Published:Updated:

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!
‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

மோடி மாலையிட்ட அதே மதன் மோகன் மாளவியா சிலைக்கு, மாலையிட்டு வாரணாசியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார், பிரியங்கா காந்தி. எந்த 6 கி.மீ மோடி பயணித்தாரோ... அதே பாதையில் தன்னுடைய ‘ரோடு ஷோ’வையும் நடத்தி முடித்துள்ளார், பிரியங்கா.

ந்திய அரசியலையும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தையும் அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது. காரணம், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர்கள் இரண்டின் வழியாகத்தான் உருவாகியிருக்கிறார்கள். ஒன்று, தீன் மூர்த்தி பவனிலிருந்து. மற்றொன்று, தீன் மூர்த்தி பவனை எதிர்த்து. தேசத் தலைவரான மகாத்மா காந்தி தன்னுடைய அரசியல் வாரிசு என வெளிப்படையாக அறிவித்தது, நேருவைத்தான். அன்றுதொட்டு இன்று வரை நேருவின் குடும்ப வாரிசுகளிடம் (இந்திராவில் ஆரம்பித்து பிரியங்கா வரை) தவறாமல் முன்வைக்கப்படும் கேள்வி ஒன்று உள்ளது. அது, “நீ எப்போது முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறாய்?“ என்பதுதான்.

நேருவின் முதுமை, மகளான இந்திரா காந்தியை முழு நேர அரசியலுக்கு அழைத்துவந்தது. இந்திரா காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக வளர்த்த சஞ்சய் காந்தியின் இறப்பும், முன்னணித் தலைவர்கள் மீதான நம்பிக்கையின்மையும் அவரது மற்றொரு மகனான ராஜிவ் காந்தியை அரசியலுக்கு இழுக்க நேரிட்டது. இன்றும் கிட்டத்தட்ட  அதே சூழல்தான். பல மாநிலங்களில் இழந்துவரும் பலமில்லாத ஆட்சி, சிதறுண்டு கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான உறவு என பல வழிகளில் சந்திக்கும் சரிவுகளைச் சமாளிக்க, காங்கிரஸ் பல முயற்சிகளைக் கையில் எடுத்துள்ளது. வெறும் 70 ஆண்டுக்கால பெருமையை மட்டும் பேசாமல் எதிரிகளின் வலிமையறிந்து களமாட வேண்டியதன் அவசியம் அறிந்துள்ளது, காங்கிரஸ். அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே களத்தில் உள்ள நிலையிலும், தற்போதைய தேவை கருதி அவரின் சகோதரியான பிரியங்காவுக்கு முன்னாலும், “நீ எப்போது முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறாய்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

அதற்கும் சிறப்பான விடையையே சொல்லியிருக்கிறார், ராகுல். பிரியங்காவை உத்தரப் பிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ்  பொதுச்செயலாளராக்கி, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். கடந்த தேர்தல்களில் அம்மாவின் (சோனியா காந்தி) ரேபரேலி, அண்ணனின் (ராகுல்) அமேதி தொகுதிகளில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரியங்கா, இந்தத் தேர்தலில் கடந்த நான்கு மாதங்கள் இந்தியாவின் எல்லாத் திசைகளிலிருந்தும் முழங்கி வலிமையான எதிர்ப்பலைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்த பத்து நாள்களில், அவரது கணவர் வதேராவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையிலிருந்து நேரில் ஆஜராகும் படி சம்மன் வந்தது. காரில் அமலாக்கத் துறை அலுவலகம் வரைசென்ற வதேராவுக்கு ஆதரவாக இருந்தார், பிரியங்கா. அதேபோல், “பிரியங்கா எனக்கு நல்ல தோழி, நல்ல மனைவி… அவளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரியங்காவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் காதல் உருக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார், வதேரா. அன்றிலிருந்து தொடர்ந்து நான்கு மாதம் அவர் அதிகம் சந்தித்தது பிரசாரக் களம்தான்.

