Published:Updated:

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?
கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

``புயல் அடித்து 15 நாள்களைக் கடந்து விட்டன. ஆனா, இதுவரை ஒரு அமைச்சர்கூட எங்கள் பகுதிக்குவந்து எங்களின் நிலைமையைப் பார்வையிடவில்லை. நாங்கள் சோறா கேட்டோம்; அடிப்படை வசதிகளைத்தானே செய்துதரச் சொல்லிக் கேட்டோம்” என்ற கோபக் குரல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்கள் எழுப்பினர். ஆனால் ஃபானி புயல் தாக்கிய மூன்றாவது நாளில் பிரதமர் மோடி ஒடிசாவை மையம் கொண்டு பாதிப்புகளை ஆய்வு செய்திருப்பதால்தான், கஜா புயல் பாதித்த காலத்தில் தமிழ்நாட்டை அவர் புறக்கணித்ததாக தமிழக மக்கள் இப்போதும் உணர்கிறார்கள்.

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

தமிழகம் இதுவரைச் சந்தித்த மிகமோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்று கஜா புயல் தாக்குதல். டெல்டா பகுதிகளைச் சுற்றியுள்ள 12 மாவட்டங்கள் கஜா புயலால் சிதறுண்டு போயின. இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பாதிக்கப்பட்டவர்களுள் பெருவாரியானவர்களும் விவசாயத்தை தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டவர்களே. அதேபோல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியளவோ சேதமடைந்தன. கிட்டத்தட்ட 88,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டன. ஆனால், கடைசிவரை பிரதமர் மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை.

அதேபோல் கடந்த 2017 நவம்பர் 30-ம் தேதி ஒகி புயல் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகளை நாசமாக்கியது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடைமைகளை இழந்தனர். இறந்தவர்களில் பலருடைய உடல்கள்கூட கிடைக்கவில்லை. புயல் குறித்தான முறையான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படாததுதான் உயிரிழப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி புயல் பாதிக்கப்பட்ட நிலையில், மாநிலக்கட்சிகளின் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் பார்வையிட்டுச் சென்றபின்னர், கடைசியாக டிசம்பர் 19ம் தேதி பிரதமர் மோடி, புயல் பாதிப்புகளை அப்போது பார்வையிட்டார். தற்போது புயல் வீசிச்சென்ற மூன்றே நாள்களில் மோடி, ஒடிசா மாநிலத்திற்குச் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது பற்றி பேசியுள்ளார். தமிழகத்தைப் புறக்கணிப்பதற்கும் ஒடிசாவை ஆதரிப்பதற்கும் அடிப்படையில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஒடிசாவில் தேர்தல் அரசியல் வாய்ப்புகளின் மூலமாக அங்கு பி.ஜே.பி-யின் செல்வாக்கை வளர்ப்பது; இரண்டாவது, அந்த மாநிலத்தில் தங்களின் தேவைகளைக் கேட்டுப்பெறும் நிர்வாகத் திறன் மிக்க மாநில அரசு ஆட்சியில் இருப்பது என்று குறிப்பிடலாம். 

வலிமையான மாநில அரசு

புயலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் ஒடிசா. அங்கு கடந்த 19 வருடங்களாக நவீன் பட்நாயக்கின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய புயல்களில் ஒன்று ஃபானி புயல். தமிழகத்தைத் தாக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயலின் திசைமாறி ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் ஒடிசா மாநிலத்தில் பூரி உள்ளிட்ட முக்கிய நகரங்களைத் தாக்கிய இந்தப் புயலால் மிகப்பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒடிசாவில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புக் கட்டமைப்புகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மாநில அரசின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. அதேபோல் மத்தியில் ஆளும் அரசிடம் மாநிலத்திற்கான தேவைகளை உரிமையுடன் போராடிக் கேட்டுப் பெறும் அளவுக்கு வலிமையான அரசாக நவீன் பட்நாயக் அரசு உள்ளது. தவிர, மாநில அரசும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தது.

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் மானியம் ஒதுக்கப்படுவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்தனர். ஏன் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர், அவர் மேலிடத்தில் இருப்பவர்களுடன் பேசி தமிழகத்திற்கு உதவுவார் என்பதால் அவரிடம் மனு அளித்தோம்" என தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.  அந்த அளவில்தான் தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி இருக்கிறது. இப்படி இருக்கும்போது, மத்திய அரசிடம் எப்படி இவர்களால் போராடித் திட்டங்களைப் பெற முடியும்? புயல் பாதிப்புகளை எப்படிப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லமுடியும்?

இதுவும் தேர்தல் கணக்கு...

ஒடிசாவில் மொத்தம் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த மக்களவைத் தொகுதியில் பி.ஜே.பி ஒரு தொகுதியையும், மாநிலத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும், பிஜூ ஜனதா தளம் 20 இடங்களையும் கைப்பற்றியது. பி.ஜே.பி-க்கு ஓர் இடம் கிடைத்தது என்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும்,  2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 6 இடங்களைக் கைப்பற்றியிருந்த காங்கிரஸ், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்தைக்கூட கைப்பற்றவில்லை என்பதுதான் தற்போதைக்கு பி.ஜே.பி-யின் பலம் எனலாம். இந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகக் களமாடும் முயற்சியாகவே பி.ஜே.பி. ஒடிசாவில் உடனடியாகச் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் ஒடிசாவில் பி.ஜே.பி 22.50 சதவிகித வாக்குவங்கியை வைத்துள்ளது. தமிழகத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலின் அடிப்படையில் தமிழகத்தில் பி.ஜே.பி-யின் வாக்கு வங்கி என்பது 2.8 சதவிகிதம்தான். தமிழகத்தைக் காட்டிலும் ஒடிசாவில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகபட்ச வளர்ச்சியைப் பெற்றுள்ளது பி.ஜே.பி.

கஜா புறக்கணிப்பும்; ஃபானி ஆதரவும்... காரணம் என்ன?

பி.ஜே.பி-க்கு ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது பற்றிய கனவு ஒருபுறம் இருந்தாலும் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையாவது பெறும் முயற்சியில் இப்போதே காய் நகர்த்தத் தொடங்கி விட்டது. காரணம், கடந்த பல ஆண்டுகளாக ஒடிசாவில் பலமான எதிர்க்கட்சிகளே அமையவில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, ஒடிசாவில் கட்சியை வளர்க்கும்விதமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனால், ஒடிசா மாநில பி.ஜே.பி-யில் உள்கட்சி பிரச்னைகளும் எழுந்தன. தமிழகத்தில் 39 தொகுதிகள் இருந்தும் வாய்ப்புகள் இல்லாததால் ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளைத்தான் மோடி குறிவைத்தார். அதன் காரணமாகவே தமிழகத்தைக் காட்டிலும், ஒடிசா மாநிலத்தில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. 

``ஒடிசாவுக்கு பிரதமர் போக வேண்டாம்" என்பது தமிழக மக்களின் கோரிக்கை அல்ல; உங்களின் மாண்புமிகு கண்கள் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் தமிழக மக்களையும் வந்து பார்த்து, பாதிப்புகள் பற்றி கவனித்திருக்கலாம் என்பதுதான்!

அடுத்த கட்டுரைக்கு