Published:Updated:

ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

சசிகலா உறவு சதிகள்ப.திருமாவேலன்

ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

சசிகலா உறவு சதிகள்ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

தி.மு.க-காரர்கள் இப்போது ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா வின் மொத்தக் கவனமும் சசிகலா குடும் பத்தினர் மீது திரும்பிவிட்டதால், இனி நில மோசடி, லஞ்ச ஊழல், குண்டாஸ் வழக்குகள் நம் மீது பாயாது என்பதுதான் இந்த உற்சாகத்துக்குக் காரணம். ''எதிரிகளைக்கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்'' என்று ஜெயலலிதாவின் உள்மனசு அடிக்கடி உச்சரிக்கும். நடந்துவரும் கைது, ரெய்டு நடவடிக்கை களைப் பார்க்கும்போது, அவரது மனக் காயங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆறாதுபோல!

 ''சசிகலா என்றாவது ஒருநாள் நிச்சயம் முதல்வர் ஆவார்!'' என்று ஒரு பத்திரிகை யில் வந்த செய்தியை ஜெயலலிதாவும் சசிகலாவுமே சேர்ந்து படித்தார்கள். சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். ''அதற்குப் பிறகு, என்னிடம் சிரித்துப் பேசுவதை அக்கா குறைத்துவிட்டார்'' என்பது இரண்டு மூன்று வாரங்கள் கழித்து சசிகலா ஒருவரிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார். திருச்சி மேற்குத் தொகுதியில் சசிகலா போட்டியிடப்போகிறார், சசிகலா தீவிர அரசியலில் குதிக்க இருக்கிறார், சசிகலா துணை முதல்வர் ஆகிறார், ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலாதான் கட்சிப் பொதுச் செயலாளர், முதல்வர்... என்று பத்திரிகைகள் ஆரூடங்கள் சொல்வது பல ஆண்டுகளாகத் தொடரும் விஷயம். இதுவரைக்கும் வந்த எந்தச் செய்தி யையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெய லலிதா, இந்த முறை மட்டும் இறுக்கமானது செய்தியைப் பார்த்து அல்ல. அதற்குப் பின்னால் அவரது காதுக்கு வந்து சேர்ந்த செய்திகளை வைத்து என்பது அரசியல் மேல் மட்டங்களில் பழகக் கூடியவர்களுக்குத் தெரியும். 'கட்சியைவிட்டு நீக்கியாகிவிட்டது. இனி, அவர்களால் அதிகாரம் செய்யவும் முடியாது. வெளியில் தலை காட்டவும் முடியாது’ என்று அமைதியாக இல்லாமல்... திவாகரனைத் தேடுவது, ராவணனைக் கைது செய்வது என்பதில் ஜெயலலிதா தீவிரமாக இருக்கக் காரணம், அவர்கள் தனது பதவி நாற்காலியைக் குறிவைக்கும் சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் என்பது போலீஸ் வட்டாரம் சொல்லும் தகவல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

''தஞ்சை மற்றும் பெங்களூரில் நடந்த இரண்டு மீட்டிங்குகள் முதல்வரின் கவனத்துக்கு வந்தன. தஞ்சாவூர் கூட்டத்தில் சசிகலாவின் உறவினர்கள் இருந்தார்கள். பெங்களூரு கூட்டத்தில் சசிகலாவே இருந்தார். 'பெங்களூரு வழக்கில் அம்மாவுக்கு ஏதாவது சிக்கல் வரும்போலத்தான் தெரியுது. அரசு வக்கீலும் நீதிபதியும் கறாராக இருப்பதைப் பார்த்தால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை தரத்தக்க தீர்ப்பைத்தான் தருவார்கள். அப்போது கட்சிக்கும் ஆட்சிக் குமே சிக்கல் வரலாம். எனவே, முன்னதாக நாம் சில ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்’ என்பதுதான் இந்த இரண்டு கூட்டங்களின் சாராம்சம். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் சம்பந்தப்பட்டு இருக்கும் வழக்கு என்பதால், அவர்களை விட்டுவிட்டு மற்றவர்களின் பெயர்கள் இந்தக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது திவாகரன் பெயரை ஒரு தரப்பும், ராவணன் பெயரை இன்னொரு தரப்பும் வழிமொழிந்தது. அனைவரும் சேர்ந்து ஒரு ஆளை சுட்டிக்காட்ட முடியாதது முதல் குழப்பம். ராவணனை ஆதரிப்பவர்களின் எண் ணிக்கை கூடுதலாக இருந்தது எதிர்த் தரப்பைக் கோபப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு எல்லாத் தகவல்களும் மெள்ளக் கசிய ஆரம்பித்தன.

ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

பெங்களூரு வழக்கு விவகாரங்களைக் கவனித்து வந்த ஒருவரிடம், 'என்னை முழுக்க உள்ளே அனுப்பிடுறதுனு முடிவே பண்ணிட்டீங்களா?’ என்று முதல்வரே ஒரு முறை நேரடியாகக் கேட்டார். அப்போதே இந்தக் கோஷ்டி உஷாராகி இருக்க வேண்டும். ஆனால், 'அம்மா இப்படிக் கிண்டல் பண்ணினாங்க’ என்று அவர்களே பெருமையாக வெளியே சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த நிலையில்தான் ஒவ்வொருவர் பேச்சையும் முழுமையாகக் கண்காணிக்க உத்தரவிட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மரியாதையுடன் பேசியவர்கள், இப்போது தன்னை அவமரியாதை செய்வது மாதிரியும் ஏளனமாகவும் பேச ஆரம்பித்து இருப்பதும் முதல்வருக்குத் தெரியவந்தது. இதை சசிகலாவிடமே அழைத்துச் சொன்னார். 'அத்தனை பேரையும் விட்டுட்டு, நீ மட்டும் இங்க இருப்பது என்றால் இரு. இல்லைன்னா, நீயும் சேர்ந்து போய்விடு’ என்கிற அளவுக்குத் தீர்மானமாக முடிவெடுத்து முதல்வர் மொத்தப் பேரையும் கழற்றிவிட்டார். அதற்குப் பிறகும் அவர்கள் சும்மா இருக்கவில்லை என்பதுதான் முதல்வரை அதிகம் கோபப்படுத்தியது'' என்கிறார்கள் உள் விவரங்களை அறிந்தவர் கள்!

'பத்தே நாள்ல நம்மை உள்ளே கூப்பிட்டுக் கொள்வார்’ என்றும் 'நாம் இல்லாமல், அவரால் செயல்படவே முடியாது’ என்றும் ஏளனக் குரல்களை உச்சரித்த இருவர்தான் இன்று போலீஸ் துரத்தத் துரத்த ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். 'ஜெயலலிதாவுக்கு இமேஜ் உண்டு. ஆனால், செயல்பாடு கிடையாது. அனைவரையும் அரவணைத்து ஆலோசனை செய்யக் கூடிய கலெக்டிவ் அப்ரோச் கிடையாது. அவரை இத்தனை வருஷமாக் கவனிக்கிற எனக்குத் தெரியும்’ என்றார் ஒருவர். 'கருணாநிதிக்கு அவருடைய இடத்துல இருந்து யோசிக்கக்கூடிய சண்முகநாதன், ராஜமாணிக்கம் போன்ற ஆட்கள் ஜெயலலிதாவுக்குக் கிடையாது’ என்று விரட்டப்பட்ட இன்னொருவர் சொன்னார். ''நாளைக்கு ஒரு பிரச்னை வந்தால், அவரால் சமாளிக்க முடியாது. எனவே, நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்'' என்று சசிகலா குடும்பத்துக்குள் ஒரு ரகசியப் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். இதில் சசிகலா ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு எதிலும் ஆர்வம் இல்லை என்றும் அவர்களே சொல் கிறார்கள்.

''சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் வாங்கியவர்களில், 70 சதவிகிதம் பேர் நம்முடையவர்கள்தான். அவர்கள் எப்போதும் நம்முடைய பேச்சைத்தான் கேட்பார்கள். ஏதாவது ஓர் அசாதாரணச் சூழ்நிலை வந்தால், அவர்களை மொத்தமாக ஓட்டிக்கொண்டு வந்துவிடலாம். அப்போதைய தேவைக்கு அவசியமான பணத்தை மொத்தமாகச் சேர்த்துவையுங்கள். பணம் இருந்தால், எதையும் செய்யலாம்'' என்ற வகையில் ஆலோசனைகள் சொல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டவை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதாம். மத்திய உளவுத் துறை அனுப்பிய தகவல் அறிக்கையின்படி, அந்தத் தொகை 600 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். ''பெங்களூரு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு பாருங்கள்'' என்று இந்தக் குடும்பத்தினர் பேச ஆரம்பித்துள்ளதையும், இந்தச் சேமிப்பையும் சேர்த்துப் பார்த்தால், ஆட்சிக் கவிழ்ப்புக்கோ அல்லது பதவியை அபகரிக்கவோ ஆன பெரும் திட்டத் தின் மையப் புள்ளி அது என்கிறார்கள்.

சி.எம். வேட்பாளர்கள் என்று சொல்லப்படும் இரண்டு பேரைச் சுத்தலில் விட்டு... ரகசியச் செய்திகளைக் கறக்கும் பின்னணி இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இதில் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் யாருமே, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேசக் கூடாது என்பதில் ஜெயலலிதா தெளிவாக இருக்கிறார். சசிகலாவுடன் நீக்கப்பட்டவர்களில் பெண்கள் யாருமே கிடையாது. ஆனால், இந்த வாரத்தில் வெளியான பட்டியலில் சசிகலாவின் அண்ணி, நடராஜனின் சகோதரி என்று பெண்களையும் சேர்த்திருப்பதன் பின்னணி... இவர்கள்கூட யாரிடமும் பேசி மன மாற்றங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதால்தானாம். மந்திரிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரின் செயல்பாடு களையும் கண்காணிக்கச் சொல்லி இருக்கும் முதல்வர், எதிர்க் கட்சிகளுக்கும் சசிகலா குடும்பத்தினருக்குமான தொடர்புகளையும் முழுமையாகக் கண்காணிக்க உத்தரவு இட்டுள் ளாராம். இப்போது நம்முடைய உளவுத் துறை யின் முழு நேர வேலை இது. நித்தமும் பெரும் பான்மை நேரத்தை இந்தப் பிரச்னைகளை டீல் செய்வதிலேயே முதல்வரின் கவனம் செல்கிறது.

இருந்தாலும் தொந்தரவு... இல்லாமல் போனாலும் தொந்தரவு!