Published:Updated:

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?
News
இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

தற்கும், ஆரம்பத்திலேயே அறிவித்துவிடுவது நல்லது. ஏனென்றால், எதிர்காலத்தில் ‘தேசப்பிதா மகாத்மா காந்தி (இந்தியா) கால்தடுக்கி விழுந்துசெத்தார்’ என்று வரலாற்றை மாற்றினாலும் மாற்றுவார்கள். ஆங்கிலேயனிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானவரை, `வீர்’ அடையாளம் கொடுத்து அழைக்கும் நாட்டில், அனைத்தும் சாத்தியமே.

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

அதாவது...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`காந்தி இந்தியாவின் தந்தை. அவரைக் கொன்றவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. அவன், இந்துமதத்தைச் சார்ந்தவன். இந்து அமைப்புகளில் இயங்கியவன். ஆயுதம் ஏந்தி கொலைபுரிந்ததால், தீவிரவாதி என்றானவன். ’இந்து மதத்தைக் காப்பதற்காகக் கொலைபுரிந்தேன்’ என்று வாக்குமூலம் அளித்தவன். ஆகவே, காந்தியைக் காவு வாங்கியது எது என்பதில், எதிர்கால சந்ததியினருக்கு எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. அதன் பெயர் மதத் தீவிரவாதம். அதைச் சூடியவன், ஒரு மதத் தீவிரவாதி. இதில், விவாதிப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ விரலிடை அளவும் இடமில்லை!’

காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள் என்பதை அறிய, ஏழுகடல் ஏழுமலையை எல்லாம் தாண்ட வேண்டியதில்லை. ஒரே காரணம்தான்... இந்தியா எனும் வானவில்லுக்குக் காவிநிறம் அடிக்க அவர் தடையாக இருக்கிறார். காந்தியை ஏற்க வேண்டுமென்றால், அவர் வாழ்வெல்லாம் வலியுறுத்திய மதச்சார்பின்மையை ஏற்றாக வேண்டும். ’இந்நாட்டில் சிறுபான்மையினர் இரண்டாந்தர குடிகளாக நடத்தப்படக் கூடாது’ என்ற காந்தியின் அறிவுரையை ஏற்றாக வேண்டும். இவையெல்லாம் 'இந்து ராஷ்டிரம்' கனவுகொண்டவர்களுக்குச் சரிப்பட்டு வருமா... வராது! அதனால்தான், அந்த அரையாடை பக்கிரிமீது இவ்வளவு வன்மம் கொட்டப்படுகிறது; இத்தனை வக்கிரம் காட்டப்படுகிறது. உண்மையைச் சொன்னால், காந்தியை அவரின் ஆதரவாளர்களைவிட அவரின் எதிராளிகள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ’இந்தியா எனும் கருத்தியலைக் கட்டி நிறுத்தியிருக்கும் ஒற்றைச்சரடு காந்தி’ என்பதை, நீரை மீனென அறிந்திருக்கிறார்கள். அதற்காக, அவர்களுக்கு நன்றி!

காந்தி, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லை. `அறைவதற்குச் சிலுவைகள் எடுத்துவருவீர்கள் என்றால், நான் தோள்காட்டுவேன்’ என்றவர் அவர். `அடிப்பதற்கு ஆணிகள் கொண்டுவருவீர்கள் என்றால், நான் கரம்நீட்டுவேன்’ என்றவர் அவர். தன்னைக் கத்தியால் குத்த வந்தவனிடம்கூடத் தன்மையாக நடந்துகொண்ட தயைதாத்தனிடம், வெந்தெரியும்போதும் வெளிப்பட்டதில்லை வெறுப்பு. அப்படிப்பட்டவரை அவமதிக்க நா எழுகிறதென்றால், எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தத் தேசம்?

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

ஆரம்பத்தில், அவரைக் கொன்றவனை இந்து தீவிரவாதி என்று சொல்லக் கூடாது என்றார்கள். அமைதியாக இருந்தோம். அடுத்து, அவரைக் கொன்றவனை தீவிரவாதி என்று சொல்லக் கூடாது என்றார்கள். அப்போதும் அமைதியாக இருந்தோம். இப்போது, அவரைக் கொன்றவனை ஆகச்சிறந்த தேசப்பற்றாளன் என்கிறார்கள். இப்போதும் அமைதியாக இருப்பது, நாட்டுக்கு ‘ஈடு இல்லா கேடு’ தரும் என்பதை உணர்வோம். கோட்சேவைத் தேசப்பற்றாளர் என்கிறார்கள் என்றால், அதன் அர்த்தம் காந்தி தேசத் துரோகி என்பதே. கொன்றவன் தியாகி என்றால், செத்தவன் துரோகிதானே? அமெரிக்காவின் கறுப்பின விடிவெள்ளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை சுட்டுக் கொன்றான், ஒரு வெள்ளையினத் தீவிரவாதி. அமெரிக்கர்கள் சுட்டவனை, ‘துரோகி’ என்கிறார்கள், மார்ட்டினை ’தியாகி’ என்கிறார்கள். ஆனால், இங்கேயோ..? இப்போதேனும், கடலலையென எழ வேண்டும் கண்டனங்கள்!

என்ன சொல்வது? மாவோவைக் கொண்டாடித் தீர்க்கிறது சீனம்; லெனினை வணங்கி மகிழ்கிறது ரஷ்யா. லிங்கனைத் தொழுது நிற்கிறது அமெரிக்கா. காஸ்ட்ரோ பெயரைச் சொல்லி நாளை தொடங்குகிறது, கியூபா. ஆனால், நாம் இங்கே, காந்தியை அவமதிப்பவர்களை ஆட்சி மன்றத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். சும்மா இல்லை. மதங்களாலும் இனங்களாலும், மொழிகளாலும் சாதிகளாலும் பிளவுபட்டு நிற்கும் ஒரு தேசத்துக்கு, அனைவரையும் அரவணைத்த ஒரு தலைவன் கிடைப்பது எவ்வளவு அரிது தெரியுமா. அப்படி வாராது வந்த மாமணியை, அவமதித்து மகிழ்வது மிகக்கொடூரமானது மட்டுமல்ல, மிகக்குரூரமானதும்கூட. இந்தப் பாவத்தைக் கழுவ கங்கைப் பக்கம் போய்விடாதீர்கள்.  கன்னத்தில் அறைவாள் அன்னை!

சரி... காந்தி தேசத் தந்தை இல்லை என்றால், வேறு யார் தேசத்தந்தை எனும் இடத்துக்கு உரியவர்? அறிக... இந்தியாவில், அழகேசனும் ஆண்டனியும் அப்துல்லாவும் சொந்தம் கொண்டாட இருக்கும், ஒரே ஜீவன் காந்தி. தமிழனும் மராட்டியனும் வங்கனும் உரிமை கொண்டாட இருக்கும் ஒரே தலைவன் காந்தி. ஆக, அவரின்றி எவர் உளர் ‘தேசத்தந்தை’ இடத்துக்கு... பதில் இருக்கிறதா பழிப்போரிடம். வேற்றுமையை வேரெனக் கொண்ட இத்தேசத்தில் அனைவருக்குமான அரசியலை முன்னெடுத்த தலைவன் காந்தியைப்போல எவர்? ‘இவன் அயலான்’ என்று எவரையும் ஒதுக்கிவைக்காத உள்ளம் இத்தேசத்தின் வேறு எந்தத் தலைவனுக்கு இருந்தது? ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும், அடியாழத்தில் உறைந்திருக்கும் ’இது காந்தி தேசம்’ என்ற உண்மை. அதை மாற்ற இயலாது. 

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், இந்தியாவின் மக்கள் எப்போதுமே காந்தியின் பக்கம். அவர்களின் மனங்களில் இருக்கிறார் காந்தி. அவர்களின் இதயத்தில் இருக்கிறது காந்தியின் தத்துவம். சமீபத்தில் ஒரு சம்பவம். இங்கே கிருஷ்ணகிரியில் நடந்தது. மத அமைப்பு ஒன்றின் மேடையில், ‘காந்தி ஒரு தேசத்துரோகி’ என்று பேசினார் ஒருவர். உடனே, கீழிருந்த மக்கள் வெகுண்டெழுந்து ‘அதெப்படி காந்தியைத் தேசத்துரோகி எனலாம்?’ என்று சண்டைபிடித்தார்கள். பேசிய ஆள் கப்சிப். அன்று, `காசில் மட்டுமே காந்தியைக் காண்பவர்கள் இந்திய மக்கள்’ என்ற மேலைநாட்டு அறிஞர்களின் சொற்கள், சொத்தையாகி நின்றன. 

காந்தி ஒரு வைரம். ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு கோணத்தில் தெரிவார். சாதி எதிர்ப்பாளர்கள் அவரைச் சனாதனவாதி என்பார்கள். ஆனால், சனாதனவாதிகள் அவரை சாதி எதிர்ப்பாளர் என்பார்கள். இந்து மதவாதிகள் அவரை இஸ்லாமியர் ஆதரவு கொண்டவர் என்பார்கள். ஆனால், இஸ்லாமிய மதவாதிகள், அவரை இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிப்பவர் என்பார்கள். இப்படி, எல்லாத் திசையிலும் காந்திக்கு எதிரிகள் இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லோருக்கும் காந்தி எதிரியாக இருந்தார். 

காந்தி இந்துதான். ஆனால், இந்து மதத்துக்குள் மாற்றம் விரும்பிய இந்து. அதனால்தான், இந்து மடங்கள் அவரை எதிர்த்தன. மடாதிபதிகள் அவரின்மீது பகை கொண்டனர். ஏனென்றால், அவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த பழைமைவாதத்தின் அடிமடியில் கைவைத்தார் காந்தி. ஆலயப் பிரவேசங்களை ஆரம்பித்து வைத்தார். சடங்கு, சம்பிரதாயங்களைப் புறந்தள்ளினார். `கடவுளை உனக்கு வெளியே தேடாதே, உனக்கு உள்ளே தேடு’ என்றுரைத்தார். தீண்டாமை கூடாது என்றார். பெண்ணுரிமை பேசினார். `கலப்புத் திருமணத்துக்கே என் ஆசி’ என்றார். இப்படி, இந்து சனாதனத்தின் இரக்கமற்ற கோட்டையை இடித்துக்கொண்டே இருந்தார் காந்தி. இதுதான் அவர்களுக்குப் பொறுக்கவில்லை. `இந்து தர்மத்தைக் காப்பதற்காகக் காந்தியைக் கொல்லப்போகிறோம்’ என்று அறிவித்துவிட்டே, துப்பாக்கியைத் துடைத்தான் கோட்சே.

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

ஒருமுறை காந்தி தமிழகம் வந்தார். அநேகமாக, மதுரை ஆலய நுழைவுப் போராட்டத்துக்குப் பிறகாக இருக்க வேண்டும். அப்போது, ‘வராதே காந்தி... ஓடிப்போ காந்தி... பேசாதே காந்தி...’ என்று, முழங்கினார்கள் சனாதனவாதிகள். ஆனால், சிறு சிரிப்புடன் ’சீர்திருத்தைத் தொடர்வேன்’ என்று சொல்லிச் சென்றார் காந்தி. சாகும்வரை அதைத் தொடர்ந்தார். சாவும் அவரை அதற்காகவே தொடர்ந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தானுக்குப் பணம் கொடுக்கச் சொன்னது போன்றவை, அந்த நேரத்தில் வளர்ந்து வந்த மதவன்முறையை, மேலும் வளர்ப்பதற்காகச் சொன்ன காரணங்கள். ஆனால், அடிப்படைக் காரணம், காந்தியின் சனாதனத்தின் மீதான போரே.  

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

கும்பகோணம் ஆலயங்களுக்குப் பெயர் போனது. இதில் படித்த திராவிடர்கள் பலர் குடியிருக்கிறார்கள். எனினும், ஒரு தோட்டியின் நிழல் தங்கள் மீது விழுந்தால் கூடத் தீட்டுப் பட்டுவிட்டதாக பிராமணர்கள் எண்ணுகிறார்கள். அவ்வாறு நிழல் பட விடும் தோட்டிக்கு நல்ல உதையும் விழலாம். உதை விழாவிட்டாலும் நிச்சயமாத் திட்டு நிறைய கிடைக்கும். சென்னை மாநிலத்தைப் போன்று தீண்டாமைக் கொடுமை கடுமையாக உள்ள இடம் வேறு எதுவுமே இல்லை. தீண்டாதான் ஒருவன் பிராமணர்கள் குடியிருக்கும் தெருக்களின் வழியாக நடப்பது குறித்து எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. ஒரு மிருகம் நோய்வாய்ப்பட்டால் அதைக் கவனிக்க ஆள் உண்டு. ஆனால், ஒரு தீண்டத்தகாதவனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

(18-09-21 கும்பகோணத்தில் பேசியது )
 

குறித்துக் கொள்க. காந்தி, பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார். `என் தேசத்தைப் பிரிப்பது என் தேகத்தைப் பிளப்பதற்குச் சமம்’ என்று கண்ணீர்விட்டார். ஆனால், அனைத்தும் கைமீறிப் போனதும் பாகிஸ்தானுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னவரும் அதே காந்திதான். `இந்தியா போன்ற இறையாண்மை கொண்ட தேசம், பழிச்சொல்லோடு உருவாகக் கூடாது’ என்று நினைத்தார் காந்தி. அதில், அரசியல் ஏதுமில்லை. அது அறம். அதனால்தான் அவர் மகாத்மா. 

காந்தியின் சாதி மற்றும் வர்ணாசிரமப் பார்வை விவாதத்துக்குரியது. அவரின் ஆரம்பகால கருத்துகள் சாதியையும் வர்ணாசிரமத்தையும் ஆதரித்துப் பேசுவதாகவே இருந்தன. ஆனால், தனிப்பட்ட வாழ்வில், காந்தி சாதி பாராட்டியதோ வர்ணாசிரமத்தைப் பரப்பியதோ இல்லை. காந்தியின் தென்னாப்பிரிக்க கம்யூன்களிலும் சரி, இந்தியாவின் சபர்மதியிலும் சரி, சாதிப்பாகுபாடு இருந்ததில்லை. அங்கே, எல்லாச் சாதியினரின் கைகளிலும் இருந்தது, மலம் அள்ளும் கூடை. 

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

ஆனால், வாழ்வின் இறுதிக்காலத்தில் சாதியையும் வர்ணாசிரமத்தையும் எதிர்க்கும் முக்கிய ஆளாகக் காந்தி மாறினார். அண்ணல் அம்பேத்கருடன் நடத்திய உரையாடல்களின் வழி, அந்த இடத்துக்கு அவர் வந்துசேர்ந்தார். ‘அந்தக் காலங்களில் வர்ண சம்ஹாரி என்றே அவர் அழைக்கப்பட்டார்’ என்று சொல்கிறார்கள், இடதுசாரி ஆய்வாளர்கள். அவர்களைப்போலக் காந்தியை எதிர்த்தவர்கள் உண்டா? ஆனால், அவர்களில் பலர் இப்போது காந்தியத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இது வெளிப்படை. வெறுப்பு வெறுத்த பிறகு, வெறி அடங்கிய பிறகு, வன்முறை உதவாதென அறிந்த பிறகு, அனைவரும் வந்து சேரும் ஒரே இடம்... சபர்மதி! அங்கே அவர்களுக்காகக் கைவிரித்துக் காத்திருப்பார் காந்தி!

காந்தி, கீதையைப் போற்றியவர்தான். ஆனால், திலகரும் அரவிந்தரும் போர்நூலாக உருவகித்த கீதையை, அஹிம்சை நூலாக முன்னிறுத்தியவர். ஆமாம், `ராம ராஜ்ஜியம்’ என்றும் அறிவித்தார். ஆனால் காந்தியின் ராமன், அயோத்தியின் ராமன் அல்ல. அவரின் ராமன் அப்பழுக்கற்ற மனித வடிவம் மட்டுமே. அப்படிப்பட்ட மனிதனால் அமைக்கப்படும் ராஜ்ஜியத்தையே `ராம ராஜ்ஜியம்’ என்றார். அது ஓர் உருவகம், அவ்வளவே. அண்ணா, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று சொன்னார். அது திருமூலர் மொழி. அப்படியென்றால், அண்ணா திருமந்திரத்தை ஆதரித்ததாக அர்த்தமா? இல்லைதானே! 

``காந்தியின் ராமர் அவரது மனதில் இருந்தது, காந்தியின் ராமருக்கு பெரிய கோயில்கள் தேவை இல்லை. அது உயரிய சிந்தனைகளால் உருவானதே அன்றி, பிறரிடம் பறைசாற்றவோ, விளம்பரத்துக்காகவோ அல்ல. காந்தியின் ராமரை அல்லா என்றும் சொல்லலாம். ~ ராமசந்திர குஹா ( Gandhi Before India,India After Gandhi, Gandhi: The Years That Changed the World நூல்களின் ஆசிரியர் )

ஆலயங்களுக்குக்கூடக் காந்தி அவ்வளவாகப் போனதில்லை. ராமச்சந்திர குஹா சொல்கிறார், `காந்தி பூரிக்குப் போயிருக்கிறார். ஆனால், ஜெகந்நாதர் ஆலயத்துக்குப் போனதில்லை. தஞ்சாவூர் போயிருக்கிறார். ஆனால், பிரகதீஸ்வரர் கோயிலில் அவர் பாதம் பட்டதில்லை.’ காந்தி, அரசியலில் இருந்த ஒரு துறவி. அவ்வளவுதான். அவரது, பிரார்த்தனைக் கூட்டங்கள்கூட, சர்வமத பிரார்த்தனைக் கூட்டங்களாக இருந்தன. அங்கே கீதையும் குரானும் ஒருசேர ஓதப்பட்டன.

பாகன், யானையைக் கண்களால் அளந்தறிவதைப்போல, இந்தியாவைக் கால்களால் அளந்தறிந்தவர் காந்தி. அந்தக் காலங்களில், வண்டிகட்டிச் சென்று காந்தியைக் கண்டுவந்த கதையை ஆர்வத்துடன் உரைத்துக்கொண்டிருக்கும், ஓர் ஊர் பெருசு. இந்தியாவில் எல்லோருக்கும் காந்தியைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு சொல் இன்னும் மிச்சம் இருக்கிறது. காவியங்களை எவ்வளவு பேசினாலும், மீண்டும் ஏதேனும் பேசுவதற்கு அதில் இடமிருந்துகொண்டே இருக்கும். அதேபோலத்தான் காந்தி. எவ்வளவு பேசினாலும் எஞ்சிக்கொண்டிருப்பார். அவர் கண்ணுக்குத் தெரியும் வானம், அவ்வளவே!

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

காந்தி எல்லோரிடமும் பேசினார். எல்லோரும் காந்தியிடம் பேசினார்கள். `யங் இந்தியா’வின் முதல் பக்கத்தில், காலனி ஆதிக்கத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதுவார். மூன்றாம் பக்கத்தில், பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களைப் பற்றிக் குறிப்பு கொடுப்பார். காந்தி, கனிவும் கண்டிப்பும் கொண்ட மரபான பெரியவர். வேண்டுமானால், காதல் தோல்வியில் உள்ளம் உடைந்த இளைஞர்கள், சத்திய சோதனையை புரட்டுங்கள். காகிதத்தைக் கடந்து கரம் நீட்டி அன்பாகத் தலை தடவுவார் காந்தி!

ஒருமுறை, கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண் காந்திக்குக் கடிதம் எழுதுகிறார். அவர் அங்கிருக்கும் ஏதோ ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அவர் கேட்கிறார், ‘காந்தி... என்னை இங்கே சில இளைஞர்கள் மிகவும் மோசமாகத் தொந்தரவு செய்கிறார்கள். நான் என்ன செய்வது? இந்தச் சூழலில் நாட்டுப் பெண்கள் எப்படி அஹிம்சைக்குத் தயாராவார்கள்?’ காந்தி பத்திரிகையில் பதில் எழுதுகிறார். ‘இதைச் செய்தவர்களின் பெயர்களை உடனே பொதுவெளியில் வெளியிட வேண்டும். குற்றவாளிகள் இருட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு குற்றம்புரிகிறார்கள். அவர்கள்மீது வெளிச்சம் பாய்ச்சினால் அந்தக் கணமே அஞ்சி ஓடுவார்கள்’ என்று அறைகிறார். அதற்குப் பிறகு, அவர் கல்லூரி மாணவிகளிடம் பேசும்போதெல்லாம், ‘தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டாயப்படுத்தினார். காந்திக்குப் பிறகே, இந்தியப் பெண்கள் அரசியல் களத்தை நிறைத்தார்கள் என்பது, வரலாறு! 

இப்படிப்பட்ட காந்திக்கு இப்போது நடப்பது என்ன? அத்தனையும் அவமதிப்புகள்! கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு சம்பவம் நடந்தது. அகமதாபாத் நகர்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார் ராமச்சந்திர குஹா. தலைப்பும் காந்தியைப் பற்றியதுதான். ஆனால், ஏ.பி.வி.பி அமைப்பு அவரின் வருகையை எதிர்த்தது. குஹா, ‘சூழ்நிலை சரியில்லை. அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் முதல்வரிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். என்றேனும் காந்தியின் ஆன்மாவை அவர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்றார். ஆனால், இன்னும் அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதையே, அவர்களின் சொற்களும் செயல்களும் உணர்த்துகின்றன. 

ஒருவர், ‘காந்தியைச் சுட்டுவிட்டு கோட்சே தப்பியோடவில்லை. அந்த வீரத்தை மெச்சுகிறேன்’ என்று பதிவிடுகிறார். அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார் ஆளுங்கட்சி அமைச்சர். இவரைவிட இன்னொரு ஆளுங்கட்சி பிரமுகர் பதிவிட்டது இன்னும் மோசமானது. ‘கோட்சேவால் கொல்லப்பட்ட பிறகே, காந்தி `மகாத்மா’ ஆனார்’ என்று சொல்லியிருக்கிறார். இவர்கள் அறிய வேண்டியது ஒன்றுண்டு... காந்தி இந்தியாவுக்குள் கால் எடுத்து வைத்தபோதே மகாத்மா!

இந்தியாவைக் கட்டிக்காக்கும் ஒற்றைச்சரடு! காந்தியை ஏன் குறிவைக்கிறார்கள்..?

காந்தியின் வருகை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை, பத்து பக்கங்களுக்கு நெஞ்சுருக எழுதியிருக்கிறார் நேரு. எப்படியிருந்ததாம் காந்தியின் வருகை? 

`ஒருவழியாக முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அமைதி திரும்பியது. இந்தப் போர் நிறுத்தம் எங்களுக்கு ஆசுவாசத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரும் என நம்பினோம். ஆனால், நேர்மாறாக அடாவடிச் சட்டமும் அடக்குமுறையும் வலுவாகத் தொடர்ந்தது. எங்கள் மக்களின் மனங்களில் அவமானம் கசந்து வழிந்தது, கடுமையான ஆத்திரம் அவர்களின் உள்ளங்களை நிறைத்தது. சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து நம் தேசம் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்தது. வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு வறுமை மட்டுமே எஞ்சியது. நம் தேசம் அனைவராலும் கைவிடப்பட்டது.

அப்போதுதான் காந்தி வந்தார்... ’ 

ஆக, இப்படித்தான் இருந்தது காந்தியின் இந்திய வருகை! நேருவின் சொற்கள் இன்னும் நீள்கின்றன. அத்தனையும் கனமானவை. `காந்திதான் இந்தியா, இந்தியாதான் காந்தி’ என்று, சும்மா சொல்லவில்லை நேரு.

ஆயிரம் சொன்னாலும், இந்தியா அதன் அளவில் காந்தியின் ஆன்மாவால் சூழப்பட்டது. அதை நேருவைப்போல அறிந்தார் வேறெவரும் இல்லை. இந்தியாவுக்கு அசோகரை அடையாளமாக முன்னிறுத்தும் எண்ணம், காந்தியின் சீடன் என்பதனாலேயே நேருவுக்கு உதித்தது. அந்த அசோகர் தூணில் அடங்கிவிட்டது சார், இந்தியாவின் அத்தனை மகத்துவமும்!

நேருவையும் இகழ்கிறார்கள். இகழட்டும். மம்பட்டிகள் மலை பெயர்க்காது! ஆனால், நேருவை ஜனநாயகவாதி அல்ல என்று சொல்லிய சொல், இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. ``காங்கிரஸ் கட்சிக்கு நேருவின் குடும்பத்தில் இருந்து வராத ஒருவர் தலைவராகும்போதே, நேருவை ஜனநாயகவாதியாக ஏற்பேன்” என்று அறிவிக்கிறார், நேரு இருந்த இடத்தில் இப்போது இருப்பவர். `நேரு ஜனநாயகவாதியா இல்லையா’ என்பதற்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிதான் அளவுகோலா? ஒரே சொல்தான்... நேரு ஜனநாயகவாதி அல்ல என்றால், இந்தியாவில் வேறு எவருமே ஜனநாயகவாதி அல்ல! அவர்களின் அடல்ஜி ஒருமுறை நாடாளுமன்றத்தில் சொன்னார், ``நேரு இந்த நாட்டின் தன்னிகரில்லாப்  புதல்வன்” என்று. அவரே சொல்லிவிட்டார், அப்புறமென்ன?

நடப்பது, அரசியலைக் கடந்த சித்தாந்த யுத்தம்! காந்தி காலத்தில் நடந்த அதே சித்தாந்த யுத்தம். இந்தியாவை இந்துநாடாக வளர்த்தெடுப்பதற்காக யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு, பன்மைத்துவம் ஆவியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காந்தியைத் தகர்த்துவிட்டால், நேருவைச் சரித்துவிட்டால், சந்தேகமே வேண்டாம்... இந்தியா இந்து நாடு! அதிலே, கோட்சேக்கள்தாம் தேசபக்தர்கள். கோட்சேவை எதிர்ப்போரெல்லாம் தேசத்துரோகிகள்.

ஆனால், காந்தி வீழ்பவர் அல்ல. காந்தியமும் வீழும் சித்தாந்தம் அல்ல. ‘இன்றைய கார்ப்பரேட் காலத்தில், காந்தியப் பொருளாதாரத்தைக்கூட நாம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள், பொருளியல் ஆய்வாளர்கள். `காதி கிராஃப்ட்’ இன்னும் நீடிக்கிறது!

புத்தரை நாம் புறந்தள்ளினோம், பிற தேசத்தவர்களில் மனிதம் உள்ளவரை வாழ்வார் புத்தர். காந்தியையும், காந்தியத்தையும் நாம் புறந்ததள்ளலாம். உலகம் அவரை தனதாக்கிக்கொள்ளும். ஏற்கெனவே கொண்டுவிட்டது என்பதற்கான அடையாளங்கள் வரலாறுகளில் உண்டு . அகிம்சையும் வீழும் விழுமியம் அல்ல. வெடிகுண்டுகள் இருக்கும்வரை வெள்ளைக்கொடிகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். காந்தி எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய ‘அமைதித்தூதன்’. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கும், நெல்சன் மண்டேலாவுக்கும் அகிலம் சூட்டிய அடைமொழி, `கறுப்புக் காந்திகள்’!

காந்தியைப் பழிப்போர் அறிக! அவர், அணையா நெருப்பு. மண் அள்ளிப் போட்டாலும் கிளர்ந்தெரிவார். அவர், அழியா விதை. நிலம் கிள்ளிப் புதைத்தாலும் கிளைத்தெழுவார். 

காரணம், அவர் காந்தி!