Published:Updated:

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

``அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சி என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சி என்பதும் மக்களுக்கான கட்சிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்''. 

``இனி அவ்வளவுதான் தி.மு.க என்று எல்லோரும் நினைத்த நேரத்தில்... இல்லை, தலைவர் பொறுப்பையும் நான் பார்ப்பேன்; பொதுச்செயலாளர் பொறுப்பையும் நான் பார்ப்பேன்; பொருளாளர் பொறுப்பையும் நான் பார்ப்பேன்; என் கட்சியை என் இரு தோளில் தூக்கிச் செல்வேன் என்று எழுந்து நிற்கிறவர்தான் நம் தளபதி (ஸ்டாலின்). அதனால்தான் எல்லோரும் ஆடிப்போயிருக்கிறார்கள். தலைவர் பொறுப்பு, பொதுச்செயலாளர் பொறுப்பு, பொருளாளர் பொறுப்பு என மூன்று பொறுப்பு. அத்துடன் இன்னொரு பொறுப்பு, பெரிய பொறுப்பு - தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு. எதிர்க்கட்சி என்றால் எதிர்த்துப் பேசுவதல்ல. யோசனைகள் கூற வேண்டும்''. 

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

கடந்த மார்ச் மாதம் ஈரோடு மண்டல தி.மு.க மாநாட்டில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியது இது.

தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் முடிவடையப் போகின்றன. 65 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவுடன் தி.மு.க. தலைவராகியும் ஓராண்டு எட்டப்போகிறது. கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றபின் முதல் தேர்தலையும் சந்தித்து விட்டார், மு.க.ஸ்டாலின்.

உட்கட்சிப் பிரச்னைகள், கூட்டணிக் குழப்பங்கள், தேர்தல் காட்சிகள் எல்லாம் ஓய்ந்துவிட்ட இந்தத் தருணத்தில் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார், உடன்பிறப்புகளின் தளபதி.

``அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சி என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சி என்பதும் மக்களுக்கான கட்சிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்''. 

இதைச் சொன்னது அரசியல்வாதியில்லை. நீதியரசர் கிருபாகரன் சொன்னது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாபெரும் பொறுப்பில் இருந்துகொண்டு மூன்றாண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி, இப்போது பல்வேறு களங்களிலும் பலமாக விவாதிக்கப்படுகிறது.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

மற்ற கட்சியினரைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதையே குற்றமாகப் பார்க்கும் வெறுப்பரசியல் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது பெரும் சவால்தான். அதை ஸ்டாலின் எப்படிக் கடந்து வந்தார் என்பதை ‘ரீப்ளே’ செய்து பார்த்தால் பெரும் ஏமாற்றம்தான் கிடைக்கிறது.

சட்டமன்றம் சென்றார், சட்டையைக் கிழித்துக்கொண்டார்; அமைச்சர்களை அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார், அறிக்கைகள் வெளியிட்டார்; அரசை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார். இப்போது செல்லுமிடத்திலெல்லாம், ``தமிழகத்தில் நடப்பது பினாமி ஆட்சி, மக்கள் விரோத அரசு'' என்று எடப்பாடியைச் சுடச்சுட விமர்சிக்கிறார். ஆனால், தமிழகத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கபூர்வமாக இத்தனை ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால், ஸ்டாலினிடம் என்ன பதில் கிடைக்கும்?

2016-ல் 98 உறுப்பினர்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்துக்குள் தி.மு.க நுழைந்தபோது, ஐந்தாண்டு ஆட்சியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்துவது பெரும் சவால் என்றார்கள், பலரும். இயற்கை எல்லோரது கணிப்பையும் மாற்றியது. மறைந்தார் ஜெயலலிதா. ஓ.பி.எஸ் பழைய பன்னீர்செல்வமாக வந்தார். சசிகலா புதிய அவதாரம் எடுக்க நினைத்தார். அவரால் அரங்கேற்றப்பட்ட கூவத்துார் கூத்துகளை ஸ்டாலினால் முறியடிக்க முடியவில்லை. சசிகலா சிறைக்குப்போக, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலினும் தினகரனும் `ஆட்சி கவிழும் காட்சி மாறும்’ என்று மாறிமாறி எசப்பாட்டு எதிர்ப்பாட்டு பாடி வருகின்றனர். எதுவுமே நடக்கவில்லை. ஈராண்டு ஆட்சியை நிறைவு செய்துவிட்டார் எடப்பாடி. 

ஆட்சியைக் கவிழ்ப்பது இருக்கட்டும். இந்த ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்துவதற்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவராக என்னென்ன செய்திருக்க வேண்டும்?

மேலைநாடுகளெல்லாம் சுற்றியவர் ஸ்டாலின். இன்றைக்கு இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களில் அவர் அளவுக்கு வெளிநாடுகள் சுற்றியவர் யாருமில்லை. வளர்ச்சிப் பணிகளில் அவர் காட்டிய அக்கறைக்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், அதெல்லாம் பதவியில் இருந்தால்தான் செய்ய வேண்டுமென்றில்லை. அவர் சுற்றிய பல மேலைநாடுகளில் ஆளும்கட்சியின் துறை அமைச்சர்களைப்போலவே, எதிர்க்கட்சிக்குள்ளும் ஒவ்வொரு துறைக்கும் ஒருவரை அமைச்சர்போல பொறுப்பு கொடுத்து துறைசார்ந்த ஆக்கபூர்வமான விஷயங்களை விவாதிக்கச் செய்கின்றனர். இதனால் எந்த ஒரு திட்டத்தை அரசு கொண்டுவந்தாலும் அதன் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பமுடியும்? அப்படி எந்த முயற்சியையும் ஸ்டாலின் எடுக்கவில்லை.

மற்றவற்றை மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின் பார்ப்போம். இப்போதைய அவசரத் தேவை ஒன்று இருக்கிறது. அது... தண்ணீர். வறட்சியும், பொய்த்துப்போன மழையும், வாட்டியெடுக்கும் கோடையும் மக்களைத் தவிக்கவைக்கின்றன. இந்தத் தாகம் தீர்ப்பதற்கு அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன. ஆனால், அவர்களும் செய்ய முடியாத ஒன்றைச் செய்யக்கூடிய அரசியல்பலத்தைப் பெற்றிருக்கிறார், ஸ்டாலின். 

அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்களும் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தி.மு.க-வுடன் நெருக்கமாகவுள்ளனர். காங்கிரஸ் ஆதரவு ஆட்சி, கம்யூனிஸ்ட் அரசு, கூட்டணிக் கட்சி ஆட்சி, தனிப்பட்ட நட்பு என எல்லா வகைகளிலும் ஸ்டாலின் முக்கிய இடம்பிடித்திருக்கிறார். அதைவைத்து தமிழகத்துக்கு அவர் தண்ணீர் பெற்றுத்தர வேண்டுமென்பதுதான் இங்குள்ள எட்டுக்கோடி மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

குறிப்பாக, சென்னையின் தாகத்தைத் தீர்க்கின்ற நிலையில் இருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவர்தான் ஸ்டாலினுடன் இப்போது மிக நெருங்கிய நட்பில் இருக்கிறார். ஆந்திரா மற்றும் தமிழக ஒப்பந்தத்தின்படி சென்னையின் குடிநீர்த் தேவைக்கு கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலம், கிருஷ்ணா நதி நீரை ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரம் மில்லியன் கனஅடி பெறப்பட வேண்டும். ஆனால் 2017-18-ம், ஆண்டில், 2.22 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் மட்டுமே பெறப்பட்டது. ஆந்திராவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழக அரசுதான் உரிய நீரைக் கேட்டுப்பெற வேண்டும். ஆனால், தண்ணீர் விஷயத்தில் அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதனால், நாளொன்றுக்கு 4 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர்த்  தட்டுப்பாட்டில் தவித்துவருகிறது, சென்னை மாநகரம். 

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அதிகமிருப்பது, தி.மு.க வசம்தான். தினம்தினம் மக்கள் குடிநீருக்காக அல்லாடிவருகிறார்கள். காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சென்னை மெட்ரோவும் ஏதேதோ செய்துவருகிறது. ஆனால், கிருஷ்ணா நதிநீரைப் பெறுவது அரசின் கையிலிருக்கிறது. எடப்பாடியின் அரசு செயலற்றுக்கிடப்பதாகச் சொல்லும் ஸ்டாலின், தனக்கிருக்கும் நட்பையும் அரசியல் செல்வாக்கையும்வைத்து சென்னைக்குக் கிருஷ்ணா நதிநீரைப் பெற்றுத்தருவதே ஓர் உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் மகத்தான பொறுப்பு.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் பகுதி ஜீரோ பாயின்ட் வரை 152 கி.மீ. கால்வாய் அமைக்கப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைகிறது, கிருஷ்ணா நீர். 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரியில் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு, பின்னர் குடிநீருக்காகச் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், தமிழக எல்லையை வந்தடையும் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்குக் கொண்டுசெல்லப்படும் கால்வாயின் வழிநெடுகிலும் சேதமடைந்து காணப்படுவதால், கிருஷ்ணா நீர் முழுமையாகப் பூண்டி ஏரிக்குச் சென்று சேருவதில்லை. வரும் நீரும் இப்படி வாய்க்காலிலேயே வீணாகிறது. இதற்கான தீர்வையும் நாயுடுவிடம் இப்போதே ஸ்டாலின் பேசவேண்டும்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..!

நாயுடுவிடம் மட்டுமல்ல... காங்கிரஸ் ஆதரவில்தான் கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி இருக்கிறார். கூட்டணியில் இருக்கும் தோழர் பினராயி விஜயன்தான் கேரள முதல்வர். எடப்பாடியின் ஆட்சி செயலற்றுக் கிடக்கிறது என்று சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர், இப்போதே இந்த முதல்வர்களைச் சந்தித்து, தமிழகத்துக்கான தண்ணீர்த் தேவைகளைத் தீர்க்க பேசியிருக்கவேண்டும். இதுவரை பேசாவிட்டாலும் இனியாவது பேச வேண்டும். ஸ்டாலின் ஆசைப்படியே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்டால் இந்தப் பேச்சுவார்த்தைகளை இனிதாக, வெற்றிகரமாக முடித்துவிடலாம்தான். 

முதல்வராவது இருக்கட்டும்... அதற்குமுன் முதலில் இவர்களிடம் பேசுங்கள், எதிர்க்கட்சித் தலைவரே! 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு