Published:Updated:

அமெரிக்கா - இரான் விரிசலும் இந்தியா எதிர்கொள்ளும் எண்ணெய்ச் சிக்கலும்!

அமெரிக்கா - இரான்
அமெரிக்கா - இரான்

அமெரிக்கா - இரான் பிரச்னை காரணமாக உலக அரங்கில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

மெரிக்க வல்லரசின் 59-வது அதிபருக்கான தேர்தல், வரும் 2020-ம் ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றன. இருநாடுகளில் யார் அடுத்து ஆட்சிக்கு அமர்ந்தாலும் இரானை மையமாகவைத்து நடக்கும் சர்வதேச எண்ணெய்ச் சிக்கலுக்குத் தீர்வுகாண்பது தலையாய காரியமாக இருக்கும்.

இரான் கடந்த மே 9, 2019 அன்று அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் விதிகளை மீறி, தனது யுரேனியம் கையிருப்புகளைத் தானே சேமித்து வைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. `அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானியின் இந்த முடிவுக்கு முழுக்க முழுக்கக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்தான்' என ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் இதர நாடுகள் விமர்சித்துள்ளன. இரானுடனான எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா இந்தியாவுக்குக் கொடுத்த கால அவகாசம் கடந்ததையடுத்து, இரான் இந்த முடிவை அறிவித்திருப்பது கவனிக்க வேண்டியது.

அமெரிக்கா - இரான் இடையேயான இந்த விரிசல் இன்று, நேற்று தொடங்கியது அல்ல... 1984-ம் ஆண்டிலிருந்தே வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் எண்ணெய் அரசியல் யுத்தம். இதற்கு ஒரு முடிவுகட்டும் விதமாக, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து இரானுடன் அணு ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைக் கையொப்பமிட்டிருந்தார்.

அமெரிக்கா - இரான் விரிசலும் இந்தியா எதிர்கொள்ளும் எண்ணெய்ச் சிக்கலும்!

இதன் முக்கிய நோக்கம், இரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையிருப்பு வைக்காமல் வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும்; இதன்மூலம் இரான் மீதான மற்ற நாடுகளின் பொருளாதாரத் தடை விலக்கிக்கொள்ளப்படும் என்பதே. இந்த ஒப்பந்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அந்த வருடம் அக்டோபர் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை ஐக்கிய நாடுகள் சபையும் முழுமையாக வரவேற்று ஏற்றுக்கொண்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இரானுடனான ஒபாமாவின் ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். ``இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது" என்றார். 2018 மே மாதம் 8-ம் தேதி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். மீண்டும் இரான் மீதான பொருளாதாரத் தடை தொடர்வதாகவும் கூறினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், 2018 நவம்பர் 4-ம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் இரான் உடனான எண்ணெய் வர்த்தகத்தை முறித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஏனைய நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், அணு ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இரான் உடனான ஒப்பந்தத்தைத் தொடர்வதாகவும் அவை அறிவித்தன. இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.  

அமெரிக்காவின் இந்த முடிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டது, இரான். சுமார் 10 லட்சம் பேரல் அளவுக்கு சரிவைச் சந்தித்தது. இரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இத்தாலி, கிரீஸ், தைவான் உள்ளிட்ட நாடுகள் முற்றிலுமாக நிறுத்திக்கொண்டன. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் படிப்படியாகக் குறைத்துக்கொண்டன. ஆனால், இரானுடன் பெருமளவு எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா, துருக்கி முதலிய நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 2019 மே 2-ம் தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்தது அமெரிக்கா. சராசரியாக இரான் ஏற்றுமதி செய்து வந்த சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய், 1 மில்லியனாகக் குறைந்தது. மேலும், அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் விலகின. வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரானின் பணவீக்கம் நான்கு மடங்கு அதிகரித்தது. சர்வதேச நீதிமன்றம் இரான் மீதான தடையை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல் மேலும் பல தடைகளை அறிவித்தபடி இருந்தது.

அமெரிக்கா - இரான் விரிசலும் இந்தியா எதிர்கொள்ளும் எண்ணெய்ச் சிக்கலும்!

இரான் பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரவே, அந்த நாட்டு அதிபர் ஹசன் ரொஹானி, கடந்த சில நாள்களுக்கு முன்பு 2015-ம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதில், தங்கள் நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாகத் தெரிவித்தார். ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் அமெரிக்கத் தடைகளை எதிர்த்து, ஒப்பந்தத்தின்படி உள்ள கடமைகளை நிறைவேற்றினால் 60 நாள்களுக்குள் யுரேனியத்தை விற்பனை செய்வதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கு ஒப்பந்த நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள், `அமெரிக்காவே இரானின் நிலைபாட்டுக்கு முழுக் காரணம்' எனக் குற்றம்சாட்டி வருகின்றன.

இரானின் இந்த அறிவிப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 2019 மே 9-ம் தேதி இரானின் உலோக ஏற்றுமதிக்கு எதிராகப் புதிய தடையை விதித்துள்ளது, அமெரிக்கா. தற்போதைய இந்தத் தடையின்மூலம், இரான் நாட்டு உலோகங்களை, தங்கள் நாட்டின் துறைமுகங்களில் அனுமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீறினால் சர்வதேச வங்கி நடைமுறை மூலம் கணக்குகள் முடக்கப்படும், டாலர்கள் மூலமான பணப் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்படும், அமெரிக்காவில் உள்ள மற்ற நாடுகளின் சொத்துகள் முடக்கப்படும் என்று தொடர்ச்சியான அறிவிப்புகளின்மூலம் மற்ற நாடுகளை எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் எதிரொளிக்கும் தாக்கம்:

இரானிடமிருந்து அதிக அளவு எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஒட்டுமொத்த இறக்குமதியில் 10 சதவிகித எண்ணெய்யை இரானிடமிருந்து மட்டுமே பெறுகிறது. இதுமட்டுமல்லாமல், இரானின் சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்தும் ஒப்பந்தம் உட்பட மேலும் பல ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிட்டிருக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு இந்தியா நடக்குமானால், மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என இந்தியப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இரான் தவிர மற்ற நாடுகளுக்கு, `டாலரில்' பணம் செலுத்துவதால், அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும். இந்திய ரூபாயின் மதிப்பும் குறையும். ஏற்கெனவே வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி இந்தியாவுக்கு  அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், தற்போது இரானிடமிருந்தும் நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பினால் இந்தியா கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்தபின் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை வேகமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா - இரான் பிரச்னை காரணமாக உலக அரங்கில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அமெரிக்காவின் இந்த அவசரக்குடுக்கை முடிவுகளால் இரான் மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு