Published:Updated:

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!
பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

ண்டு 2001. கோடை தணிந்த ஜூலை மாதத்தின் மாலை நேரம். புவனேஷ்வர் நகரில் இருக்கும் ஒடிசா தலைமைச் செயலகம் மெள்ள சோம்பல் முறிக்கிறது. கீழ்த்தளத்தில் இருக்கும் தன் அறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார், நிதி அமைச்சர் நளினிகாந்த் மொகந்தி. கனத்த கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் செய்தி நேரம் தொடங்குகிறது. முதல் செய்தியே முக்கியச் செய்தி. `ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நளினிகாந்த் மொகந்தியின் அமைச்சர் பதவி பறிப்பு’ என்று அறிவிக்கிறார் செய்தி வாசிப்பாளர். மொகந்தியின் கண்கள் இருள்கின்றன. நவீன் பட்நாயக் அமைச்சரவையில் ‘நம்பர் 2’ என்ற அந்தஸ்தில் இருந்தவர் மொகந்தி. நவீனின் நம்பிக்கைக்கு உரியவர் என்று பெயரெடுத்தவர். நவீனின் தந்தை பிஜு பட்நாயக்குக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தவர். பல ஆண்டு அரசியல் அனுபவமும் வாய்த்தவர். ஆனால், பணத்தாசை அவரை ஊழல்வாதியாக்கியது.

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

செய்தி முடிகிறது. மொகந்திக்கு மூச்சு முட்டுகிறது. நடுக்கத்துடன் நாற்காலியில் இருந்து எழுகிறார். அளவு கடந்த ஆத்திரத்துடன் மேல்தளத்தில் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு விரைகிறார். ஆனால், வாசலிலேயே தடுக்கப்படுகிறார். மொகந்தி, ‘வழிவிடுங்கள். நான் அவரைப் பார்த்தாக வேண்டும்’ என்று கூவுகிறார். பாதுகாவலர்கள்,  ‘அவர் விரும்பவில்லை’ என்று பதில் சொல்கிறார்கள். 

மொகந்தி மெதுவாகத் தணிகிறார். மனதுக்குள் காட்சிகளை ஓட்டுகிறார். பதவியில் அமர்ந்து பணம் பண்ணிய தருணங்களை நினைத்துப் பார்க்கிறார். மக்களின் கண்டனக்குரல்கள் காதை நிறைக்கின்றன. வருந்தி கண்ணீர் விடுகிறார். சன்னமான குரலில், ‘ஆம், அவரை நான் அறிவேன். தவறு செய்பவர்களை அவர் விரும்புவதுமில்லை, விடுவதுமில்லை’ என்று முனகுகிறார். தளர்ந்து படியிறங்கி அறைக்கு மீள்கிறார். இரவு கவிந்ததும், தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறுகிறார். அதற்குப் பிறகு, அவர் அங்கே வரவில்லை. 2012-ம் ஆண்டு அவர் இறக்கும்வரை, நவீன் அவரை மன்னிக்கவே இல்லை. மொகந்தி மட்டுமல்ல, அதேசமயத்தில் அதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்கள் கமலா தாஸ், பிரசந்தா நாந்தா ஆகியோரையும்கூட, நவீன் இதுவரை மன்னிக்கவில்லை.

And, That's Naveen for you!

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

தவறிழைத்தவன் தன்னவனாகவே இருந்தாலும் தயங்காமல் தண்டிக்கும் குணம் படைத்தவர் நவீன் பட்நாயக். ஒருமுறை, பத்துக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அவர் பணியிலிருந்து தூக்கியடித்தபோது, மாநிலமே மயங்கிவிழுந்தது. அவர்கள் வசமிருந்த அரசு வாகனங்களைக்கூட பறித்தார். இங்கே ஒரு புள்ளிவிவரம்... 17 ஆண்டுகளில் 44 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் நவீன் பட்நாயக். அவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு தருணங்களில் மக்களின் கண்டனங்களுக்கு ஆளானவர்கள். அவர்கள் எவரையுமே நவீன் இதுவரை மீண்டும் அழைக்கவில்லை. வேறு வேறு கட்சிகளில் அவர்கள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் இப்படியொரு துணிச்சல் வேறெந்த தலைவருக்கேனும் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

தாமோதர் ராவட் என்றொருவர், நவீன் அமைச்சரவையில் இருந்தார். ஏழுமுறை எம்.எல்.ஏ, விவசாயத்துறையின் அமைச்சர் என மிக மூத்த தலைவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும்வகையில் அவர் பேசி சர்ச்சையில் சிக்கிவிடுகிறார். நவீன், நன்றாக நேரமெடுத்து யோசிக்கிறார். ராவட்டை பதவியிலிருந்து நீக்கினால் உட்கட்சிப்பூசல் ஏற்படும் என்பதை உணர்கிறார். ஆனாலும், நீக்குகிறார். அப்போது, ‘எந்த சாதிக்கெதிராகவும், எந்த மதத்டுக்கெதிராகவும், எந்த இனக்குழுவுக்கு எதிராகவும் வருந்தத்தக்கக் கருத்துகளை உதிர்ப்பவர்களை நான் ஏற்றுக்கொள்ளேன்’ என்று அவர் விடுத்த அறிவிப்பு, அதிர்வேட்டு. ’என் அரசு எல்லோருக்குமான அரசாகவே இருக்கும். எவரையும் விலக்கிவைக்கும் அரசியல் எனக்கு உவக்காதது’ என்று ஆரம்பக்காலத்திலேயே அறிவித்திருந்தார் நவீன். அதை அப்போது நிரூபித்தார்.

அந்த தாமோதர் ராவட், கடந்த மார்ச் 14-ம் தேதி, காவிக்கட்சியில் இணைந்தார். அதேமாதம், 21-ம் தேதி ராவட்டின் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துபோகிறார். நவீனுக்குச் செய்தி கிடைக்கிறது. உடன் இருப்பவர்கள் ‘நமக்குத் துரோகம் இழைத்தவர் அவர்’ என்கிறார்கள். நவீன், ‘அதனாலென்ன?’ என்று சொல்லிவிட்டு, ராவட் வீட்டுக்கு நேராகவே சென்று ஆறுதல் சொல்லி மீண்டார். மொகந்தி மறைவின்போதும் முதல் ஆளாகப் போய் அஞ்சலி செலுத்தினார் நவீன். இதனால்தான், முன்னாள் பிஜூ ஜனதா தளக்காரர்களுக்கு நவீனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க நா எழுவதில்லை. இது ஒருவகையில் நவீனுக்கு அவர்கள் காட்டும் நன்றிக்கடன்.

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

நவீன் மர்மமானவர். தன்னிலிருந்து சிறுதுளியையும் சிந்த விடாதவர். எவருடனும் ஒட்டாதவர், எதனுடனும் ஒன்றாதவர். நவீனின் அலுவலகத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் அந்த அதிகாரி. அவருக்கு வேறோர் இடத்துக்குப் பணிமாறுதல் கிடைக்கிறது. விடைபெறுவதற்காக நவீன் அறைக்கு வருகிறார். ‘என்ன சொல்லப்போகிறார்? கட்டியணைப்பாரா, கைகுலுக்கி வாழ்த்துவாரா...’ இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் அந்த அதிகாரி அறைக்குள் நுழைகிறார். ஏதோ எழுதிக்கொண்டிருந்த நவீனைப் பார்த்து, ‘சார், நான் விடைபெறுகிறேன்’ என்கிறார். நவீன் சாதாரணமாக ‘சரி’ என்று சொல்லிவிட்டு, அடுத்தபக்கத்தைத் திருப்பி எழுத ஆரம்பிக்கிறார். சற்றுநேரம் அங்கேயே நிற்கும் அதிகாரி, வெறுத்துத் திரும்புகிறார். `வெறும் முப்பதே நொடிகளில் அந்தச் சந்திப்பு முடிந்ததாம்’ என்கிறார், நவீனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரூபன் பானர்ஜி. அவர், நவீனைப் பற்றி இப்படிச் சொல்கிறார்... எளிமையாக உடையணிவார், அதைவிடவும் எளிமையாக உணவு உண்பார். பயங்கரமாகப் புகை பிடிப்பார்; பக்குவமாக மது குடிப்பார்!’

இந்தியாவின் ஒதுக்கப்பட்ட மாநிலம் ஒடிசா! வெயில் அடித்தாலும் அங்கேதான் அதிகமாக அடிக்கும், மழை அடித்தாலும் அங்கேதான் அதிகமாக அடிக்கும். ஒரு பக்கம், பாராகர், போலிங்கர், தியோகர் போன்ற பகுதிகள் வறட்சியால் தகித்துக்கொண்டிருக்க, மறுபக்கம் பாலசோர், கட்டாக், கர்தா போன்ற பகுதிகள் வெள்ளத்தால் தவித்துக்கொண்டிருக்கும். என்ன செய்வது? அந்த மாநிலத்தின் நிலவியல் அப்படி. இதுபோக, கல்வியறிவு பரவலாகாத கிராமங்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம். அவற்றில், பல பழங்குடி கிராமங்கள். இத்தகைய மாநிலத்தில், மில்லினியம் ஆண்டின் மிரட்டும் கோடைக்காலத்தில் அரியணை ஏறி அமர்ந்தார் நவீன் பட்நாயக். அப்போதிருந்து இப்போதுவரை, நவீன் செய்தவற்றைச் சாதனைகள் என்று சுருக்கிவிட முடியாது, அவை, சாகசங்கள்!

‘பாரத் அனே நேனு’ பார்த்ததுண்டா? அது போன்றே ஆரம்பித்தது நவீனின் அரசியல் வாழ்க்கை. அமெரிக்காவில் இருக்கும் நவீன், தந்தை பிஜு பட்நாயக் இறப்புச் செய்தி அறிந்து இந்தியா வருகிறார். அதற்குப் பிறகு, அவர் அமெரிக்கா செல்லவே இல்லை. அடிப்படையில், ஆரம்பகாலத்தில் இருந்தே அரசியலுக்கு அப்பாலேயே தன்னை வைத்துக்கொண்டிருந்தவர் நவீன். இதற்கு, அவர் படித்த டேராடூன் பள்ளியில்தான் ராஜீவ்காந்தி படித்திருந்தார். நவீனுக்கு மூன்று ஆண்டுகள் சீனியர், ராஜீவ். சஞ்சய் காந்தி நவீனின் கிளாஸ்மேட் வேறு. ஆனாலும், ’நான் நிலையான மனம் கொண்டவன் அல்ல, அலைபாய்பவன். அரசியல் எனக்கு ஒத்துவராது’ என்பதையே, திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார். ஒரு மாயதருணத்தில், மாநில மக்களின் நிலையை நேரில் கண்டு நிலைகுலைந்து, அரசியலுக்கு வரும் முடிவை எடுக்கிறார். அப்போது அவருக்கு வயது 50.

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

முதல் வெற்றியே வெறித்தன வெற்றி. அதே ஆண்டு, இதுவரை இந்தியாவைத் தாக்கியதிலேயே மிகப்பெரியதும், மிகக்கொடியதுமான ஒரு புயல் ஒடிசாவைத் தாக்குகிறது. மொத்த மாநிலத்தையும் கரும்புச்சக்கையென கசக்கி தூக்கியெறிகிறது. 10,000 பேர் பலியாகிறார்கள். 1866-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்துக்குப் பிறகு, மிகக்கொடிய மனிதப் பேரழிவு என்று கணக்குச் சொல்கிறார்கள். கண்தொடும் இடமெங்கும் கண்ணீர். காதுகுவிக்கும் திசையெங்கும் அழுகுரல்கள். ஒடிசாவுக்கு அது நரக நாள்கள். `இனிமேல் நாம் மீள்வோமா?’ என்ற இனம்புரியா அச்சம் மக்களை ஆட்கொள்கிறது. நம்பிக்கை தளர்ந்து நடுவீதிகளில் அமர்ந்திருக்கிறார்கள். ‘நான் இருக்கிறேன்’ என்று, ஹெலிகாப்டர் ஏறுகிறார் முதல்வர் நவீன். அப்போது ஏறியதுதான். இப்போதுவரை இறங்கவில்லை அவர். இரண்டு ஆண்டுகளுக்குள் அவ்வளவு பெரிய பேரழிவிலிருந்து மாநிலத்தை மீட்டெடுத்து நிறுத்தினார் நவீன். அப்போது, இம்மண்ணின் மீதும் இம்மக்களின் மீதும் அளவுகடந்த நேசம் கொண்ட ஒரு தலைவன் களம் வந்திருக்கிறான். தேவனென எழுந்திருக்கிறான், தெய்வமென நின்றிருக்கிறான்’ என்று சன்னதமெழுந்து சாமியாடினர் மக்கள்.

பத்தாண்டுக்கு ஒரு புயல் வந்தாலே, நமது அரசுகள் தாக்குப்பிடிப்பதில்லை. ஆனால், ஒடிசாவில் ஆண்டுக்கு ஒரு புயல் வரும். அப்போதெல்லாம், பூரிநாதனுக்கு ஒரு பூஜையைப் போட்டுவிட்டு, களத்தில் இறங்கிவிடுவார் நவீன். ஆணைகள் பறக்கும். அதிகாரிகள் துயில் நீப்பார்கள். சில தினங்களில் மாநிலம் மீண்டெழுவதைக் கண்கூடாகவே பார்க்க முடியும். ஒடிசாவில் இருப்பதைப் போன்ற வலுவான பேரிடர் மீட்பு அமைப்பு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லையென்பதே, நவீனின் தொலைநோக்குப் பார்வைக்குச் சரியான சான்று!

இதோ இப்போதுகூட, ஒடிசாவை ஓங்கியறைந்து நிலைகுலையச் செய்திருக்கிறாள் ஃபானி.’ ஆனாலும், மக்கள் அச்சமின்றி அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். எதனால்? நவீன் நிவாஸ் வீட்டின் பால்கனியில், சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டு, எங்களுக்காகவே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு தலைவன் இருக்கிறான்’ என்று உருகுகிறான் ஓர் ஒடிய இளைஞன். `அவனுக்கென்று குடும்பமில்லை. அவனுக்கென்று உறவுகள் இல்லை. அவனுக்கு அடுத்த தலைமுறை இல்லை. அவனுக்கு நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு அவன் இருக்கிறான்’ என்று மருகுகிறாள், ஓர் ஒடிய முதுமகள்.

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

மக்களின் வேண்டுதல்கள் வீண் போகவில்லை. அரக்கப்புயல் அடித்தும், உயிரிழப்புகளை முப்பதுக்குள் நிறுத்தியிருக்கிறார் நவீன். இதனால்தான், ஐக்கிய நாடுகள் சபைவரை நவீனின் பெயர் இப்போது உச்சரிக்கப்படுகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 50 கிலோ அரிசி - 2,000 ரூபாய் உடனடி உதவித்தொகை, மிதமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 கிலோ அரிசி - 1,000 ரூபாய் உதவித்தொகை என்று, நிவாரணப் பணிகளிலும் நின்று விளையாடியிருக்கிறார். சும்மா சொல்லவில்லை. புயல் அடித்து முடிந்த ஏழு நாள்களில் புத்தெழுச்சி கொண்டெழுந்திருக்கிறது பூரிநாதனின் பூமி. நவீன் மற்ற மாநிலத் தலைவர்களுக்குப் பாடமெடுத்திருக்கிறார். படிப்பதும் படிக்காமல் விடுவதும், அவரவர் விருப்பம்.

18 ஆண்டுகள் நீண்ட ஆட்சியில், மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், நோயாளிகள் எனச் சமூகத்தின் சகல திசைகளிலும் ஊடுருவியிருக்கின்றன நவீனின் நலத்திட்டங்கள். சுயஉதவிக் குழுக்களின் மூலம், பெண்களின் பொருளாதாச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். மருத்துவமனைகளில் மலிவுவிலை உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - டேப்லட்கள் கொடுத்து, முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறார். அதுவும், ஆதரவற்ற மாணவர்களுக்கு அவர் அறிவித்த உதவித்தொகை திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றது. விவசாயிகளுக்கு ‘காலியா’ திட்டத்தின் மூலம், அறுவடைக்காலங்களில் நிதியுதவி அளிக்க முன்வந்திருக்கிறார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த 20 ஆண்டுகளில், மனிதவளக் குறியீட்டிலும் பொருளாதார அலகுகளிலும் ஒடிசா பல படிகள் முன்னேறி வந்திருக்கிறது. நவீனுக்குப் பிறகு, ஒடிசா சுற்றுலாத்துறை காட்டிவரும் பாய்ச்சலை வைத்து அதை அளவிட முடியும். கலைப்பித்துக் கொண்டவர் என்பதால், பார்த்துப் பார்த்துச் செய்கிறார் சுற்றுலாத் துறைக்கு. பூரிநாதனின் ஆசியாலும் கோனார்க் சூரியதேவனின் அருளாலும் நிறைகிறது அவரது கருவூலம்.

2018-ம் ஆண்டு, உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியை நவீன் அரசாங்கம் நடத்திக்காட்டிய விதத்தைப் பார்த்து, உலகமே வியந்தது. உலக ஹாக்கி சம்மேளனம் விருதுகள் அளித்துப் பாராட்டியது. ‘எல்லாப் புகழும் என் மக்களுக்கே’ என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்தார் நவீன். இப்படிப்பட்ட நவீன், ஒடியமொழி அறியாதவர். பெரும்பாலும் மாநிலத்துக்கு வெளியே வளர்ந்ததால், ஒடியமொழி அவருக்கு வசப்படவில்லை. இது, அழகிய முரண் அல்லவா?

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

ஒடிசாவில் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்தே வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. நவீன் இதுவரை கண்டதிலேயே மிகச் சிக்கலான தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். கட்சிசார் வன்முறைகள் அவரை அலைக்கழித்தன. அரசியல் கொலைகள் அவரை உடைந்து அமரவைத்தன. ‘காவிகள் கால்வைக்கும் இடமெங்கும் இப்படித்தான் இருக்கும். கவனமாக இருங்கள்’ என்று, மாநிலம் கடந்த தலைவர்கள் எச்சரித்தனர். 

பினராயி விஜயனின் ஆட்சியை மதிப்பிட்ட ஒரு மூத்த பத்திரிகையாளர், “எப்படியாவது கேரளாவில் காலூன்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு முட்டுக்கட்டையாக பினராயி விஜயன் இருக்கிறார். அதனால்தான் கோபம், வன்முறையாக மாற்றப்படுகிறது” என்று எழுதியிருந்தார். இது அப்படியே ஒடிசாவுக்கும் பொருந்தும். தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது... நவீன் குறிவைக்கப்பட்டிருக்கிறார். குறிவைத்திருப்பவர் தர்மேந்திர பிரதான். ஒடிசாவில், ஆறாண்டுகளில் ஆறுமடங்கு அளவுக்கு பி.ஜே.பி-யை வளர்த்திருக்கும் அதே தர்மேந்திர பிரதான்.

2,000-மாவது ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோது, ரூபன் பானர்ஜி நவீனுடன் இருந்தார். அப்போது, பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது பிஜு ஜனதா தளம். தேர்தல் முடிவுகளுக்கு நவீன் எப்படியெல்லாம் ரியாக்ட் செய்கிறார் என்பதை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார் ரூபன். ஆனால், வெற்றி அறிவிப்புக்கும் தோல்வி அறிவிப்புக்கும் ஒரே மாதிரியான முகபாவனைகளையே காட்டுகிறார் நவீன். ரூபன் குழம்புகிறார், ‘எதற்காகவேனும் இந்த மனிதன் அழுதிருக்கிறாரா, எப்போதேனும் உரக்கச் சிரித்திருக்கிறாரா’ என்று மனதுக்குள் பேசுகிறார். அப்போது, பலஹரா தொகுதியில் தர்மேந்திர பிரதான் எனும் இளைஞர், பெரும் வாக்குவித்தியாசத்தில் வென்றுவிட்டதாகத் தகவல் வருகிறது. 

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

 சரியாக 20 ஆண்டுகள் கழித்து, நவீனின் பொற்தேருக்கு எதிராக, அக்னிதேர் கொண்டுவந்து நிற்கிறார் பிரதான். எதிர்த்தரப்பின் தலைவர்களைக் குறைத்து மதிப்பிடாமல் அரசியல் செய்வது, பி.ஜே.பி-யின் பிற தலைவர்களிடம் பார்க்க முடியாத குணம். பிரதானிடம் அது இருக்கிறது. ஆச்சர்யம்தான்! நிலவரத்தை நோக்கினால், ஒருநாள் ஒடிசாவின் முதல்வராக பிரதான் மாறக்கூடும் என்றே தோன்றுகிறது. ஆனால், நவீன் இருக்கும்வரை அது சாத்தியமாவது கடினமே. அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். "எனக்குத் தெரியும். அவரை அரியணையில் இருந்து இறக்குவது அவ்வளவு எளிதல்ல. மக்களின் மாபெரும் அபிமானம் அவருக்கு இருக்கிறது. ஆனால், எனக்கான வாய்ப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றே பேசிவருகிறார் பிரதான். நம்மை நன்கறிந்தவன் நம் எதிரியே!

அப்புறம், இந்தியாவில் இதுவரை அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார், நவீன். முதல் இடத்தில் இருப்பவர் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங். இரண்டாவது இடத்தில் வங்கப் பிதாமகர் ஜோதிபாசு. இந்தமுறை வென்று ஆட்சிக்கு வந்தால், ஜோதிபாசுவின் சாதனையைத் தகர்ப்பார் நவீன். முழு ஆட்சிக்காலத்தை முடித்தால் பவன்குமார் சாம்லிங்கின் சாதனையை உடைப்பார். அடுத்த முறையும் வென்று ஆட்சிக்கு வந்தால், ஐந்துமுறை முதல்வராக அமர்ந்த கருணாநிதியின் சாதனையையும் நிகர் செய்வார். ஆனால், இன்னமும் இந்திய அரசியலின் பாடப்படா நாயகனாகவே இருக்கிறார் நவீன். 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்து, நான்கரை கோடி மக்களின் இதயங்களை வென்று, ஒழுகும் ஓட்டுவீடென இருந்த மாநிலத்தை, மலைக்க வைக்கும் மாளிகையெனக் கட்டியெழுப்பிய நவீன், கவனிக்கப்படாமலேயே இருப்பது சற்றே உறுத்துகிறது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளும் கேரக்டர் அல்ல நவீன் என்பதே ஆறுதல். ஒரு கிளாஸ் விஸ்கி அடித்துவிட்டு, சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, எதையும் எளிதாகக் கடந்துவிடுவார்.

பணிந்தது ஃபானி... அங்கே நவீன் இருக்கிறார்!

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். பீஜப்பூர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நவீனின் மீது செருப்பு வீசப்பட்டது. வீசியது காவிக்கட்சியைச் சேர்ந்த ஓர் இளைஞன். செய்தி பரவுகிறது. மக்கள் கொதிக்கிறார்கள். ஆனால், நவீன், ‘அந்த இளைஞனுக்கும் சேர்த்தே நான் செங்கோல் செலுத்துகிறேன்’ என்று சொல்லி நகர்ந்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு