Published:Updated:

'அவர் 'டேனியல்' இல்லையென்றால் பரவாயில்லை... ஓ.கே!' - கரு.நாகராஜன்

'அவர் 'டேனியல்' இல்லையென்றால் பரவாயில்லை... ஓ.கே!' - கரு.நாகராஜன்
'அவர் 'டேனியல்' இல்லையென்றால் பரவாயில்லை... ஓ.கே!' - கரு.நாகராஜன்

ழு தமிழர் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இனி இதுகுறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பேசுபொருளாக வைத்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் கரு.நாகராஜனிடம், ஜெயின் ஆணையம் குற்றம்சாட்டிய “சுப்பிரமணியன் சுவாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முறையாகப் பதிலளிக்காமல், திருமுருகன் காந்தியை `டேனியல்' என்று திரும்பத் திரும்ப அழைத்தார் கரு.நாகராஜன். ஆத்திரமடைந்த திருமுருகன் காந்தி ’என் பெயர் டேனியல் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று கேட்டு தன் இருக்கையிலிருந்து எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கரு.நாகராஜனின் இந்தச் செயல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக மே 17 இயக்கத்தினர் கூறி வருகிறார்கள்.  

'அவர் 'டேனியல்' இல்லையென்றால் பரவாயில்லை... ஓ.கே!' - கரு.நாகராஜன்

"முக்கியப் பிரச்னை குறித்த விவாதத்தில் தொடர்பில்லாத வார்த்தைகளை ஏன் பிரயோகித்தீர்கள்?" என்று  கரு.நாகராஜனிடம் கேட்டபோது, “இன்றைக்கு பலபேர் உண்மையிலேயே கிறிஸ்துவராக இருந்துகொண்டு, இந்து பெயர்களைச் சூட்டிக்கொண்டும் விவாத மேடைக்கு வந்து விவாதம் பேசிக்கொண்டும் தங்களுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை வெளியுலகத்துக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு தலைவர்களை எடுத்துக்கொண்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு ஒரு கிறிஸ்துவர். அவரது பெயரும் கிறிஸ்துவ பெயர்தான். ஏன் ம.தி.மு.க தலைவர் வைகோகூட கிறிஸ்துவக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவருமே தங்களின் உண்மையான முகமூடியை மறைத்து, இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும், இந்திய தேசியத்தையும் எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் திருமுருகன் காந்தியின் பெயரும் ’டேனியல்’ என்று பரவலாகச் செய்தி இருப்பதால் அப்படிக் கூறினேன். அவரது பெயர் `டேனியல்' இல்லையென்றால், அவர் கிறிஸ்துவர் இல்லை. இந்துதான், பரவாயில்லை ஓகே!” என்று கூறி பாதி விளக்கத்திலேயே அழைப்பைத் துண்டித்தார்.

'அவர் 'டேனியல்' இல்லையென்றால் பரவாயில்லை... ஓ.கே!' - கரு.நாகராஜன்

இதுகுறித்து திருமுருகன் காந்தியிடம் பேசினோம், “மதத்தின் பெயரால் அவர்கள் புரிகின்ற வன்முறைகளையும் பிரிவினைகளையும் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம், அவர்களின் ஊழல்களையும் மக்கள் விரோதத் திட்டங்களையும் எதிர்த்து தொடந்து கேள்வி எழுப்புகிறோம். இதற்கெல்லாம் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் நாங்கள் இந்து பெயரை வைத்திருக்கிறோம், இப்படியெல்லாம் கூறுகிறோம் என்பதும் அவர்களால் பதில் சொல்ல முடியாமல் போவதற்கு முக்கியக்காரணம். எனவே, எங்களுக்கு கிறிஸ்துவப் பெயர் வைத்து, இவர்கள் இந்துக்கள் இல்லை, கிறிஸ்துவர்கள். இந்துக்களுக்கு எதிராகக் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள் எனப் பொய்ப் பிரசாரம் செய்வதற்காகவே, `டேனியல்’ போன்ற பெயர்களைப் பரப்புகின்றனர். நடிகர் விஜயைக்கூட ஜோசப் என்றுதானே கூறினார்கள். இதன்மூலம் தொடர்ச்சியாகப் பொய் பேசுகிற ஒரு கட்சி பி.ஜே.பி என நிரூபணமாயிருக்கிறது. கரு.நாகராஜன் என்ற தனிநபர் மட்டுமல்ல, அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் இப்படித்தான் பேசி வருகின்றனர். இதை, இப்படியே விடுவதாக இல்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க, நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் முடிவு செய்துள்ளோம்” என்றார் ஆவேசமாக.

மக்கள் நலனுக்காகப் போராடுபவர்களையும் சமூக அக்கறையுடன் செயல்படும் செயல்பாட்டாளர்களையும், அவர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் முடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது..?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு