Published:Updated:

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?
News
ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

"நாம் தமிழர் கட்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரான ஒரு கட்சி. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்."

தி.மு.கவும், நாம் தமிழர் கட்சியும் இணையான கட்சிகள் இல்லை என்றாலும் இணையத்தில் நடக்கும் மோதலில் உக்கிரம் உச்சமாகத்தான் இருக்கும். சீமான் கட்சியினர் மற்றும் தி.மு.கவினர் இடையே இலைமறைகாயாக இருந்த மோதல், இப்போது `முரசொலி' தலையங்கம் மூலமாக முச்சந்திக்கு வந்துள்ளது.

தி.மு.க-வின் `முரசொலி’ ஏட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அவருடைய பெயரைக் குறிப்பிடாமலேயே கடுமையாக விமர்சித்து கடந்த வாரம் தலையங்கம் வெளியானது. ``நாம் தமிழர் என்பதற்காக உலக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொண்டு கர்ஜனை என்று நினைத்து மேடைகளில் கத்திக்கொண்டு திரியும் ஒருவர்…” என்று தொடங்கிய அந்தத் தலையங்கத்தில் சீமானைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். காலையில் தலையங்கம் வெளியாக, அன்று இரவு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். அதில் பேசிய சீமான், தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்தார்.

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவருடைய பேச்சின் சுருக்கம் இது...

``இன்றைக்கு முரசொலியில் தலையங்கமே நான்தான். என்னடா உங்க பிரச்னை... என்னை வாய்ச்சொல் வீரர்னு சொன்னா... கச்சத்தீவை மீட்போம்னு ஐம்பது வருசமா சொல்றீங்களே… அதைவிடவா ஒரு வாய்ச்சொல் கேவலம் இருக்கு.... வாய்வீச்சு வீரர்னு எழுதுறே... உன் தலைவர் என்ன வாள்வீச்சு வீரரா, வரச்சொல்லுப் பார்ப்போம். ரெண்டு பேரும் வாள்வீசிப் பார்ப்போம், இல்ல... கம்பு சுத்திப் பார்ப்போம், இல்ல... கராத்தே போட்டுப் பார்ப்போம். யார் வரப்போறது... ஸ்டாலினா... உதயநிதி ஸ்டாலினா,  ஏதோ என் சொந்தக்காரன் எல்லாம் தி.மு.கவுல இருக்கான்னு, மன்னிச்சிட்டு கடந்துபோய்க்கிட்டு இருக்கேன். தேவையில்லாம என்னைய நோண்டாத. ஒத்தைக்கு ஒத்தை... நேருக்கு நேரா நில்லு. 

அய்யோ... `இவன் வளர்கிறானே...’ என்று எல்லோரும் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். நெருப்பைக் குப்பையைப் போட்டு மூடவே முடியாது ராஜா… பற்றியெரிந்து நாங்கள் வருவோம். நான் சத்தியத்தின் மகன். என்னை வீழ்த்துவதென்பது சரித்திரத்திலேயே வாய்ப்பில்லை. என்னைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்படுகிறார்கள்? 

அயோத்திதாசரைத் தெரியுமா... ரெட்டைமலை சீனிவாசனைத் தெரியுமான்னு எழுதுற... ஆ.ராசாவைக் கேட்டுப்பார் என்று எழுதுற.. அயோத்திதாசரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் தி.மு.க-விலேயே ஆ.ராசாவுக்குத்தான் தெரியுமென்றால், ஆ.ராசாவை தி.மு.க தலைவராக ஆக்கிட்டுப்போங்க. உங்களை மிச்சசொச்சம் இல்லாம ஒழிச்சிட்டுதான்டா நான் போவேன். `கடைசி ஆயுதம் ஸ்டாலின்தான்’ என்று அண்ணன் கொளத்தூர் மணி பேசுகிறார். அப்படின்னா... இந்தப் போர் ரொம்பக் காலம் நடக்காது... கொஞ்சநஞ்சம்தான் திராவிடக்கொள்கையே இருக்குதுன்னு அவங்களே ஒத்துக்கிட்டாங்க... அது என்ன கொள்கை, பெரியார், அண்ணா, கிருஷ்ணரைப் போட்டு ஓட்டு கேட்குற கொள்கை.

வா... என்னுடன் தர்க்கம் பண்ண வா. அது என்ன என்னுடன் தர்க்கம் பண்ண துரைமுருகனை அனுப்பமாட்டேங்குற, பொன்முடியை அனுப்பமாட்டேங்குற... ஏன் ஆ.ராசாவை அனுப்புறேங்குற... இனி தினமும் உனக்கும் எனக்கும்தான் சண்டை. என்னை வென்றுகாட்டிரு பார்ப்போம். வண்டி வண்டியா வச்சிருக்கேன். இறக்கிவிட்டேன்னா ஒண்ணும் உன்கிட்ட பதில் இருக்காது” சீமானின் சீற்றமான இந்தப் பேச்சுக்கு அவரின் தம்பிமார்கள் கைகளைத்தட்டிக் கொண்டேயிருந்தனர்.

இந்த மோதல் போக்கு தமிழக அரசியலில் பரபரப்பாகப் பார்க்கப்படும் நிலையில், `ஏன் இந்த மோதல்?’ என்கிற கேள்வியை இருதரப்பின் முன்பாகவும் வைத்தோம். 

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

முதலில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்.
``தன்னுடைய `பகை இலக்கு’ என்னவென்று ஒவ்வோர் இயக்கமும் முடிவுசெய்யும். அந்தப் பகை இலக்கை வைத்துத்தான் மக்கள் வகைப்படுத்தப்படுவார்கள். நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் `பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார்’ என்று இருந்தது. பிறகு, ம.பொ.சி போன்றவர்கள் `தமிழர் - தமிழர் அல்லாதார்’ என்று பிரித்தனர். அதன்பிறகு, `இந்துக்கள் - இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று பி.ஜே.பி பிரித்தது. `தலித்கள் - தலித் அல்லாதவர்கள்’ என்று டாக்டர் ராமதாஸ் பிரித்தார். ஒவ்வொருவரின் அரசியலும் இங்கிருந்துதான் தொடங்கும்” என்று ஆரம்பித்த சுப.வீரபாண்டியன் இந்த விவகாரம் குறித்து விரிவாகவே பேசினார். 

``சீமான் செய்யும் அரசியல் ஒன்றும் புதிது அல்ல. இது பலமுறை தோற்றுப்போன பழைய முயற்சி. ஏற்கெனவே ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் செய்த அதே விஷயம்தான். `தமிழ்த் தேசியம்’ என்பதை வைத்துக்கொண்டு தி.மு.க-வை ம.பொ.சி எதிர்த்தார். தலித்கள் என்கிற அடிப்படையில் குணா, சிவகாமி, ரவிக்குமார் போன்றவர்கள் தி.மு.க-வை எதிர்த்தனர். ஈழத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் எதிர்க்கிறார். அவ்வளவுதான்.

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

ம.பொ.சி-யின் வளர்ச்சி எவ்வளவு பெரியது தெரியுமா? ஏ.பி.நாகராஜன், கவிஞர் கா.மு.ஷெரீப், கு.ம.பாலசுப்பிரமணியம், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, புலவர் தீரன் உட்படக் கலைத்துறையினர், இலக்கியவாதிகள் என மிகப்பலரும் ம.பொ.சி-யின் பக்கம் இருந்தார்கள். மிகப்பெரிய செல்வாக்குடன் ம.பொ.சி இருந்தார். `மனோகரா’ மாதிரியே ஒரு படம்கூட எடுத்தார்கள். தி.மு.கவைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களின் பொதுக்கூட்டங்களில், ம.பொ.சி பேசுவதற்கு முன்பாக அணுகுண்டு அய்யாவும், விபூதி வீரமுத்துவும் பேசுவார்கள். தி.மு.க-வைப் பற்றி அவ்வளவு மோசமாக அவர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசிய பிறகு, ம.பொ.சி வந்து கண்ணியமாகப் பேசுவார். சீமானைப் பொறுத்தவரை, இவரே நேரடியாக விபூதி வீரமுத்து போலவும் அணுகுண்டு அய்யாவு போலவும் பேசுகிறார். அதுதான் வித்தியாசம். அப்படிப்பட்ட ம.பொ.சி-யே கடைசியில் தி.மு.க.விற்கு வந்து சேர்ந்தார்.

நாம் தமிழர் கட்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரான ஒரு கட்சி. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். திராவிட எதிர்ப்பு என்பதே மறைமுகமான பார்ப்பனிய ஆதரவுதான். நாம் தமிழர் கட்சியின் பேச்சு எல்லாமே மறைமுகமாக பி.ஜே.பி-க்குதான் உதவும்.
தவறான கோட்பாடு என்று எனக்குப் படுவது, இன்னொருவருக்குச் சரியான கோட்பாடாகப் படும். எனவே, சரி தவறு என்பதெல்லாம் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால், மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்கிற கேள்வி இருக்கிறது. கருத்தியல் ரீதியில் மாற்றம் நிகழுமானால், அது அவர்களின் உரிமை. அந்த மாற்றம் சுயநலத்துக்காக நிகழுமானால், அது தவறானது. 

2006-ல் தி.மு.க-வுக்காக என்னுடன் சேர்ந்து வாக்கு கேட்டவர்தான் அவர். அவருக்கு ஓர் உள்நோக்கம் இருந்திருக்கிறது. அடித்தளத்தில் தி.மு.க எதிர்ப்பு அல்லது திராவிட எதிர்ப்பு என்பது அவருக்குள் இருந்திருக்க வேண்டும். இதுதான் அவருடைய உண்மை முகம் என்று இப்போது நினைக்கிறேன். அ.தி.மு.க., தி.மு.க என எல்லாக் கட்சிகளையும் சேர்த்துத்தானே திட்டுகிறார் என்று அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. தி.மு.க-வை அழிப்பேன் என்று அவர் பேசியிருக்கிறார். எனவே, அடிப்படையில் தி.மு.க. எதிர்ப்பு என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கம்.

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

பல செய்திகளை உண்மைக்கு மாறாகவே பேசுகிறார். தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லையென்றால், 400 கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் என்று சொல்கிறார். `எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிறேன்... உண்மையையே பேசுகிறேன்.... நான் சத்தியத்தின் பிள்ளை...’ என்றெல்லாம் சொல்கிறார். அந்தச் சத்தியத்தின் பிள்ளைக்கு ஒரே ஒரு கேள்வி... வேட்பாளரை நிறுத்தவில்லையென்றால், 400 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொன்னவர் யார், அதை மட்டும் அவர் சொல்லட்டும்” என்று சொன்ன சுப.வீரபாண்டியன், ``சமூகநீதி இம்மண்ணில் தேவைப்படுகிற காலம்வரை, திராவிட இயக்கம் வாழும். தி.மு.க-வை யாரும் அழித்துவிட முடியாது” என்றார் உறுதியுடன்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் ஊடகத் தொடர்பு இணைச் செயலாளரான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டபோது, ``எங்களிடம் திராவிடச் சித்தாந்தம் இருக்கிறது. அதன் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுவருகிறோம். இந்தியாவுக்கு ஒரு ஆர்.எஸ்.எஸ் இருப்பது மாதிரி, தமிழ்நாட்டுக்கு நாம் தமிழர் கட்சி இருக்கிறது. மேடை நாகரிகமின்றி சீமான் பேசுகிறார். ஏறத்தாழ 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவரை, மூத்த திராவிடப் பேரியக்கத்தின் தலைவரை மரியாதை இல்லாமல் பேசுகிறார். அடுத்து ஆட்சிக்கு வரப்போகிற ஒரு கட்சியைப் பற்றிப் பேசினால், தமக்கு விளம்பரம் வெளிச்சம் கிடைக்கும் என்கிற உத்தியுடன் கண்டபடி அவர் பேசுகிறார். `முரசொலி' தலையங்கத்தில் தம்மைப் பற்றி எழுதிவிட்டார்கள் என்று, நாம்தான் தமிழகத்தின் எதிர்காலம் என நினைக்கிறார்.

துண்டுச்சீட்டு வைத்துப் பேசுவதை விமர்சிக்கிறார். துண்டுச்சீட்டு வைத்துப் பேசக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன? ‘கேடில் விழுச்செல்வம் மாடல்ல...’ என்ற குறளில் `மாடல்ல..’ என்பதை மாடு என்கிறார் சீமான். `மாடல்ல’ என்பது `செல்வமல்ல’ என்பதுதான் பொருளே தவிர, மாடு என்று அர்த்தமல்ல. ஆனால், அதை ஒரு கூட்டம் கைதட்டி ரசிக்கிறது. 

நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கிறேன். தமிழ்த்தேசியம் பேசுகிறவர், எதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத் தேர்தலில் நிற்க முடியும், பிறகு எப்படித் தமிழ்த் தேசியம் அமைப்பீர்கள், வேண்டுமானால் ஒன்றைச் செய்யுங்கள், சீமான் தலைமையில் போராளிக் குழுக்களை அமைக்கிறோம் என்று அறிவியுங்கள்” என்றார். 

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

இந்த மோதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசனிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் மிக மூர்க்கமாக நாம் தமிழர் கட்சி மீது தாக்குதல் தொடுத்தனர். `நாம் தமிழர் பைத்தியங்கள், மெண்டல்கள்...’ என்றெல்லாம் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, ஈழத்தில் நடந்த கடைசிக்கட்ட போருக்குப் பிறகு தி.மு.கவுக்கு எதிர் நிலையில் இருந்துவரும் நாங்கள் அரசியல்ரீதியாக அவர்களை விமர்சித்துவருகிறோம். 7 பேர் விடுதலையில்கூட, அவர்களை விடுதலைசெய்ய வேண்டுமென்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், கொலையாளிகளைக் கொலையாளிகளாகத்தான் பார்க்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்கிறார். இந்த நாடகத்தை இவர்கள் நீண்டகாலமாக நடத்திவருகிறார்கள். 

இவர்களைத் தோலுரித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை ஒரு கடமையாக நாங்கள் செய்துவருகிறோம். இதையெல்லாம் எங்கள் மேடைகளில் பேசிவருகிறோம். அந்த ஆத்திரத்தில், அவர்கள் எங்களை மிகவும் தரக்குறைவாகத் தாக்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் கேவலமாகத் தாக்குகிறார்கள். தலைவர் சீமான் குறித்து மிகத் தரக்குறைவான முறையில் ஒரு மனநோயாளி பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானது. அந்த ஆடியோவை, ஒரு கொண்டாட்ட மனநிலையில் மிகவும் வன்மத்துடன் தி.மு.க-வினர் தீவிரமாகப் பகிர்ந்தார்கள்.

பி.ஜே.பி முகாமிலிருந்தும் எங்களுக்கு எதிராக இதைவிட மோசமான தாக்குதல்கள் சமூக ஊடகங்களில் நடத்தப்படுகின்றன. பி.ஜே.பி-க்காரர்களைப் பொறுத்தவரையில், அப்படித்தான் செய்வார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அறிவார்ந்த ஓர் இயக்கமாகப் பார்த்துவந்த தி.மு.க-விலிருந்து இப்படிப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல்கள் வருவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. `அன்புக்குரிய தொலைக்காட்சியில் அவரது பேச்சை ஒளிபரப்பினார்கள்’ என்று 'முரசொலி' தலையங்கத்தில் எழுதுகிறார்கள். அது எந்தத் தொலைக்காட்சி என்பது தெரியவில்லை. அது மிரட்டும் தொனியில் இருக்கிறது. இதற்கெல்லாம் நாம் தமிழர் கட்சி அஞ்சப்போவதில்லை. அரசியல்ரீதியாக எங்கள் கடமையை அச்சமின்றி நாங்கள் தொடர்வோம்” என்றார் உறுதியாக.

தமிழர் நலனுக்காகச் சண்டைகள் போடலாம்... தமிழர்களுக்குள்ளேயே சண்டை போட்டால்?