Published:Updated:

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைகள் மீதுள்ள அன்பு அளப்பரியது. எனினும் தங்கள் மகன்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இந்தத் தாய்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்.

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay
'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

வ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு 'அன்னையர் தினமாகக்' கொண்டாடப்படுகிறது. தாய்மை எப்போதும் மென்மையோடும், புனிதங்களோடும் இணைத்துப் பயன்படுத்தப்படும் பண்பு. எனினும், தாய்மை என்பதைப் போராட்டக் குணமாக, அடக்குமுறையின் எதிர்ப்பாக உலகெங்கும் பல்வேறு பெண்கள் எழுச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், அரசின் செயல்பாடுகளாலும், பிற அரசியல் காரணங்களாலும், மகனை இழந்த, மகனைத் தொலைத்து, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் நான்கு தாய்மார்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. ராதிகா வெமுலா - ரோஹித் வெமுலா

ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சாதியப் பாகுபாடு காரணமாகப் போராட்டம் நடத்தினார் ரோஹித் வெமுலா. பல்கலைக்கழக நிர்வாகம் ரோஹித்தின் போராட்டத்திற்குச் செவிசாய்க்கவில்லை. போராட்டத்தின் வடிவமாகக் கடிதம் எழுதி விட்டு, தற்கொலை செய்துகொண்டார் ரோஹித் வெமுலா. ஏழைக் குடும்பத்தில், தையல்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராதிகா வெமுலாவின் வாழ்வில் மிகப்பெரிய இடியாக அமைந்தது மகனின் மரணம். 

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

தன் மகன் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டக் களத்திற்குள் நுழைந்தார் ராதிகா. வெளியுலகம் பற்றியோ, சாதிய அமைப்புமுறை பற்றிய அரசியல் புரிதலோ இல்லாமல் வாழ்ந்துவந்த ராதிகா வெமுலாவுக்குப் போராட்டக்களம் புதிதாக அமைந்தது. எனினும் மகனுக்காக நீதி கேட்க, போராட, அவை எதுவும் அவருக்குத் தடையாக அமையவில்லை. இந்திய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் ராதிகா வெமுலாவைக் காண முடியும். 

'என் மகன் மரணத்திற்குக் காரணம் இந்தியாவின் சாதிய அமைப்புமுறை. அதனை எதிர்த்துப் போராடுவதும், என் மகன் மரணத்திற்கு நீதி பெறுவதும்தான் என் நோக்கம்' எனத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் இந்தத் தாய். 'இறந்த ரோஹித் வெமுலாவும், அரசுக்கு எதிராகப் போராடும் ராதிகா வெமுலாவும் பட்டியல் சாதியினரே இல்லை' என்பதே இந்தத் தாயின் சாதி ஒழிப்புப் பிரசாரங்களுக்கு அரசு முன்வைத்திருக்கும் எதிர் பிரசாரம்.   

2. ஃபாத்திமா நபீஸ் - நஜீப் அகமது

ஃபாத்திமா நபீஸ், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'காணாமல்' போன மாணவர் நஜீப் அகமதுவின் தாய். பல்கலைக்கழக வளாகத்தில் மத ரீதியான ஒடுக்குமுறை காரணமாக, பி.ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நஜீப் அகமது. வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. மறுநாளில் இருந்து நஜீப் அகமது காணாமல் போனார். டெல்லி காவல்துறை, சி.பி.ஐ என புலனாய்வு அமைப்புகள் இரண்டு ஆண்டுகள் விசாரணை நடத்தி, நஜீப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியது. 

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

நீதிமன்றம், சி.பி.ஐ என எந்த அரசு அமைப்புகளாலும் தன் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை எதிர்த்துப் போராடி வருகிறார் ஃபாத்திமா நபீஸ். பிரதமர் மோடி தன்னைச் 'சௌகிதார்' என அறிவித்தபோது, 'சௌகிதார் மோடி அவர்களே, உங்கள் ஆட்சியில்தான் என் மகன் காணாமல் போனான். நீங்கள் உண்மையில் சௌகிதாராக இருந்தால், என் மகனை மீட்டுத் தாருங்கள்' என்று அறிவித்தார் ஃபாத்திமா நபீஸ். தற்போது பீகார் மாநிலத்தின் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடும் ஜே.என்.யூ மாணவர் கன்னையா குமாருக்காகப் பிரசாரம் செய்து வருகிறார் ஃபாத்திமா. இவர், ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலாவுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் இணைந்து பயணிக்கிறார்.

3. அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

அற்புதம் அம்மாளின் போராட்டத்தை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை சென்ற மகனை மீட்க 28 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார் அற்புதம் அம்மாள். மகனின் விடுதலைக்காகத் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் அவர் சந்திக்காத அரசியல் தலைவர்களே இல்லை. 

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

தன் மகனுக்காக என்று இல்லாமல், அற்புதம் அம்மாளின் போராட்டம் மரண தண்டனைக்கு எதிராகவும் இருந்தது. கடந்த 28 ஆண்டுகளில், இந்தியக் குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடிமகன்கள்வரை தன் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அற்புதம் அம்மாள். 'இந்தப் பயணத்திற்கு உடம்பு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. ஆனா, எம்புள்ளைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வருவதற்கு எனக்கு வேற வழி தெரியலை. ஆளுநர் இன்னும் மௌனமாவே இருக்காரு. அதான் மக்களிடமே நியாயம் கேட்கப் போறேன்' என்று தன் மகனுக்காகவே தன் முதுமையையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் அற்புதம் அம்மாள்.  

4. பர்வீனா அஹங்கர் - ஜாவித்

1990-ம் ஆண்டு, ஆகஸ்ட் 18 அன்று, காஷ்மீரில் முகாமிட்டிருந்த இந்தியப் பாதுகாப்புப் படையினர் பர்வீனா அஹங்கரின் வீட்டினுள் நுழைந்து, அவரது 16 வயது மகன் ஜாவிதைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். காஷ்மீரில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டம் அமலில் இருக்கும் காரணத்தால், பாதுகாப்புப் படையினர் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் கைது செய்யும். அப்படிக் கைது செய்யப்படுபவர்கள் மீண்டும் வீடு திரும்ப மாட்டார்கள். அவர்களைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காது. இப்படியான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், 'காணாமல் போனவர்கள்' என அழைக்கப்படுகின்றனர். காஷ்மீரில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் 'காணாமல் போனதாக' தன்னார்வ அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'என் மகனைக் கொடுங்கள்!' - இந்திய அரசை எதிர்த்து நிற்கும் நான்கு தாய்மார்கள்! #MothersDay

தன் மகன் ஜாவித் கைது செய்யப்பட்ட பிறகு, முதல் நான்கு ஆண்டுகள் பர்வீனா அஹங்கர் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் அலைந்தார். 1994-ம் ஆண்டு, அவரைப் போலவே, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர் ஆகியோரை இணைத்துக் கொண்டு 'காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பு' என்ற அமைப்பைத் தொடங்கி, இன்றுவரை நீதி கேட்டுப் போராடி வருகிறார். பர்வீனா அஹங்கரின் போராட்டக் குணத்திற்காக, 2015-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். 'காஷ்மீரின் இரும்புப் பெண்மணி' என அழைக்கப்படும் பர்வீனா அஹங்கர், 'தேர்தல் என் மகனை மீட்டுக் கொண்டு வருமா?' என்று காஷ்மீரின் ஆட்சியாளர்கள் மீது தற்போது எழுப்பியுள்ள கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.   

ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைகள் மீதுள்ள அன்பு அளப்பரியது. எனினும் தங்கள் மகன்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இந்தத் தாய்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்களே.

Vikatan