Published:Updated:

`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்

`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்
`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்

``பா.ஜ.க-வுடன் பேசி வருவதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார்'' எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில் லோக் சபா தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும் நான்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரசாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்படி ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்த பா.ஜ.க தலைவர் தமிழிசை, ``தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்காகத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.க-வுடன் பேசி வருகிறார். மு.க.ஸ்டாலின் ராகுலை முதலில் பிரதமர் என்றார், நேற்று சந்திரசேகரராவிடம் பேசினார்; மறுபுறம் மோடியுடனும் பேசுகிறார்" என்ற புதுக்குண்டை வீசினார். இது தற்போது தமிழக அரசியல் களத்தில் புதுப் புயலாக மாறி வருகிறது. தமிழிசையின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

“பா.ஜ.க கூட்டணி வெற்றிபெறும் எனத் தெரிந்து எங்களுடன் தி.மு.க பேசி வருகிறது” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியைத் தமிழிசை அளித்துள்ளார். தோல்வியின் விளிம்புக்குச் சென்றுவிட்ட பா.ஜ.க-வுக்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால், பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இப்படியொரு `பொய்' பேட்டியை அளிப்பதற்காகத் தன்னை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டாரே என்பதை நினைக்கும்போதுதான் வேதனை. ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தி.மு.க-தான். அதே நேரத்தில் 5 ஆண்டுக் காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமன்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல கொல்கத்தாவிலும் டெல்லிலும் மாறி மாறி பிரசாரம் செய்தவனும் அடியேன்தான். 

`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்

இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.க-வை மிரட்டி கூட்டணி வைத்ததுபோல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள்போல் தட்டிவிட்டு தி.மு.க-வை வம்புக்கு இழுக்க முயல்கிறார்கள். எங்களுக்குக் கிடைக்கவுள்ள வெற்றி அந்த அளவுக்குப் பா.ஜ.க-வை மிரட்டியுள்ளது. மோடி போன்ற பா.ஜ.க தலைவர்களுக்காகத் தமிழிசை பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பார்த்தது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் வந்து சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்துவிட்டுச் சென்றவுடனேயே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” எனத் தெளிவாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும், இந்தச் சந்திப்புக்குக் காது, மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க-வுக்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு தமிழிசை இந்தப் பேட்டியைத் திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதைத் தமிழிசை வழிமொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.க-வை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று போகாத ஊருக்குப் பொய்யான வழி தேடியிருக்கிறார். ஊழல் அ.தி.மு.க-வும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக்கொண்டு தி.மு.க-வின் கொள்கைக் கூட்டணி மீது கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

`தமிழிசை, நீங்கள் போட்டது தப்புக்கணக்கு!' - சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம்

நாங்கள், அ.தி.மு.க - பா.ஜ.க போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சியல்ல. கொள்கையைப் பகிரங்கமாக அறிவித்து; யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் சந்தித்துள்ளோம். தலைவராகப் பொறுப்பேற்றபோது நான் உறுதியளித்ததுபோல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23-ம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம். முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம். தமிழிசையோ, மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்கப் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்துவிட்டால் அரசியலிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும் தமிழிசையும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?