Published:Updated:

தி.மு.க மீது தமிழிசையும் ஜெயக்குமாரும் பாய்வதற்கான பின்னணி என்ன?

தி.மு.க மீது தமிழிசையும் ஜெயக்குமாரும் பாய்வதற்கான பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவை ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பாலமாக இருந்தவர் ஒரு குஜராத்தி

தி.மு.க மீது தமிழிசையும் ஜெயக்குமாரும் பாய்வதற்கான பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவை ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பாலமாக இருந்தவர் ஒரு குஜராத்தி

Published:Updated:
தி.மு.க மீது தமிழிசையும் ஜெயக்குமாரும் பாய்வதற்கான பின்னணி என்ன?

இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது, தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு. ஆனால் தேர்தலுக்கு இருந்த கூட்டணிகள், ரிசல்ட் வருவதற்கு முன்பே மாறிவிடுமோ என்பதைப் போல தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. அதில் முக்கியமானது, ‘‘பி.ஜே.பி-யிடம் ஐந்து கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்டு, தி.மு.க பேசி வருகிறது'' என அ.தி.மு.க-வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதுதான்.

அதுபற்றி தமிழ்நாடு பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘பதவிக்காக பி.ஜே.பி-யுடன் ஸ்டாலின் பேசி வருகிறார். தி.மு.க. நிறம் மாறும் கட்சி. அவர்கள் சந்திரசேகர ராவுடன் பேசுவார்கள். ராகுல் காந்தியுடன் பேசுவார்கள். மோடியுடனும் பேசுவார்கள்'' என்றார். உடனே ஜெயக்குமார், ‘‘சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பி.ஜே.பி என மூன்று படகுகளில் தி.மு.க பயணம் செய்கிறது'' என தமிழிசையின் குறளுக்கு தெளிவுரையும் சொல்லியிருக்கிறார்.

தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் ஸ்டாலினைச் சந்தித்த பிறகுதான் அரசியல் மாற்றங்கள் தொடர்பான பேச்சுகள் ஆரம்பித்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19-ம் தேதி முடிந்து, வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது மோடியா, ராகுல் காந்தியா?' என்கிற விவாதம் சூடுபிடித்திருக்கும் சூழலில், ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத தலைவர்களை அவர் சந்தித்து, ஆதரவு கேட்டு வருகிறார். கேரள முதல்வர் பிரனாயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்தும் பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினிடம் பேசியது மற்றவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மற்றவர்கள் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாதவர்கள். ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தவர் ஸ்டாலின். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களைக் கைப்பற்றும்' எனக் கணக்குப் போட்டுத்தான், ஸ்டாலினைச் சந்திரசேகர ராவ் அணுகியிருக்கிறார். இப்படியான சூழலில்தான், ``பி.ஜே.பி-யுடனும் தி.மு.க. பேசிக் கொண்டிருக்கிறது'' எனத் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன். இந்தக் கருத்துக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. தமிழிசை சொன்ன கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் டெல்லியில் நான்கு நாள்களுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்.

தி.மு.க மீது தமிழிசையும் ஜெயக்குமாரும் பாய்வதற்கான பின்னணி என்ன?

‘‘டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவை, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பாலமாக இருந்தவர் ஒரு குஜராத்தி. இவர் கோவையில் மால் ஒன்றை வைத்திருக்கிறார். அவர் தி.மு.க. வட்டாரத்துடன் நெருக்கமாக இருப்பவர். அவர் மூலம்தான் அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள், அரசியல், நாடாளுமன்றத் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்கள் அப்போது பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தார். அவரை முதலில் ஸ்டாலின் தவிர்க்க நினைத்தார். அதுதொடர்பான செய்திகள் வெளியானபோது, `நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் சந்திக்க வாய்ப்பு இல்லை' என்கிற தகவல் வெளியானது.

`சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தால் காங்கிரஸ் கடுப்பாகும். `ராகுல் காந்தியை கோமாளி' என விமர்சனம் செய்த ராவைச் சந்தித்தால் காங்கிரஸ் கட்சி கொதித்து விடும்' என நினைத்துதான் அந்தச் சந்திப்பைத் தவிர்த்து வந்தார். அதன்பிறகு என்ன நடந்ததோ, சந்திப்புக்கு ஸ்டாலின் சம்மதித்தார். அதாவது, சபரீசன் சொன்ன பிறகுதான், ஸ்டாலின் - ராவ் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தேர்தலில் பி.ஜே.பி-க்கு மெஜாரிட்டி கிடைக்காதநிலை ஏற்பட்டால், மாநிலக் கட்சிகளின் ஆதரவு வேண்டும். அதற்கான முயற்சியை பி.ஜே.பி-க்காக சந்திரசேகர ராவ் எடுத்து வருகிறார் என்கிற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. அதில் கிடைத்த ஆவணங்கள், முக்கியமானவை. அதனையொட்டியே இத்தகைய அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன'' என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், இந்த விஷயங்கள் அனைத்தையும் மறுக்கிறது தி.மு.க...

‘‘தோல்வி பயத்தால் குழப்பத்தை ஏற்படுத்த தமிழிசை முயற்சி செய்கிறார். மோடியை இந்தியாவில் எந்தவொரு தலைவரும் சொல்லாத அளவுக்கு விமர்சனம் செய்தவர் எங்கள் தளபதி. `மோடி ஒரு சாடிஸ்ட்' எனக் கடுமையாக  விமர்சனம் செய்தார். நிச்சயமாக பி.ஜே.பி உடன் தி.மு.க சேரவே சேராது!'' எனச் சொல்கிறார்கள் தி.மு.க-வினர். இதற்கேற்ப ‘‘பி.ஜே.பி-யோடு பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார். தரகு பேசும் கட்சி அல்ல தி.மு.க'' எனக் காட்டமாக கருத்து வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். 

பேச்சு நடந்ததா, நடக்கவில்லையா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்த நேரத்தில் சம்பந்தமேயில்லாமல் வடிவேலுவின் டயலாக் நினைவுக்கு வருகிறது...

‘‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...இந்தக் கோட்டை நீயும் தாண்டக்கூடாது, நானும் தாண்டமாட்டேன்!’’