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “இப்போதுள்ள அரசு, இந்தியாவைத் துண்டாடப் பார்க்கிறது. ஆனால், இந்த மலைகளும் என் தேசம்; உத்தரப்பிரதேச வயல்களும் என் தேசம்; குஜராத்தும் என் தேசம்; ராஜஸ்தான் பாலைவனங்களும் என் தேசம்” என மக்கள் நெகிழ முழங்கினார் பிரியங்கா காந்தி. சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார், பிரியங்கா காந்தி. விமான நிலையத்திலிருந்து பிரசாரத்துக்காகச் செல்லும் வழியில் பி.ஜே.பி ஆதரவாளர்கள் சிறு குழுவாக நின்று, “மோடி வாழ்க, மோடி வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தலைவர்கள், அந்த இடத்தை வேகமாகக் கடப்பதற்காகத்தான் முனைவார்கள். ஆனால், பிரியங்கா சென்ற கார் அங்கு நிறுத்தப்பட்டது. அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் கையை நீட்டியவாரே காரிலிருந்து இறங்கி நடந்தார், பிரியங்கா. "நீங்கள், உங்கள் இடத்தில் சரியாக இருக்கிறீர்கள்; நான் என் இடத்தில் சரியாக உள்ளேன்” என பிரதமர் மோடி ஆதரவாளர்களுக்கு ஒரு ‘ஆல் தி பெஸ்ட்’சொல்லிச் சென்றார். ஜனநாயகத்தில் உரையாடலுக்கு எப்போதும் தயாராக இருப்பதுதான் முக்கியமானது. பிரியங்கா பல இடங்களில் உரையாடல்களைத் தொடங்குபவராகவும் உள்ளார்.

பிரியங்காவுக்குப் பிடித்தமான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று, புகைப்படமெடுப்பது; மற்றொன்று, காடுகளுக்குப் பயணம் செய்வது. இவை இரண்டும் அவரின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான  ராஜிவ் காந்தியிடம் இருந்து கற்றுக்கொண்டவை. பிரியங்கா காந்தி சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து, 'ரந்தாம்பூர்: புலிகளின் ராஜ்ஜியம்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த பெருவாரியான புலிகளின் புகைப்படங்கள் அவர் எடுத்தவைதான். “காடுகளைப் எப்போதும் காதலிக்கிறேன். ஏனெனில், அவற்றை எப்போதும் கணிக்க முடியாது என்பதுதான் அதன் சுவாரஸ்யமே” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் அரசியலும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றுதான். ஆனால், நடந்துகொண்டிருக்கும் இந்தத் தேர்தலில் அரசியல் புலி பிரியங்கா காந்திதான்.

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

வெறும் ஆவேசங்கள் மட்டுமல்லாமல்,  புள்ளிவிவரங்களும் பேச்சுகளில் தெறிக்கத்தான் செய்கின்றன. அமேதியில் காங்கிரஸ் பலமிழந்துள்ளதாமே என்ற கேள்விக்கு, “அது உண்மைக்குப் புறம்பானது. மக்கள் ராகுல் பக்கம்தான் நிற்கிறார்கள். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பொய் சொல்கிறார்; கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இதுவரை 16 முறைதான் தொகுதிப் பக்கம் வந்துள்ளார். அதுவும், நான்கு மணி நேரம் தொகுதியில் இருப்பது; செய்தியாளர்கள்மூலம் அதைப் பரப்புவது என்பதைத் தவிர, வேறு எதையும் அவர் செய்துவிடவில்லை” என்றார்.

மோடிக்கு நேரடியான சவால்கள் அனைத்தும் அதிகப்படியாக பிரியங்காவிடம் இருந்துதான் வந்துள்ளன. டெல்லியின் தேர்தல் பிரசாரக் களம் அதன் உச்சம். “மோடி அவர்களே... ஒரு பெண்ணாக உங்களுக்குச் சவால் விடுகிறேன். இனி நடைபெற உள்ள இரண்டுகட்ட தேர்தல்களிலும் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, பெண்கள் சுதந்திரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றைச் சொல்லி உங்களால் வாக்கு சேகரிக்க முடியுமா?”  என அவர் சவால்விட... கூடியிருந்த டெல்லி கூட்டம் அவரை கோஷமிட்டு உச்சிமுகர்ந்தது.

டெல்லியைச் சார்ந்த முன்னாள் கவுன்சிலர் ஓம் வேதி என்பவர் இந்தப் பிரசாரத்தை நேரில் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் பலமுறை இந்திரா காந்தியை நேரில் பார்த்திருக்கிறேன். இப்போது பிரியங்காவின் பிரசாரங்களை நேரில் பார்க்கும்போது இவரின் பேச்சுகளும், சைகைகளும் இந்திரா காந்தியை மீண்டும் பார்ப்பதுபோலவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

இந்திரா காந்தி பயன்படுத்திய பல பொருள்கள் இப்போது பிரியங்காவிடம்தான் உள்ளன. நேரு இந்திராவுக்கு வழங்கிய கைக்கடிகாரத்தை, தற்போது பயன்படுத்துவது பிரியங்கா காந்திதான். தோற்ற ஒற்றுமை மட்டுமல்ல... செயல்பாடுகளிலும் நிறைய இடத்தில் இந்திரா காந்தியைத்தான் பிரதிபலிக்கிறார். இந்திரா காந்திக்கு நெருக்கமானவர் மதன்லால் பொதேதார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தில், "இந்திரா காந்தி தன்னுடைய இறுதிக்காலத்தில் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்து வர ஆசைப்பட்டார்" எனக் குறிப்பிட்டிருந்தது, அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் ராகுலையும், பிரியங்காவையும் ஒப்பிட்டுக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ராகுல் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. நான் வந்து 15 வாரங்கள்தான் ஆகின்றன. அவருக்கு, என்னைவிட இந்த மண்ணின் அரசியலைப் பற்றியும், இங்குள்ள மதங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும்” எனச் சமாதானப் பதிலையே வழங்கினார் பிரியங்கா.

காங்கிரஸ் தன்னுடைய முகமாக ராகுலை முன்னிறுத்தினாலும், ராகுலுக்கு இன்னமும் கூட்டங்களில் கரவொலியைப் பெறும் அந்த சமயோஜித மேடைப் பேச்சு பெரிதாக கைக்கூடி வரவில்லை என்றே தோன்றுகிறது. பா.ஜ.க போன்ற கட்சியை எதிர்க்க அது மிகவும் அவசியம். அதை ஈடுகட்டும் விதத்தில்தான் தற்போது பிரியங்காவின் என்ட்ரி உள்ளது என்றே எடுத்துகொள்ளலாம். இதன் மூலம் மோடியின் நேரடி போட்டியாளராகவும் பிரியங்கா பிரசாரக் கூட்டங்களில் களம் புகுந்துள்ளார். இதற்கு எளிய உதாரணம், வாரணாசியின் பிரசாரக் களத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும். பிரசாரங்களில், பிரியங்கா அதிகப்படியாகக் கவனம் செலுத்திய இரண்டு தொகுதிகள் உண்டென்றால், அது தன் சகோதரனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமேதியும், மோடியை எதிர்த்துக் களமிறங்கிய வாரணாசியுமே ஆகும். ஏற்கெனவே, வாரணாசியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், கடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு மூன்றாமிடத்தையே பெற்றார். ஆனால், இந்த முறை வாரணாசி பிரசாரக் களத்தில் பி.ஜே.பி-க்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுப்பதற்காக  பிரியங்காவைத் அனுப்பியுள்ளது, காங்கிரஸ் கட்சி.

‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0!

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முன், ஆறு கிலோ மீட்டருக்கு மிகப்பெரிய ரோட் ஷோ (road show) நடத்தினார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்குபெற்றனர். கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு அதிகமானோர், 'மோடி வாழ்க' என்ற கோஷம் எழுப்பினர். இந்நிலையில், கடந்த புதன் கிழமை (15-05-2019) மோடி மாலையிட்ட அதே மதன் மோகன் மாளவியா சிலைக்கு, மாலையிட்டு வாரணாசியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார், பிரியங்கா காந்தி. எந்த ஆறு கி.மீ மோடி பயணித்தாரோ... அதே பாதையில் தன்னுடைய ‘ரோடு ஷோ’வையும் நடத்தி முடித்துள்ளார், பிரியங்கா. மோடிக்குக் கூடியதுபோலவே லட்சக்கணக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பிரசாரக் களத்தை தன் வசப்படுத்திய 'பிரியங்கா மேஜிக்' தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு உதவுமா என்பது மே 23-ம் தேதிதான் தெரியும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு