Published:Updated:

முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்

முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்
முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தால்தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நான்கு மணி நேரம் ஸ்தம்பித்தது .

நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், பல்வேறு கட்சியினரின் தேர்தல் பிரசாரமானது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே தலைவர்கள் பிரசாரங்களில் ஈடுபடுகிறார்கள் எனினும் அதற்கு இரண்டு-மூன்று மணிநேரத்துக்கு முன்பாகவே காவலர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை மாற்றி விடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான ஊர்கள் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே அமைந்துள்ளதால், பிரசாரங்களுக்கு வரும் தலைவர்கள் பெரும்பாலான ஊர்களுக்கு உள்ளேயே செல்வதில்லை. அந்தந்த ஊர்களுக்கு வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பிரசாரங்களை முடித்து கிளம்பிவிடுகின்றனர். பிரசாரங்கள் செய்ய வரும் தலைவர்களைக் காண மக்கள் கூட்டமும் தொண்டர்களும் நெடுஞ்சாலையில் கூடிவிடுவதால், மக்களையும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதே காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிடுகிறது. இதனால் சில சமயங்களில் போக்குவரத்துக் காவலர்களும் வாகன ஓட்டிகளும் வாக்குவாதங்களிலும் ஈடுபடுகின்றனர். 

இதன் உச்சக்கட்டமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சியின் வேட்பாளரான மோகனை ஆதரித்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வசவப்பபுரம், முறப்பநாடு, வல்லநாடு, தெய்வச்செயல்புரம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த ஊர்கள் அனைத்தும் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே அமைந்துள்ளதால் நெடுஞ்சாலையிலேயே நின்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். 

முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்

முதல்வர் இந்த ஊர்களில் பிரசாரம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் தடுப்பை ஏற்படுத்தி போக்குவரத்தை மாற்றிவிடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். வசவப்பபுரத்திலிருந்து வல்லநாடு வரையுள்ள நான்கு கிலோமீட்டர் தொலைவுக்குப் பேருந்துகள் எதையும் விடாமல் போக்குவரத்தை வேறு பாதையில் காவலர்கள் மாற்றிவிட்டனர். இதற்குப் பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் பயணிகளிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மாற்றுப்பாதையில் பேருந்துகளைச் செலுத்தாமல்,  நெடுஞ்சாலையிலேயே பேருந்தை நிறுத்தி வைத்தனர். இதனால் சிறிது நேரத்துக்குள் நெடுஞ்சாலை முழுதும் வாகனங்கள்  நின்றதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   

முதல்வரால் முடங்கிய நெடுஞ்சாலை! - போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த பொதுமக்கள்

முதல்வர் பிரசாரத்தை அடுத்தடுத்த ஊர்களில் முடித்துச் செல்லும் வரையிலும் இதே நிலை நீடித்ததால் போக்குவரத்தை சரிசெய்து அந்த 4 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்குக் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேலானது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நான்கு வழிச்சாலையின் இரு புறங்களையும் மறித்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சிறிதும் திரும்பிகூட பார்க்காமல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வரின் செயலுக்குப் பொதுமக்களிடம் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உள்ளூர் அ.தி.மு.கவினர், ``கடந்த 12-ம் தேதி முதல்வர் 2-ம் கட்டப் பிரசாரத்திற்காக, தூத்துக்குடி வந்தார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வசவப்பபுரம், வல்லநாடு, செக்காரக்குடி, ஒட்டநத்தம், ஓனமாக்ககுளம், சவலாப்பேரி ஆகிய ஊர்களில் பிரசாரம் மேற்கொண்டார். இதில், வல்லநாடு, வசவப்பபுரம் ஆகிய இரண்டு ஊர்கள்தான் நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது. முதல்வர் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வாகனங்கள் வாகைக்குளம் விலக்கு வழியாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. வசவப்பபுரம், வல்லநாடு ஊர்களில் பிரசாரம் முடித்துவிட்டு, பேரூரணி விலக்கு வழியாக செக்காரக்குடி சென்ற முதல்வர் 20 நிமிடத்தில் பேசிவிட்டு வந்த வழியேத் திரும்பினார். அது சிறியசாலை என்பதால், முதல்வர் காண்வாய் உடன் சில வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. போக்குவரத்து  நெரிசல் ஏற்படும் என்பதால், கட்சியினரின் பிற வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. செக்காரக்குடியில் பேசிவிட்டுத் திரும்பிய முதல்வர், தெய்வச்செயல்புரம் வழியாக மீதியுள்ள 3 ஊர்களில் பேசினார். அதிகபட்சமாக 30  நிமிடங்கள்தான் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதுவும், மாற்றுப் பாதையில் செல்லாத அடுத்தடுத்த ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் 2  மணிநேரம் காத்திருக்கவில்லை" என்றனர்.

Vikatan