Published:Updated:

``வீர் சாவர்க்கர் இல்லை வெறும் சாவர்க்கர்தான்!" - ராஜஸ்தான் அரசு

``வீர் சாவர்க்கர் இல்லை வெறும் சாவர்க்கர்தான்!" - ராஜஸ்தான் அரசு
News
``வீர் சாவர்க்கர் இல்லை வெறும் சாவர்க்கர்தான்!" - ராஜஸ்தான் அரசு

நாட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் , மன்மோகன் சிங் ஆகியோர் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளனர். நிச்சயம் சாவர்க்கரை அந்தப் பட்டியலில் சேர்ப்பது சரியல்ல.

ராஜஸ்தான் மாநிலத்தின் 2013 மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. 163 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. இரண்டாம் முறையாக முதல்வராக வசுந்தரா ராஜே பதவியேற்றார். இது நடந்து சில மாதங்களிலேயே, மே 2014-ல் பி.ஜே.பி 282 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து வசுந்தரா ராஜே அரசாங்கம், மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பாடப்புத்தகங்களில் புகுத்திவந்தது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், வசுந்தரா ராஜே ஆட்சிக்காலத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைச் சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, சமீபத்தில் ஆட்சியில் அமர்ந்த அசோக் கெலாட்டின் காங்கிரஸ் அரசு. ஹிந்து மகா சபாவின் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவிக்க காரணகர்த்தாவாகவும் இருந்த சாவர்க்கரை, `துணிச்சல்மிக்க புரட்சியாளர்' என்று அடையாளப்படுத்தி, அவரைப் போற்றும் வகையில் பாடத்திட்டத்தில் சில பகுதிகளைச் சேர்த்துள்ளது. ``இரண்டு முறை வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஒரே புரட்சியாளர் சாவர்க்கர். அவர், இந்தியா பிரிக்கப்படுவதை எதிர்த்து அயராமல் போராடியவர்" என்றும், ஆகச்சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் அவரைச் சித்திரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான கோவிந்த் சிங் டோட்டஸ்ரா பேசுகையில், ``காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு டிசம்பரில் ஆட்சிக்கு வந்தவுடனேயே பாடநூல் சீர்திருத்தக் குழுவை நியமித்தோம். வசுந்தரா ராஜேவின் பி.ஜே.பி அரசாங்கம் இந்துத்துவச் சிந்தனையாளரான சாவர்க்கர் மற்றும் தீன்தயாள் உபத்யாய் ஆகியோரை, வீரமிக்கவர்களாக மட்டுமே சித்திரித்துள்ளது. ஆனால், சாவர்க்கர், சிறையில் இருந்த சமயங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பலமுறை மன்னிப்பு கோரியுள்ளார். இதை மறைத்து வரலாற்றைப் பொய்யாக்கும் விதமாக அவரைத் தைரியமிக்கவராக மட்டுமே சித்திரிப்பது தவறு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``வீர் சாவர்க்கர் இல்லை வெறும் சாவர்க்கர்தான்!" - ராஜஸ்தான் அரசு

மறைந்த தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரை விடுதலைப் போராட்ட வீரர்களாக ஏற்றுக்கொள்ள முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளனர். நிச்சயம் சாவர்க்கரை அந்தப் பட்டியலில் சேர்ப்பது சரியல்ல. பாடப்புத்தகச் சீர்திருத்தக் குழு, தக்க ஆதாரங்களோடு அவர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்ட சம்பவங்களைப் பற்றிப் பாடநூலில் சேர்க்கப் பரிந்துரைத்தது. வரும் கல்வியாண்டிலிருந்து இந்தத் திருத்தம் பாடநூலில் அமலுக்கு வரும். பாடத்திட்டத்தில் அவற்றைச் சேர்த்தது பி.ஜே.பி என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த மாற்றத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. வரலாறு பிழையில்லாமல் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும். அதுவே எங்கள் நோக்கம்" என்றார்.

ராஜஸ்தான் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவிருக்கும் பகுதிகள் இவைதாம்...

`பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர், நான்கு முறை பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தன்னை விடுவித்தால் அரசியலிலிருந்து விலகுவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மண்டியிட்டார். அதைத்தொடர்ந்து 1924-ம் ஆண்டு அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அவர், அரசியலைவிட்டு விலகவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்டு விடுதலையானார், சாவர்க்கர். மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியைக் கொல்ல திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்டவர் சாவர்க்கர்' என்றும், பிறகு அவர் காந்தி கொலையில் விடுவிக்கப்பட்டதும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பி.ஜே.பி-யின் முன்னாள் கல்வியமைச்சர் வாசுதேவ் தேவ்நானி கூறுகையில், ``இது, இந்துத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை. முதலில் மகாராணா பிரதாப்பை அசிங்கப்படுத்திய காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரான சாவர்க்கரை அவமானப்படுத்தியுள்ளது. இது, அவர்களின் எதிர் இந்துத்துவ மனநிலையையே காட்டுகிறது. நாட்டிலும் கட்சியிலும் வாரிசு அரசியல் செய்துவரும் காங்கிரஸ், இந்துத்துவத்தைப் போற்றும் மாபெரும் ஆளுமைகளை அவமானப்படுத்தி வருகிறது" என்றார்.

2002-ம் ஆண்டு, மத்தியில் பி.ஜே.பி ஆட்சியில் இருந்தபோது, அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் சர்வதேச விமானநிலையத்துக்கு 'வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்' என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறும் என்பது இதுதானோ?