Published:Updated:

கருணாநிதியால் முடியுமா?

ப.திருமாவேலன்படம் : கே.ராஜசேகரன்

கருணாநிதியால் முடியுமா?

ப.திருமாவேலன்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைக்கத் தவிக்கிறார் கருணாநிதி. அவருடைய வாரிசுகளோ, தி.மு.க-வின் தலைமை வரிசை நாற்காலிகளைக் கைப்பற்றுவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்!

 ஸ்டாலினுக்கு செயல் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும். அது நடந்தால், அழகிரி, பொருளாளர் ஆவார். துணைப் பொதுச் செயலாளர் அல்லது இளைஞர் அணிச் செயலாளர் பதவி கனிமொழிக்குத் தரப்படும். ஸ்டாலின் மகன் உதயநிதியையும் இளைஞர் அணிச் செயலாளராக உட்காரவைத்து அழகு பார்க்கலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை மட்டும் குலுக்கிப்போட்டு, வேண்டிய பதவிகளைப் பிரித்துக்கொள்ளப் போகிறார்கள். இந்த ஏற்பாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும் மாவட்டச் செயலாளர்களின் வலிமையைக் குறைக்கும் வேலையும் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்பதை யோசிக்க, பிப்ரவரி 2, 3 தேதிகளில் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் கூடி விவாதிக்கிறார்கள். பொதுக் குழு, செயற் குழு, உயர்மட்டச் செயல் திட்டக் குழு, மாவட்டச் செயலாளர்கள் ஆகிய கூட்டங்களுக்குள் வர முடியாமல் வெளியே நிறுத்தப்படும் தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் சொன்ன ஆலோசனைகள் மட்டும் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதியால் முடியுமா?

ஒருத்தருக்கு ஒண்ணு!

'ஒருவருக்கு ஒரு பதவிதான்!’ என்பதைத் தீர்மானமான முடிவாகக் கொண்டுவர வேண்டும். மாவட்டச் செயலாளராக இருப்பவரே, மந்திரியாகவும் இருந்தார். அவரே உயர்மட்டச் செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் தொடர்ந்தார். கட்சி வேலைகளையும் ஒழுங்காகப் பார்க்காமல்... பொதுமக்களுக்கான வேலைகளையும் சரியாகச் செய்யாமல், கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருசேரக் கெட்ட பெயரைத்தான் இவர்கள் உருவாக்கினார்கள். இதனால் தங்களுடைய பகுதியில், மாவட்டத்தில் சொந்த செல்வாக் குடன் யாரும் வளர்ந்துவிடாமலும் பார்த் துக்கொண்டார்கள். தலைவர், பொதுச் செயலாளர் நீங்கலாக, அனைவருக்கும் அது யாராக இருந்தாலும் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவிதான் என்பதையும் வரையறுக்க வேண்டும். அப்பா மந்திரி... மகன் சூப்பர் மந்திரியாகத்தான் பல மாவட்டங்களில் செயல்பட்டார்கள். இதனால், கட்சியில் கோஷ்டிகள் பெருகியதுதான் மிச்சம். இந்தச் சூழ்நிலை தலைவர் குடும்பத்தில் இருந்துதான் உருவானது. எனவே, இந்த விதியை தலைவர், பொதுச் செயலாளர் முதல் அனைவருமே பின்பற்ற வேண்டும்!

நாடாளுமன்ற மாவட்டங்கள்!

மக்கள்தொகை விரிவடைந்த நிலையில், வருவாய் மாவட்டங்களாக இருப்பவற்றை வைத்து ஒரு செயலாளர் முழுமையாகக் கண்காணிக்க முடியாது. வளர்க்கவும் இயலாது. எனவேதான் பெரிய மாவட்டங்களைப் பிரித்தார்கள். அது பலருக்கும் உடன்பாட்டைக் கொடுக்கவில்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகள் அடிப்படை யில் செயலாளர்களை நியமிக்கலாமா என்று தலைமை யோசித்தது. எல்லா ஊர்களுக்கும் சென்று ஆலோசனை களைக் கேட்டது. பல நிர்வாகிகளைக் கடிதம் எழுதி கருத்துச் சொல்லச் சொன்னார்கள். ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் கோவைப் பொதுக் குழுவில் எதிர்த்தார். ஸ்டாலினைச் சுற்றி இருக்கும் பொன்முடி மற்றும் வேலு போன்றவர்களுக்கும் இதில் விருப்பம் இல்லை என்றதும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இதுபோன்ற மாவட்ட மன்னர்கள்தான் கட்சியை வளர்க்க முடியாத தடைக்கல். அவர் களை மீறி தொகுதிச் செயலாளர்களை நியமித்தால்தான் அடுத்து நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி குறித்து யோசிக்கவே முடியும்!

சொத்துகளைச் சொல்லுங்கள்!

கடந்த தேர்தலில் பெரும் தோல்விக்குக் காரணமே அப்போதைய அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ-க்கள்தான். அனைவர் மீதும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டு பூதாகார மாகக் கிளம்பியது. இவை எதிர்காலத்திலும் வராமல் தடுக்க வேண்டுமானால், தி.மு.க-வின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவருமே தங்களது சொத்துக் கணக்கை பொதுக் குழுவில் வைக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள்தான் இந்தக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று இல்லை. அனைத்து நிர்வாகிகளும் இதைச் சமர்ப்பித்தால்தான், களங்கமற்ற கழகத்தை உருவாக்க முடியும்!

கற்பனாவாதம் வேண்டாம்!

'மத்தியில் தமிழை ஆட்சிமொழி ஆக்குவோம்; தேவிகுளம், பீர்மேட்டை மீட்போம்; வட கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, இலங்கை முழுவதையுமே ஆளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு...’ என்பது போன்ற கற்பனாவாதக் கோரிக்கைகளை விடுத்து, யதார்த்த நிலைமைக்குத் தலைமை திரும்பியாக வேண்டும். பொத்தாம்பொதுவாகக் கொள்கைகள் பேசுவதைவிட நடைமுறைச் சூழலுக்குத் தேவையான முழக்கங்களை வைக்க வேண்டும். அடிப்படை வசதிகளுக் காகக் குரல் கொடுப்பதும்... அவற்றைப் பெற்றுத் தருவதற்காகப் பொதுமக்களோடு சேர்ந்து போராடுவதும்தான் இனி கட்சியை வளர்க்கப் பயன்படும். அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான போராட்டம் நடந்துவருகிறது. அதில் தலைமையின் நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் ஆ.ராசாவைக் கட்சிக்குள் வைத்திருப்பதா, இல்லையா என்றும் முடிவு செய்ய வேண்டும்!

   எதுவும் தெரியாத இளைஞர்கள்!

இன்று இளைஞர் அணியில் இருப்பவர் களுக்கு, தலைவர், தளபதியைத் தவிர, வேறு யாரைப் பற்றியும் தெரியவில்லை. சமீபத்தில் விழுப்புரம் வந்து இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வை ஸ்டாலின் நடத்தியபோது, 'இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் யார்?’ என்று கேட்டபோது சிலருக்குத் தெரியவில்லை.

'அது நான்தான் தம்பி!’ என்று வெட்கப் பட்டுச் சொல்லி ஸ்டாலினே சமாளித்தார். வெள்ளை பேன்ட்... வெள்ளைச் சட்டை போட்டால் போதும்... அதுவே இளைஞர் அணிக்கான தகுதி என்று பலரும் நினைக்கிறார்கள். 'தலைவருக்கு ஒரு தலைவர்... அண்ணா என்று இருந்தார்’ என்ற அரிச்சுவடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்!

  இரண்டே இரண்டு தடவைதான்!

ஒருவர் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றால், அவரே வாழ்நாள் முழுவதும் அந்தத் தொகுதியைக் குத்தகைக்கு எடுத்துவிடும் நிலை தி.மு.க-வில் மட்டும்தான் உள்ளது. மந்திரிகளும் அப்படித்தான். ஒருவரே நான்கு முறை அமைச்சராக இருந்தால், மற்றவர்கள் எதற்காகக் கட்சி யில் இருக்க வேண்டும். உழைக்க வேண்டும்? எனவே, யாராக இருந்தாலும் இரண்டு முறை மட்டுமே பதவிகளில் தொடரலாம் என்று கொண்டுவர வேண்டும்!

அதிகார மையங்களை உடையுங்கள்!

ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல... எதிர்க் கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வின் அதிகார மையங்கள் எந்தச் சிக்கல்களும் இல்லாமல்தான் இயங்குகின்றன.

ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, செல்வி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும்... அவர்களை அடுத்து அவர்களது வாரிசுகளுமாகப் பதவியை வாங்கிக் கொடுப்பதிலும் பறிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இந்த அதிகார மையங்களை உடைக்காமல், தலைவரால் எதையும் செய்ய முடியாது. அவர் நினைப்பதைக்கூடச் செய்ய முடியாது.

செய்வாரா கருணாநிதி? செய்ய முடியுமா அவரால்?