Published:Updated:

ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!

ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!
ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!

இந்தக் குரல்கள் எப்போதும் பி.ஜே.பி தலைவர்களிடமிருந்து எழுபவை. இன்று இடம் மாறி ஒலிக்கின்றன. இந்தக் கூட்டணி தேர்தலுக்கு மட்டுமா... இல்லை, கொள்கைக்குமா என்ற கேள்விகள்தான் எழுகின்றன.

தீப்பெட்டி இரண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும்; ஆனா, இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்” என்பது சாத்தியமோ... இல்லையோ, ஆனால் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜியிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்கும் என்பது உண்மை. கேட்கப்படும் எல்லா  அரசியல் கேள்விகளுக்கும் எப்போதும் ‘ரேப்பிட் ஃபயர்’ பதில்கள்தான். தேசிய ஊடகங்கள் அதிகமாகத் தமிழக அரசியலைக் கவனிக்க ஆரம்பித்துள்ளன. அதற்கான காரணிகளில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். தமிழ் சினிமாவில் வேண்டுமானால், எதுகை, மோனை வசனங்களுக்கு டி.ஆர் பிரபலமாக இருக்கலாம். ஆனால் அரசியல் களத்தில் எப்போதும் அந்த இடம் கே.டி.ஆர்.பிக்குத் (K.T.ராஜேந்திர பாலாஜி)தான்.

ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!

சமீபத்தில், பூரண மதுவிலக்கை  உடனடியாக அமல்படுத்தாதது ஏன் என்பது பற்றிய அவரின் பேச்சு மிகப்பிரபலமடைந்தது. அவரின் கருத்தியல் உச்சம்பெற்ற பேச்சுகளில் அதுவும் ஒன்று. “குடிக்கிறவனைத் திடீரென்று  கூப்பிட்டு, 'இனி நீ குடிக்க கூடாது' என்று சொன்னா அவனுக்கு கை, காலு எல்லாம் நடுக்க ஆரம்பிச்சுடும். சிலருக்கு, காலையில் குடிக்கலைனா நரம்புத் தளர்ச்சி வந்திடும். இது அவரின் உயிருக்கே  ஆபத்தாகிவிடும். அவரின் உயிரைப் பாதுகாக்கிற பொறுப்பு முதல்வர் பழனிசாமிக்கும் அமைச்சர்களாகிய எங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தவில்லை” என அவர் சொன்னபோது வட இந்தியாவில்கூட கரவொலிகள் அதிர்ந்தன. தமிழகத்தில் என்னதான் படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்கிறோம் எனச் சொன்னாலும், கடந்த மூன்றாண்டுகளாக அது சாத்தியப்படாததாகவே உள்ளது. ஆயிரம் கடைகளுக்கு மேல் குறைக்கப்பட்டாலும் விற்பனை குறைந்தபாடில்லை.

“மோடி எங்களுக்கு டாடி” என்ற அவரின் அடுத்த பேச்சு, வேற லெவலில் வைரலாகி டெல்லியின் கட்சித் தலைமைகளிடையே அவரைப் பிரபலப்படுத்தியது. தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்பே பலரும், அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியை எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டணி உறுதியான பிறகு அதுகுறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி,  "தமிழக மக்கள், அ.தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளனர். மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியும், மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடனான எடப்பாடி ஆட்சியும் தொடர வேண்டும். அம்மா இல்லாத சூழலில் மோடிதான் எங்களுக்கு டாடி, இந்தியாவுக்கும் டாடி” என்று ரகளை காட்டினார்.

ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!

“உங்ககிட்ட மட்டும்தான் துட்டு இருக்கா... எங்ககிட்ட இல்லையா? சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பு நடத்தினால் தி.மு.க-விலிருந்து 45 எம்.எல்.ஏ-க்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பார்கள்” என எதிர்க்கட்சிகளுக்கு சொடுக்குப் போட்டு சவால்விட்டார். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றிப் பேசும்போதுகூட, “அவரும் பாவம். முதல்வராக வேண்டும் என வெறிப்பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கு என்ன செய்ய முடியும்? ஒரு சினிமா எடுத்து முதல்வராக நடித்துவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என அவர் சொல்ல... இதைக் கேட்ட எதிர்தரப்புகள் கோபம் கொண்டனர். இந்த வரிசையில் தற்போது சர்ச்சையாகியிருப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பேச்சுக்கு அவர் தெரிவித்த மறுப்புதான். ஆனால், இந்த விவகாரத்தில் அவரின் தொடர் பேச்சுகள் அரசியல் நிறத்தை ‘காவி’ மயமாக்குகின்றன.

கமலின் பேச்சுக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கும் போது, “அவரின் கருத்து, முட்டாள்தனமான கருத்து. எதற்கெடுத்தாலும் இந்து கடவுளையே திட்டுவார்கள். அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியுமா என்ன? இந்துக்கள் மனது புண்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துகளை எல்லாம் வேறு மதத்தைப் பார்த்துச் சொல்ல முடியுமா?" என்றார். இந்தக் குரல்கள் எப்போதும் பி.ஜே.பி தலைவர்களிடமிருந்து எழுபவை. இன்று இடம் மாறி ஒலிக்கின்றன. இந்தக் கூட்டணி தேர்தலுக்கு மட்டுமா... இல்லை, கொள்கைக்குமா என்ற கேள்விகள்தான் எழுகின்றன.

ராஜேந்திர பாலாஜியின் அதிரடிப் பேச்சுகளும்... சரவெடி சர்ச்சைகளும்!

“கமல் பேசிய பேச்சுக்கு, நான் பேசியது குறைவான பேச்சுதான்” எனச் சமாதானம் சொல்கிறார், ராஜேந்திர பாலாஜி. அதேவேளையில், “அரசியல் தலைவரின் கருத்துகள் எப்போதும் சமூக நல்லிணக்கத்துக்கான கருத்தாக அமைய வேண்டும்” எனச் சொல்லப்படும் சூழலில், அவர்களுடைய கூட்டணிக் கட்சிப் பிரபலங்கள் பேசியது மட்டும் அவர் நினைவுகளுக்கு வரமறுக்கின்றன. பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு குறித்த பேச்சுகளையும், அதன் எதிர் வினைகளாகத் தமிழகத்தில் நடந்த சம்பவங்களையும் மறந்துவிட்டுப் பேசுவது நியாயமாகுமா? தலைவர்கள் சமூக நல்லிணக்கத்துக்காகப் பேசுவது எல்லாம் தவறென்றால்... கூட்டணி அமைத்து, அவருக்குப் போட்டியிடச் சீட்டு வழங்குவதுதான் தண்டனையா?

“அமைச்சர்கள் நாங்கள் நோன்பு விழாக்களில் கலந்துகொள்கிறோம். தமிழகத்தில் மாற்று மதங்களைச் சார்ந்தவர்கள் அண்ணன் தம்பியாக பழகுகிறோம்” என்பவர், அதற்கான காரணங்களை மட்டும் மறந்துவிட்டார். இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.  காரணம், இங்கு நடந்தேறிய பல்வேறு சமூகநீதி இயக்கங்கள், தலைவர்களின் நூற்றாண்டுக்கால உழைப்பு. ஆனால், இன்று அதை மறந்து வடக்கின் குரலாய் ஒலிக்கும்போதுதான் இங்கு ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்புகளும் நிலைகுலையுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில், கருத்துகளுக்கு எதிரான மிரட்டல் கலாசாரம் என்பது வடக்கினுடையது. தமிழகம், என்றைக்கும் கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ளும். அது மொழிப்போரோ, குலக்கல்வித் திட்டமோ, சமீபத்திய நீட் தேர்வோ என எதுவாக இருந்தாலும், அப்படிதான்! கமலின் பேச்சுகளுக்குக் கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பும் முன்னால், ஒருமுறை மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ படித்தல் அவசியம். அப்போதுதான் தாம் இருக்குமிடம் அவர்களுக்குத் தெரியும்.

மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்... யாருடைய நிறங்கள் மாறுகின்றன என்பதை!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு