ட தலைவர்கள்தான் வெகுஜன மக்களுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். ம.தி.மு.க-வின் வரலாற்றை, வைகோவின் வரலாற்றிலிருந்துதான் கட்டமைத்தாக வேண்டும்.

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

1964-ல், கோகலே மன்றத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில் மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா முன்னிலையில் பேசி, தன் அரசியல் வாழ்வில் அடியெடுத்துவைத்தார் வைகோ. அதன்பின், கலிங்கப்பட்டி கிளைக் கழக அடிப்படைப் பொறுப்பிலிருந்து திருநெல்வேலி மாவட்டச் செயற்குழு, மாநில தி.மு.க மாணவர் அணி இணைச் செயலாளர், தேர்தல் பணிச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என தி.மு.க-வில் 1993 வரை கோலோச்சினார். 1970-களிலிருந்து கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவர், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர் வைகோ. அப்போதெல்லாம் வைகோவை, `சேர்மன்’ என கலிங்கப்பட்டி சுற்றுவட்டார மக்கள் அழைப்பது வழக்கம்.

1990-களின் தொடக்கம் தி.மு.க-வில் சரிவைத் தந்திருந்தது. வைகோவின் இலங்கைப் பயணம், ஸ்டாலினின் (தி.மு.க. தலைவர்) வளர்ச்சி கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. 1991 நவம்பர் 26-ம் தேதி, தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி வைகோவை கட்சியிலிருந்து நீக்க, மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதி முடிவு செய்திருந்தார். செயற்குழுவில் வைகோ தந்த விளக்கத்தாலும், 90 சதவிகித செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததாலும் கருணாநிதியால் வைகோவை நீக்க முடியவில்லை. ஆனால், அவரது எண்ணம் 1993-ல் ஈடேறியது. விடுதலைப்புலிகளோடு சேர்ந்து தனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டுவதாகக் காரணம் காட்டி வைகோவைக் கட்சியிலிருந்து நீக்கினார், கருணாநிதி.

வைகோ நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் என ஐந்து தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து மாண்டனர். இவர்களின் படங்கள், இன்றும் வைகோவின் சென்னை இல்ல வரவேற்பறையில் இருக்கும். தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களோடு தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டார், வைகோ. மே 6, 1994-ல் ம.தி.மு.க. உதயமானது.

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

தி.நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய முதல் ம.தி.மு.க. பொதுக்குழு, கட்சியின் கொள்கை, சட்டதிட்டங்களை வரையறுத்தது. கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994 ஜூலை 27-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ. மொத்தம் 50 நாள்களில் 1,600 கி.மீ. நடந்திருந்தார். திண்டிவனத்திலிருந்து ஒலக்கூர் செல்லும் சாலையில் வைகோவின் நடைப்பயணம் வந்தபோது, அந்த வழியாக வந்த நடிகை காந்திமதி வைகோவைச் சந்தித்து, ``நான் உங்களை இந்த நடைப்பயணத்தில் 20-வது தடவையாகச் சந்தித்து வாழ்த்து சொல்கிறேன்” என்றாராம். அந்த அளவுக்கு நெடிய பயணமாக அது அமைந்திருந்தது.

1996 சட்டமன்றத் தேர்தலில் 177 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க., தி.மு.க. கூட்டணிக்கு ரஜினியின் ஆதரவு, த.மா.கா. உதயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. விளாத்திக்குளம், கோயில்பட்டியில் மட்டும் இரண்டாமிடம் பெற்றது. வெறும் 634 வாக்குகளில் விளாத்திக்குளத்தில் வைகோ தோல்வியடைந்தார். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., அ.தி.மு.க-வுடன் கூட்டணி, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., தி.மு.க-வுடன் கூட்டணி என ம.தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது. 1999 தேர்தலில் வெற்றிபெற்று சிவகாசி தொகுதி எம்.பி-யாக நாடாளுமன்றம் சென்றார் வைகோ. இந்த நிலையில், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, தற்போது தி.மு.க. வழங்கப்போகும் மாநிலங்களவை எம்.பி. பதவி மூலமாக, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு மீண்டும் வைகோவுக்கு வரவிருக்கிறது.

கட்சி தொடங்கிய இந்த 26 வருடங்களில் வைகோ எடுத்த கூட்டணி முடிவுகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5.8 சதவிகித வாக்குகளைப் பெற்ற ம.தி.மு.க., பின்னாளில் சரிவைச் சந்தித்தது. 2001 சட்டமன்றத் தேர்தலில் 211 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க., 205 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்ததோடு, 4.7 சதவிகித வாக்குகளையே பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால், 2011 சட்டமன்றத் தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிக்கவும் செய்தது. 2016 தேர்தலில், மக்கள்நலக் கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு சதவிகித வாக்குகளைக்கூட எட்டவில்லை.

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கையோ, மாற்றுக் கட்சியிலிருந்து ம.தி.மு.க-வில் இணைவதோ சமீபகாலங்களில் அக்கட்சியில் நடந்ததில்லை. மூன்றரை கோடி இளம் வாக்காளர்கள் கொண்ட தமிழகத்தில், அவர்களுக்கேற்றவாறு ம.தி.மு.க., தன்னை ‘அப்டேட்’ செய்யாததும், அக்கட்சியின் வாக்குச் சதவிகிதம் சரிவைச் சந்திக்க ஒரு காரணம். தேர்தல் அரசியலில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும், மக்களுக்கான போராட்டங்களில் என்றுமே வைகோ சறுக்கியதில்லை. தனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், அவர் என்ன செய்தார் என்பதே இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தநல்லூர் ம.தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சாத்தனூர் சுரேஷ் கூறுகையில், ``மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கவைத்தவர் வைகோ. 2002-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. தமிழக அரசியல் கட்சிகளெல்லாம் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், பிரதமர் வாஜ்பாயை நேரடியாகச் சந்தித்து, தனியார்மயமாக்கலைத் தடுத்தார். இரவு 9 மணியைத் தாண்டிய நிலையிலும், பிரதமர் இல்லத்திலிருந்து அதை அதிகாரபூர்வமாக்க அறிவிக்கவும் வைத்தார்.

வைகோவின் `ஒன் மேன் ஷோ'வால் ம.தி.மு.க. தேய்கிறதா... வளர்கிறதா? ஓர் அலசல்!

தான் எம்.பி-யாக இருந்தபோது, ரயில்களில் டி.டி.ஆர்-களுக்கு எனத் தனி இருக்கை வசதி ஏற்படுத்தித் தந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்துகொள்ளச் சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தவர், வைகோ. 2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததன் பின்னணியில் வைகோவின் அழுத்தம் உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை, உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானியை வைத்து வாதாடி ஆயுள் தண்டனையாகக் குறைக்கவைத்தவர். இதற்காக, இவ்வழக்குக்கு கட்சிப்பணம் 75 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது.

மறைந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் படத்தை, நாடாளுமன்றத்தில் திறக்கவைத்ததில் தொடங்கி, தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றதுவரை வைகோவின் நடவடிக்கைகள் ஏராளம். தூத்துக்குடி ஸ்டெர்லைட், தேனி நியூட்ரினோ,  டெல்டா மீத்தேன் தொடர்பான போராட்டங்களில் வைகோவின் பங்களிப்பு மிக அதிகம். இன்று, தமிழகத்தில் பொது சுடுகாடு இருக்கும் ஒரே ஊர் கலிங்கப்பட்டிதான். அது, வைகோவால்தான் சாத்தியமானது” என்றார்.

``இன்றும் வைகோவுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உண்டு. அவரை, ஆதர்சன நாயகனாகத் தூக்கிக் கொண்டாடும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் வயதாகிக்கொண்டே இருக்கிறது. வைகோ இல்லாத ம.தி.மு.க-வை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. 1980-களில் இளைஞர்களின் நட்சத்திர நாயகனாகத் திகழ்ந்த வைகோவுக்கு இன்று போட்டி அதிகமாகிவிட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனப் பலரும் இளைஞர்களைக் குறிவைத்து களத்தில் இருக்கிறார்கள். இரண்டாம்கட்ட தலைவர்கள் எழுச்சியோடு இல்லாததும், இளைஞர்களிடம் ம.தி.மு.க-வுக்குப் பெரிய வரவேற்பு இல்லாததும் அக்கட்சிக்கு ஆபத்து. கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சவில்லை என்றால், காலப்போக்கில் கரைந்துவிடும்" என்கின்றனர், அவரது தொண்டர்கள்.

20 வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற அவைகளில் கால்பதிக்கப் போகும் வைகோ, தமிழக இளைஞர்களின் நாடித்துடிப்பையும் கரம்பிடிக்க வேண்டும். 1994-க்குப் பிறகு அவர் எதிர்கொள்ளும் இரண்டாவது யுத்தம் இது. எத்தனையோ போராட்டங்களைத் தூசியாகத் தட்டிவிட்டவர், கட்சியையும் கரைசேர்ப்பார் எனத் தொண்டர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு