Published:Updated:

கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!

கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!
கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!

எனது தாத்தாவான நாதுராம் கோட்சே, 1932-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளராக இருந்து அமைப்புக்கு மிக உண்மையாகப் பணியாற்றினார்.

“இந்துவாக இருப்பவன் தீவிரவாதியாக இருக்க முடியாது” என்றார், பிரதமர் மோடி. ``முளையிலே கிள்ளி எறியப்படவேண்டிய விஷச்செடி” என்றார், பி.ஜே.பி.தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. ``நாக்கை அறுக்க வேண்டும்” என்றார், அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ``நடமாட விடமாட்டோம்” என்றார், மன்னார்குடி ஜீயர். ``விஷமத்தனமான பிரசாரத்துக்குத் தடை செய்ய வேண்டும்” என்றார், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். ``கட்சியைத் தடை செய்ய வேண்டும்” என்றார், பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இவையெல்லாம் கோட்சே பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசிய கருத்துக்கு, முக்கியப் புள்ளிகள் ஆற்றிய எதிர்வினைக் கருத்துகள்.

கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!

அப்படி என்ன பேசினார் கமல்?

``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. பெயர் நாதுராம் கோட்சே. நான் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனாக அவரது கொலைக்கு நீதி கேட்டு வந்துள்ளேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்கள் அப்படியே உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன். இந்தியாவைப் பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு” என அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கமல் பேசினார்.

இதுதான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு காவல் நிலையங்களில் பி.ஜே.பி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகத் தற்போது கமலின் பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமலின் கருத்து தவறானதா... இவ்வளவு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்? கோட்சேவை, `இந்து தீவிரவாதி' என்று கூறியது காரணமா... உண்மையில் யார் இந்த நாதுராம் கோட்சே? 

இந்திய மக்களைப் பொறுத்தவரையில், தேசப்பிதாவான மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்று கேட்டால், `நாதுராம் கோட்சே’ என்னும் வகையில்தான் அவர் பற்றிய அறிமுகம் இருக்கிறது. கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஒருசில கட்சிகள் கூறிவந்தாலும், பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட சில பி.ஜே.பி கட்சியினர் இன்றளவும் அதை மறுத்து வருகிறார்கள். 

கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!

கோட்சே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரா?

கோட்சேவின் உடன்பிறந்த சகோதரரும், காந்தி கொலைவழக்கின் ஆயுள் தண்டனை கைதியான கோபால கோட்சே கூறியதாவது, ``சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தோம். நாதுராம், தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல... ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ்-தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸைவிட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கூறியிருந்தார். ஏனெனில், காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வல்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குச் சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை. நாதுராமுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது” என்று கூறியிருந்தார். (பார்க்க: 1994 ஜனவரி 28, ஃப்ரன்ட்லைன்)

கோபால் கோட்சேவின் மகள்வழி பேரன் சத்யாகி கோட்சே கூறுகையில், ``எனது தாத்தாவான நாதுராம் கோட்சே, 1932-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளராக இருந்து அமைப்புக்கு மிக உண்மையாகப் பணியாற்றினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகியதாகக் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் அமைப்பிலிருந்து வெளியேறவோ, வெளியேற்றப்படவோ இல்லை” என்றார். இதையே அவரது இதர குடும்ப உறுப்பினர்களும் வழிமொழிந்திருக்கிறார்கள். (2016 செப். 8, எக்கனாமிக் டைம்ஸ்) 

இந்து மகா சபை பொதுச் செயலாளர் முன்னா குமார் ஷர்மாவின் தனது பேட்டியில், ``ஆர்.எஸ்.எஸ் இப்போது காந்தியவாதியாகிவிட்டது" என்று கூறினார். ``இப்போது, அவர்களுக்கு கோட்சேவால் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், உண்மையாகவே கோட்சே எங்களைச் சார்ந்தவர். அதோடு அவர் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். இப்போது அவர்கள் அதை மறுத்தாலும், அந்தக் காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து மகாசபையும் வெவ்வேறு அமைப்புகளாக இருக்கவில்லை" எனச் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் பதிவுசெய்திருக்கிறார், முன்னா.

முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையில், ``காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்பவன், புனேயில் ஆர்.எஸ்.எஸ். ஊழியனாகப் பணியாற்றியவன்” என்று எழுதியிருக்கிறார்.( STORY OF MY LIFE, பக்கம் எண்:248)

கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே தேசப்பிதாவாக அங்கீகரிக்கப்பட்ட காந்தியைச் சுட்டுக் கொன்றாலும், அதைத் தவறாக அங்கீகரிக்காமல் பி.ஜே.பி உள்ளிட்ட மதச்சார்பு அமைப்புகள் தொடர்ந்து மௌனம் காத்துவந்தன. சில அமைப்புகள் ஒருபடி மேலேபோய் அவரைக் கொண்டாடி வருகின்றன. 

கோட்சே - ஆர்.எஸ்.எஸ்-காரரா? - வரலாறு ஒரு ரீவைண்ட்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பி.ஜே.பி எம்.பி. சாக்‌ஷி மகாராஜ், ``நாதுராம் கோட்சே மகாத்மா காந்தி போன்று ஒரு தேச பக்தர்" என்று கூறி சர்ச்சையில் சிக்கியதும், இந்து அமைப்பின் பெண் தலைவர் பூஜா சகுன் பாண்டே மகாத்மா காந்தியின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, பின்னர் கோட்சேவுக்கு மாலை அணிவித்ததும், இந்து மகா சபை அமைப்பு கோட்சேவுக்குக் கோயில் கட்ட குவாலியரில் அடிக்கல் நாட்டியதும், இந்தியா முழுவதும் கோட்சே சிலையைத் திறக்கப்போவதாக அறிவித்து ஓரிரு இடங்களில் அவர்கள் சிலை திறந்ததும், கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 அன்று வீரவணக்க நாளாக அனுசரித்துக் கொண்டாடியதும் அதற்கான உதாரணங்கள். தற்போதுகூட போபால் பி.ஜே.பி வேட்பாளர் பிரக்யா சிங் ``நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்” என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இருந்தும், நாதுராம் என்னும் தனிநபரின்மீது வைக்கப்படும் இத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மையா? காந்தியைச் சுட்டவர் கையில் `இஸ்மாயில்’ என்று பச்சைக்குத்திக் கொண்டிருந்தார் என்கிற வதந்தியும் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. காந்தி சுடப்பட்ட சமயமே, இந்து வேடமணிந்த ஓர் இஸ்லாமியர்தான் கொன்றார் என்று வதந்தி பரப்பப்பட்டு மதக்கலவரம் எழுந்தது. இருப்பினும், தென்னகத்தில் சமூகச் சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் போன்றவர்களின் தன்னிச்சையான நடவடிக்கையினால் கலவரங்கள் அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தியா - பாகிஸ்தான் என மதங்களின் அடிப்படையில் இருநாடுகள் பிரிக்கப்பட்டுவிட்டாலும், காந்தியின் படுகொலை மட்டும் எப்படிப் பிரித்தாலும் மதவெறி மிச்சமிருக்கும் என்பதற்கு அத்தாட்சியாகவே அமைந்தது. 

கமலின் கருத்தையொட்டி அண்மையில் காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி ட்வீட் செய்தது காந்தியின் படுகொலைக்குப் பிறகான இந்த மண்ணின் மதவெறி வரலாற்றைப் பதிவுசெய்திருந்தது. துஷார் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன் மற்றும் அவன் இந்துவும்கூட” என்று ட்வீட் செய்திருந்தார். மேலும், ``நாதுராம் கோட்சே, இந்து தீவிரவாதத்தின் நீரூற்று. அங்கிருந்து ஊற்றெடுத்த தீவிரவாதம்தான் மலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு மற்றும் தபோல்கர், பன்சார், கல்புர்கி, கௌரி லங்கேஷ் எனப் படுகொலைகளை நிகழ்த்தியதுவரை நீண்டிருக்கிறது. முன்பு காந்தியைக் கொலை செய்வதற்காக மேற்கொண்ட 5 முயற்சிகளிலும் கோட்சே, ஆப்தே கும்பல் தோல்வியடைந்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பூனேவைச் சேர்ந்த இந்துத்துவ தீவிரவாதச் சிந்தனைகளை உடைய பிராமணர்களும், இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்கர் கூட்டணியைச் சேர்ந்தவர்களும்தான் என்பது உட்பட அனைத்துமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. காந்தி படுகொலையானது, இந்தியாவின் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட தீவிரவாதச் சதி” என்று கூறியிருந்தார்.

மேலே சொன்ன எந்த வரலாறும் பொய்யென்றாலும், மதவெறி மனிதனை மிருகமாக்கும் என்பது மட்டும் காந்தியின் படுகொலையில் நிரூபணமான உண்மை. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு