Election bannerElection banner
Published:Updated:

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு
"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

பல்வேறு அழுத்தங்களுக்குப் பின் `நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்குவது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்கப்படும்’ என அரசு கூறியிருந்தாலும், போராளிகள் மீதான அரசின் பார்வை இரண்டாம்பட்சமே!

`தியாகங்கள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது’ - இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு உதிர்த்த வார்த்தைகள்தான், இவை. அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர், அவர். 90 வயதைக் கடந்து, இன்றும் மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அரசியலில் எளிய அடையாளமாகத் திகழும் அவர், ஏன் கொண்டாடப்படுகிறார் என்பதை அவரது கடந்தகால போராட்ட வாழ்வின்மூலம் அறிந்துகொள்ளலாம். இடதுசாரிகள்மீது விமர்சனம் வைப்பவர்கள்கூட இவரைத் தவிர்த்துவிடுகின்றனர். `அரசியல்வாதிங்கன்னா…’ என்று தொடங்கி திட்டித்தீர்ப்பவர்கள்கூட, `அய்யா நல்லகண்ணு’ என மரியாதையுடன் அவரை அணுகுகின்றனர்.  

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

ஆர்.என்.கே. என அனைவராலும் அழைக்கப்படும் நல்லகண்ணு, 1925-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தபோது, பின்னாளில் யாரும் வெறுக்கப்படாதவராக இருக்கப்போகிறார் என அவர் தந்தை ராமசாமி நினைத்திருக்க வாய்ப்பில்லை; தாய் கருப்பாயியும் கூடத்தான். 15 வயதிலேயே போராட்டக்களத்தில் குதித்தவர். பள்ளியில் படிக்கும்போதே போராட்டத்தைக் கையிலெடுத்தவர். `உலகப்போரில் பிரிட்டிஷுக்கு நாம் ஆதரவு கொடுக்க கூடாது’ என்று தேசத் தலைவர் மகாத்மா காந்தி முடிவெடுத்த சமயம், அது. தன் பள்ளியில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற நாடகத்தை எதிர்த்து, மாணவர்களுடன் இணைந்து, `நாடகத்தை நிறுத்து’ என்று முழங்கியபடியே போராடியவர்மீது, போலீஸ் தாக்குதல் நடத்தியது. இதையெல்லாம் கண்டுபயந்து ஒடுங்கிவிடாமல், அடுத்தநாளே மீண்டும் பள்ளியில் போராட்டம் நடத்தியவர்தான் இன்றைய 94 வயது போராளி நல்லகண்ணு. எளிய மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர். 

`ஜெயிச்சாலும் தோத்தாலும் மீசைய முறுக்கு’ என்று முறுக்கிக்கொண்டு, வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் மீசையைத் தன் போராட்டத்தின் வழியே இழந்தவர். வீரத்தையும், போராட்டக்குணத்தையும் அடையாளப்படுத்த அவருக்கு மீசை என்ற ஒன்று குறியீடாகத் தேவைப்படவில்லை. நெல்லை சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவருக்கு, தூக்குத்தண்டனை கிடைக்கும் எனப் பேசப்பட்டு, பின் அது ஆயுள்தண்டனையாக மாற்றபட்டடது. கைதுசெய்யப்பட்டபோது, வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்றுகூறி, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதைய ராஜாஜி அரசு, ஆயுள் தண்டனையை ரத்துசெய்து மற்றவர்களை விடுவித்தது. அதேநேரத்தில், "வெடிமருந்து சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நல்லகண்ணு தண்டனையை, திரும்பப் பெறமுடியாது" என உறுதியாக கூறிவிட்டார், ராஜாஜி. அதனால் 7 ஆண்டுகள் தன் வாழ்க்கையைச் சிறையிலேயே கழித்தார். 

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

சிறை சென்றபோது அவருக்கு 22 வயது. தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு நல்லகண்ணுவின் மீசையை நெருப்பால் பொசுக்கியது, காவல் துறை. வலி தாங்க முடியாமல் துடித்துடிப்போனார். ``மீசை மேல பெரிய பிரியமெல்லாம் இருந்ததில்லை. கன்னத்துல இருக்குற மருவ மறைக்க பெருசா வைச்சிருப்பேன். போலீஸ் அதிகாரி சிகரெட் தீயால கொளுத்திப் பொசுக்கிட்டார்” என்று தன்மீசை குறித்துப் பின்னாளில் பேசினார். தேசப்பிதா மகாத்மா காந்தியைவிட மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பொதுவுடைமை பேச்சுகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு, 1944-ல் ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை தொடங்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

விவசாயத் தொழிலாளர் அமைப்பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த அவர், 1992-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 வரை 13 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 1967, 1977-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டார். அதேபோல 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தோல்வியைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை. சுற்றுச்சூழல் போராளியாகவும் இருந்தவர், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி தடை வாங்கினார். தூர்வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

கவுன்சிலர் பதவியில் இருப்பவர்கூட, கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்திருக்கும்போது, பணத்தில் பற்றில்லாமல் வாழ்க்கையை நடத்திகொண்டிருப்பவர். மகளின் காதுகுத்து விழாவில்கூட, `எங்கே தோடு’ என்று கேட்டபோது,  நண்பர் சிவசுப்பிரமணியத்துடன் கடைக்குப்போய் ‘கவரிங் தோடு’ வாங்கிக்கொண்டு வந்து, 'இதைக் குத்துங்கள், போதும்' என்றவர். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது, கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார், நல்ல இதயம் படைத்த நல்லகண்ணு. கட்சியில் மாநிலப் பொறுப்புகளை வகித்தவர், தனக்கென இதுவரை ஒரு வீட்டைக்கூடக் கட்டிக்கொண்டதில்லை. காரில் செல்வதைக்கூடத் தவிர்த்தவர். சி.ஐ.டி நகரில் இருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 2007 முதல் வசித்துவந்தவரை, `இலவசமாகத் தங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூற, அதை மறுத்து, 4,500 ரூபாய் வாடகை கொடுத்து வசித்தவர். இன்று கே.கே.நகரில் மற்றொரு வாடகை வீட்டில் இருக்கிறார். தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியபோதும், பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

பொருளாதாரத்தைச் சேர்ப்பதில் நாட்டமில்லாமல், பொதுநலனுடனே வாழ்பவருடன் 58 வருடங்கள் இணைந்து குடும்ப வாழ்க்கையை நடத்தியிருக்கிறார், துணைவியார் ரஞ்சிதம் அம்மாள். அவரது இறப்பின்போது, ``என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு, பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு, அவளோட பிரிவு. நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல... இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தைக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா.

"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்!" - நெகிழ்ந்த நல்லகண்ணு

அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதானு சொல்லுவா” என நெகிழ்ந்தார். அவருக்கான ஒரே ஆறுதலாய் இருந்தவர் ரஞ்சிதம். இன்று அவரும் இல்லாமல் தனிமையில் உழன்றுகொண்டிருக்கிறார், நல்லகண்ணு. ரஞ்சிதத்தின் பிரிவைப்போல அவருக்கு மற்றொன்றும் இன்றுவரை வேதனைத் தந்துகொண்டிருக்கிறது. அது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிளவு. நெஞ்சையே பிளந்த பிளவு அது. "இடதுசாரி இயக்கங்கள் ஒன்றாக இணையவேண்டும். அதுதான் இந்தியாவின் தேவை” என்று வேதனையுடன் கூறியிருந்தார். 12 ஆண்டுகள் வசித்த வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும்போதுகூட, `எனக்கு வீடில்லை என்றாலும் பரவாயில்லை; கக்கன் குடும்பத்துக்கு வீடு கொடுங்கள்’ என்று வலியுறுத்தியவர். பல்வேறு அழுத்தங்களுக்குப் பின் `நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்குவது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்கப்படும்’ என அரசு கூறியிருந்தாலும், போராளிகள்மீதான அரசின் பார்வை இரண்டாம்பட்சமே!

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு