`எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது' எனக் கமலின் பேச்சுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜ் என்பவரை ஆதரித்து, 'மக்கள் நீதி மய்யம் கட்சி'யின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார், அதில், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என அவர் பேசியிருப்பது கடந்த சில நாள்களாகச் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இவரின் பேச்சுக்கு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் அதேவேளையில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாகப் பா.ஜ.க, அ.தி.மு.க சார்பில் இருந்து அதிக எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த விவகாரத்தில் கமலை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், நமது அம்மா இதழிலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. கமல் மீது இரண்டு வழக்கும் பதியப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது பிரதமர் வரை சென்றுள்ளது. கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி நியூஸ்எக்ஸ் சேனலுக்கு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ``எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. இந்து மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் உண்மையான இந்து அல்ல. இந்து மதம் அமைதியைப் போதிக்கிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. இந்து மதம் வசுதெய்வ குடும்பத் தத்துவத்தை நம்புகிறது. இந்தத் தத்துவம் ஒருவரைக் காயப்படுத்தவோ, கொல்லவோ இந்துக்களை அனுமதிப்பதில்லை. இதைத்தான் இந்து மதம் மக்களிடம் போதிக்கிறது" எனக் கூறியுள்ளார்" எனக் கூறியுள்ளார்.