Published:Updated:

நல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே?

நல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே?

‘என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’ என்று சொல்லி தியாகிகள் பென்ஷனை வாங்க மறுத்தவர் ஆர்.நல்லகண்ணு.

நல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே?

‘என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’ என்று சொல்லி தியாகிகள் பென்ஷனை வாங்க மறுத்தவர் ஆர்.நல்லகண்ணு.

Published:Updated:
நல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே?

ல்லகண்ணு பற்றியும் அவருடைய அரசியல் போராட்ட வரலாறு பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அவரின் அமைச்சரவை சகாக்களுக்கோ தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் யாரென்று தெரிந்திருந்தால், அவர் வசித்துவந்த வீட்டிலிருந்து திடீரென அவரை வெளியேற்றியிருப்பார்களா என்று தெரியவில்லை.

நல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே?

திடீரென அவரை வீட்டிலிருந்து அரசு காலிசெய்யச் சொல்லிவிட்டது என்கிற தகவலானது, கட்சி எல்லைகளுக்கு அப்பால் சமூக அக்கறை கொண்ட அனைவரையும் வேதனையடையச் செய்தது. ஏராளமானோர் அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதைத்தாண்டி, முகநூலில் ஆங்காங்கே கண்ணில் பட்ட சில பதிவுகள் ஆச்சர்யத்தை அளித்தன. அவற்றில் சில இதோ…

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஐயா… எனது அடுக்குமாடி வீடு ஒன்று வண்டலூரில் இருக்கிறது. அதில் தாங்கள் விரும்பும்வரை வாடகையின்றி இருங்கள் ஐயா. இதை ஐயாவுக்குத் தெரிவியுங்கள்…” என்று சொல்லி தனது செல்போன் நம்பரையும் குறிப்பிட்டிருந்தார் தமிழ் தம்பி என்கிற ஒருவர்.

மற்றொருவர், “ஐயா… எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. ஒன்றை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் விருப்பப்பட்டால் அதில் ஒரு வீட்டில் இருந்துகொள்ளுங்கள். எல்லா வசதிகளையும் நாங்கள் செய்துதருகிறோம்” என்று சொல்லி செல்போன் நம்பரைக் குறிப்பிட்டிருந்தார்.

ஜோக்கப் சாமுவேல் என்பவர், ஐயா… தங்களுக்கு விருப்பமுள்ள இடத்தில் வாடகை வீடு எடுத்துத் தங்கிக்கொள்ளுங்கள். நான் வாடகைப் பணத்தைத் தருகிறேன். உங்கள் வங்கிக்கணக்கு எண்ணை எனக்குத் தாருங்கள்” என்று செல்போன் நம்பரைக் குறிப்பிட்டு ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இப்படியாக, பல நல்ல உள்ளங்களின் அன்பால் முகநூல் நேற்று நனைந்துகிடந்தது. அதே நேரத்தில், அரசுத் தரப்பிலும் ஆளும்கட்சித் தரப்பிலும் நிர்வாக ரீதியான சில காரணங்களை முன்வைத்து, அரசின் நடவடிக்கைக்குச் சிலர் நியாயம் கற்பித்துக்கொண்டிருந்தது வேதனைக்குரியது.

நல்லகண்ணு யார் தெரியுமா மிஸ்டர் எடப்பாடி அவர்களே?

நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி, பல ஆண்டுகள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். உழைப்பாளி மக்களின் நலனுக்காக வீரஞ்செரிந்த பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அதற்காகப் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். ‘என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’ என்று சொல்லி தியாகிகள் பென்ஷனை வாங்க மறுத்தவர்.

அவருக்குத் தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் கொடுத்தது. அதை அப்படியே அவர் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். இதுபோல இவருக்கு வழங்கப்பட்ட ஏராளமான விருதுகளையும் பணமுடிப்புகளையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விவசாயிகள் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவருக்கு 80-வது பிறந்த நாளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டு ஒரு கோடி ரூபாயையும் ஒரு காரையும் கட்சி இவருக்கு வழங்கியது. அவற்றை அப்படியே கட்சிக்குத் திருப்பிக்கொடுத்துவிட்டவர் நல்லகண்ணு. இன்றைக்கும் இவருக்குக் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு இல்லை.  

இதற்கு முன்பு சென்னைப் பட்டினப்பாக்கம் பகுதியில் அரசுக் குடியிருப்பில் நல்லகண்ணுவுக்கு அரசால் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அதை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார். பிறகு, தி.நகர் சி.ஐ.டி காலனியில் அரசுக் குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அதை வாடகையின்றி வசித்துக்கொள்ளுமாறு அரசு கூறியபோது, ‘இலவசமாக வேண்டாம். எனக்கு வாடகையை நிர்ணயம் செய்துகொடுங்கள்’ என்று கேட்டு கடைசிவரை வாடகை செலுத்திவந்தார்.

நாட்டின் சுதந்திரத்துக்காக மட்டும் இவர் போராடவில்லை. இன்றைக்கு அவருக்கு 94 வயதாகிறது. இன்றைக்கும்கூட ஏழை எளிய மக்களுக்காக வீதியில் நின்று போராடிவருபவர் நல்லகண்ணு.

‘தாமிரபரணி நதியைப் பாதுகாத்த தலைமகன்’ என்று நல்லகண்ணுவுக்கு ஒரு பட்டம்கூட கொடுக்கலாம். தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலக்கிற ஒரு நதி உள்ளதென்றால், அது தாமிரபரணி நதி மட்டுமே. அப்படியொரு பெருமைமிக்க தாமிரபரணி நதியை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க, நீதிமன்றத்தின் படியேறி தானே வாதிட்டு வெற்றியும் கண்டவர் நல்லகண்ணு.

இப்படிப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஒரு தலைவரை, அவர் வசித்துவந்த வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறது தமிழக அரசு. காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவருமான கக்கனின் வாரிசுகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது அரசு. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கக்கன் வாரிசுகளுக்கு வாடகையில்லாமல் குடியிருக்க ஒதுக்கப்பட்ட வீடு அது.

‘இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றன… உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது…’ என்று அரசு சொல்லும் காரணங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால், நல்லகண்ணுவுக்கும் கக்கனின் வாரிசுகளுக்கும் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்துவந்த பிற மக்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களை அங்கிருந்து காலிசெய்திருந்தால், ‘மக்கள் நல அரசு’ என்று எடப்பாடி அரசைப் பாராட்டியிருக்கலாம்.

அரசியல் நேர்மையும் பொதுவாழ்வில் எளிமையும் அற்றுப்போய் வருகிற இன்றைய காலச்சூழலில், தன் வாழ்க்கையை எதிர்காலத் தலைமுறைக்கான ஒரு பாடமாக வைத்திருக்கிற நல்லகண்ணுவை கௌரவத்துடன் நடத்த தவறியிருக்கிறது தமிழக அரசு.

வீட்டைக் காலிசெய்யுங்கள் என்று அரசு நோட்டீஸ் அனுப்பியதும் சத்தமில்லாமல் வீட்டை காலிசெய்துவிட்டு வேறொரு வாடகை வீட்டில் குடியேறிய நல்லகண்ணு, ‘எல்லோரையும்போல நானும் ஒரு சாதாரண மனிதன்தான். எனக்கு வீடு இல்லையென்றாலும் பரவாயில்லை. கக்கன் வாரிசுகள் குடியிருக்க வீடு கொடுக்க வேண்டும்’ என்று இந்த நிலையிலும் மற்றவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் நல்லகண்ணு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism