Published:Updated:

``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்

இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட மழை வேண்டி யாகம் நடத்தக் கோரிய சுற்றறிக்கையை வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரியுள்ளார்.

``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்
``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்

``தமிழகத்தில் மழை வேண்டி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும்" என அந்தத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி இந்து அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ``பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும். நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்

மேலும், ``ஓதுவார்களைக் கொண்டு சுந்தரரின் ஏழாம் திருமறையையும், திருஞானசம்பந்தரின் பன்னிரண்டாம் திருமறையிலுள்ள தேவார மழைப் பதிகத்தையும் பாட வேண்டும். மழை வேண்டி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கொண்டு அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபட வேண்டும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்தச் சுற்றிக்கை குறித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பும், வரவேற்பும் இருந்த நிலையில், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாதப்பொருளானது. இந்த நிலையில், இதே சுற்றறிக்கையைவைத்து, தனி நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் இதுதொடர்பாக விவரங்களைக் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகள் அனைத்தும் அரசாங்கத்தை அதிரவைக்கும்படியாக  உள்ளன.

``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவர் மின்வாரியத் துறையில் ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர், கடந்த 6-ம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட மழை வேண்டி யாகம் நடத்தக் கோரிய சுற்றறிக்கையைவைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரியுள்ளார். அதில், ``கோயில்களில் யாகம் செய்தால் மழை வரும் என விதி (Rule) மற்றும் அரசாணை (g.o)-யின் நகல் தருமாறும், அதுபோல வெயில் குறைய யாகம் செய்யலாம் என்ற விதி அல்லது அரசாணை தகவல் தருமாறும், இந்துக் கோயில்களில் யாகம் செய்தவுடன், எந்தெந்த ஊர்களில் எவ்வளவு செ.மீ மழை பெய்தது என்ற அறிக்கையின் நகல் தருமாறும், கோயில் வாரியாக இந்த யாகத்துக்குச் செய்யப்பட்ட செலவுப் பட்டியல் மற்றும் அர்ச்சர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற நகல் தருமாறும், நிர்வாகம் மற்றும் வரவு - செலவுகளை மேற்பார்வையிடும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் எந்த அதிகாரம் அல்லது விதி அல்லது அரசாணையின்படி யாகம் நடத்த உத்தரவிட்டார் என்பதற்கான நகல் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

``மழைக்காகக் கோயில்களில் யாகம் நடத்துவது மூடநம்பிக்கையே!" - ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகேட்ட ஈரோடு நபர்

கருப்பண்ணசாமியின் கேள்விகள் அனைத்தும் அதிரும்படியாகவும், சிந்திக்கத்தக்க வகையிலும் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி, அவருடைய இந்தக் கேள்விகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றன. இதுகுறித்து கருப்பண்ணசாமியைத் தொடர்புகொண்டு பேசினோம், ``எந்த அடிப்படையில் இப்படியான உத்தரவுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் போட்டார் எனத் தெரியவில்லை. அவருடைய இந்த உத்தரவைப் பார்க்கும்போது மூடநம்பிக்கைகளை வளர்க்கும்விதமாகவே உள்ளது. அதனால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைத் தருமாறு கேட்டுள்ளேன். என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இன்னும் 30 நாள்களுக்கு நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், நான் கேட்டுள்ள இந்தக் கேள்விகளுக்குப் பாராட்டும் எதிர்ப்பும் அதிகரித்துவருகிறது" என்றார். 

என்ன பதில் சொல்லப்போகிறதோ, அறநிலையத் துறை?

Vikatan