Published:Updated:

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?
ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

சற்று நேரம் அறிவாலயம் பக்கம் சென்றுவந்தாலே, இரண்டு பாகுபலி பார்த்த ‘எஃபெக்ட்’டை நம் கண் முன்னால் உடன்பிறப்புகள் நிறுத்திவிடுகிறார்கள். பதவியேற்பு விழாவுக்கான இடமும், தேதியும் குறித்துவைத்துவிட்டு, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறது அறிவாலயம்.

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரமே  இருப்பதால், ஒவ்வொரு கட்சியினரிடத்திலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. ஆளுக்கொரு நோட்டு, பேனாவும் கையுமாக எவ்வளவு சீட் வந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில், தி.மு.க-வினரின் கணக்குதான் உக்கிர ரகம். மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள சூழலில், 21 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றால் என்ன கணக்கு, எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால் என்ன கணக்கு, என ஆளுக்கு ஆள் ராமானுஜராக மாறியுள்ளனர்.

பரபரப்பின் உச்சத்தில் இருந்த தி.மு.க, இரண்டாம்கட்ட தலைவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “தி.மு.க. ஆட்சியமைக்க 21 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த ஆட்சி மீதான கோபம் மக்களிடம் கடுமையாக உள்ளது. எங்களுக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில், மே 23-ம் தேதியே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலைந்துவிடும். உடனடியாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுகூடி, தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக ஸ்டாலினைத் தேர்ந்தெடுப்பர். கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். மே 27-ம் தேதி, தி.மு.க அரசு அரியணை ஏறும். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது கலைவாணர் அரங்கத்தைக்கூட தேர்வு செய்துவிட்டோம்” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

“ஒருவேளை போதிய எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால் என்ன வழி” என்றோம். “ஏற்கெனவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிலுவையில் இருக்கிறது. அது விவாதத்துக்கு ஏற்கப்படும் வரையில், வேறு அலுவல் பணிகளை சபாநாயகர் பார்க்க இயலாது. சட்டமன்றம் கூடியவுடன், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும். வாக்கெடுப்பில் எங்களுக்கு சில அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் ஆதரவளிப்பார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இந்த ஆட்சி கவிழும்” என்றவரிடம், “கட்சி மாறி ஓட்டு போட்ட அந்த எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாதா?” என்றோம்.
“ஆட்சியே போன பிறகு அது பாய்ந்தால் என்ன, பாயாவிட்டால் என்ன... அதன்பிறகு அரசியல் சூழல் வேறு வடிவம் எடுத்துவிடும் என்பதால், அதுபற்றி கவலைப்பட தேவையில்லை” என்றார். கிறுகிறுக்கவைக்கும் இந்த ப்ளானில், ஒரு ட்விஸ்ட்டையும்  செருகுகிறது தி.மு.க இளைஞரணி.

“நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக  26 நாள்கள், 7200 கி.மீட்டர் தூரம் உதயநிதி ஸ்டாலின் பயணம்செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க இளைஞரணிக்குள் மாநில அளவிலான பொறுப்பு முதலில் வழங்கப்படலாம். ஆட்சி கலைந்தவுடன், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும். உதயநிதியை சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு நிறுத்த மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அப்பா வழியில் மகன் போல, ஸ்டாலின் வகித்த மேயர் பதவியை உதயநிதியும் அலங்கரிப்பார்” என்கிறார்கள்.

ஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம்! - பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு?

‘சரி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 10 தொகுதிகள் கிடைத்துவிட்டால், தி.மு.க-வினரின் திட்டமெல்லாம் ‘பனால்’ தானே...’ என்று நாம் யோசித்து முடிப்பதற்குள், நமது மைண்டு வாய்ஸை கேட்ச் செய்த ஓர் உடன்பிறப்பு, “அவங்க 22 தொகுதில ஜெயிச்சாகூட, சபாநாயகரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளனும்ல. அங்கதான் ட்விஸ்டே வச்சிருக்கோம்” என்று சிரித்துவிட்டு கிளம்பினார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, தி.மு.க அரசு பதவியேற்கப் போவதாகக் கூறிவந்தவர்கள், இப்போது ஒரு வாரத்துக்கு முன்னாலேயே பதவியேற்பு வைபவத்துக்கு நாள் குறித்துவிட்டனர். யாருக்கு ட்விஸ்ட் ஆகப்போகிறது என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு