Published:Updated:

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

"ஆணையமும் அரசும் மக்களுடன் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் திட்டம் போடுபவர்கள் யார்? சட்டம் போடுபவர்கள் யார்?" என்பது கண்டுபிடிக்க முடியாத வலிமிகுந்த நகைமுரண்.

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

"ஆணையமும் அரசும் மக்களுடன் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் திட்டம் போடுபவர்கள் யார்? சட்டம் போடுபவர்கள் யார்?" என்பது கண்டுபிடிக்க முடியாத வலிமிகுந்த நகைமுரண்.

Published:Updated:
வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

நாடெங்கிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மே 19-ம் தேதியுடன் முடிவுற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை, நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வாக்கு எந்திரக் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் முன்னிலையிலேயே ட்ரக் வண்டியில் வைத்து வாக்கு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகப் புகார் வந்துள்ளது.

மற்றொரு பக்கம், பிரபல ஆங்கில இதழான ஃபிரன்ட்லைன் ’காணாமல் போன வாக்கு எந்திரங்கள்’ என்று வெளியிட்டுள்ள கட்டுரை பேசுபொருளாகி வருகிறது. 1989-1990 வரையிலும் 2014-2015 காலகட்டம் வரையிலும் பெல் நிறுவனமும் ஈ.சி.ஐ நிறுவனமும் ஆணையத்துக்குக் கொடுத்த இருபது லட்சம் வாக்கு எந்திரங்கள் காணாமல்போனதாக மகாராஷ்டிராவிலிருந்து பதியப்பட்ட ஆர்.டி.ஐ தகவல்கள் கூறுவதாக அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இருபது லட்சம் வாக்கு எந்திரங்கள் என்பது மாபெரும் எண்ணிக்கை. தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லவாசா, ``பிரதமர் மோடிக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட தேர்தல் நடத்தை தொடர்பான புகார்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை" என்று பேசியுள்ளார். உச்சக்கட்டமாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்தல் வாக்கு எந்திரங்கள் தொடர்பாகத் தனது கவலையைத் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தைச் சந்தித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், ``எண்ணிக்கைக்கு முன்பு வாக்கு எந்திரச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையமும் இன்றுகூடி இதுதொடர்பாக முடிவுசெய்ய இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நேரத்தில் இந்தியத் தேர்தல்களில் சர்ச்சை எழுவது இது முதன்முறை இல்லை என்றாலும், ஆதாரங்களுடன் வெளியாகும் இந்தப் 'பகீர்' புகார்களும் அவை தொடர்பாக மௌனம் காத்துவரும் ஆணையத்தின் செயல்பாடுகளும் மூச்சடைக்கும் வகையிலாகவே அமைந்துள்ளது.  

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில நாள்களுக்கு முன்பு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ``கடந்த காலங்களில் எல்லாம் இப்படியான சர்ச்சைகள் ஆணையத்தின்மீது எழுப்பப்படும்போது ஊடகவியலாளர்கள் எங்களது கருத்துகளைக் கேட்டார்கள். ஆனால், தற்போதைய ஊடகங்கள், அப்படிக் கடமை உணர்வுடன் நடந்துகொள்வதில்லை" என தேர்தல் ஆணையம் தொடர்பான புகார்களை ஊடகங்கள் தவறாகச் சித்திரிப்பதாகவும் பெரிதுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து இத்தனை புகார்கள் இருக்கும் நிலையில், தாமாக முன்வந்து விளக்கம் கொடுக்கவேண்டியது கட்டாயம். அவர்களும் விளக்கம் அளிக்கவில்லை என்பதால், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது. நேர்மை குறித்து இத்தனை கேள்விகள் இருக்கும் நிலையில், நாளைய முடிவுகளைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

``முக்கியமாக, ஃபிரன்ட்லைன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஆர்.டி.ஐ தகவலின்படி, 1989-1990 முதல் 2014-2015 வரையிலான

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

காலகட்டங்களில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் 20 லட்சம் வாக்கு எந்திரங்கள், தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்காற்றி இருக்கும்” எனக் குறிப்பிடுகிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ. அவர் கூறுகையில், ``மகாராஷ்டிராவிலிருந்து ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடமிருந்தும் பெல் நிறுவனத்திடமிருந்தும் ஈ.சி.ஐ நிறுவனத்திடமிருந்தும் தனித்தனியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைப் பெற்றிருக்கிறார். அதன்படி, தேர்தல் ஆணையம் 1989-1990 முதல் 2014-2015 வரையிலான காலகட்டத்தில் பெல் நிறுவனத்திடமிருந்து 10,05,662 வாக்கு எந்திரங்களையும், ஈ.சி.ஐ. நிறுவனத்திடமிருந்து 10,14,644 மின்னணு வாக்கு எந்திரங்களையும் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அந்த இரு நிறுவனங்களும் முறையே  19,69,932  மற்றும் 19,44,593 வாக்கு எந்திரங்கள் தயாரித்துக் கொடுத்ததாகக் குறிப்பிடுகின்றன. ஆக, ஆணையத்திடம் இருக்கும் இருபது லட்சம் வாக்கு எந்திரங்கள்போக மீதம் இருபது லட்சம் வாக்கு எந்திரங்கள் பழுதடைந்துவிட்டாலும் அது அழிக்கப்பட்டதற்கோ அல்லது பழுதுபார்க்கக் கொடுக்கப்பட்டதற்கோ ஆதாரங்களே இல்லை. எந்தவித அரசுக் கோப்புகளும் அழிக்கப்படும் நிலையில், அது அழிக்கப்பட்டதற்கான கோப்புகள் பராமரிக்கப்படும். சாதாரண கோப்புகளுக்கே காப்புப் பிரதிகள் இருக்கும் நிலையில், பழுதுபோன வாக்கு எந்திரங்களுக்கான காப்புக் கோப்புகள் இருக்காதா? ஆனால், ஆணையம் தங்களிடம் அப்படிக் கோப்புகளைப் பராமரிப்பதற்கான வசதிகள் இல்லை என்று அப்பட்டமாக அலட்சிய பதில் ஒன்றை உதிர்க்கிறது. ஒருவேளை, காணாமல் போனதாகச் சொல்லப்படும் எந்திரங்கள் செயல்பாட்டில் இருக்கும் வாக்கு எந்திரங்களுடன் மாற்றி வைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், அதைச் செய்வது மிகச் சுலபம். கருத்துக் கணிப்பு முடிவுகளும் கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டால் எந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே புகார் எழுப்புவதாகக் கூறி இந்தப் பிரச்னையை அவர்கள் சரிகட்டலாம்” என்றார்.

வாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா?

'திட்டம் போட்டு திருடுற கூட்டம் 

திருடிக்கொண்டே இருக்கும்

அதைச் சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்கும்'

மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் வரிகள் இவை. "ஆணையமும் அரசும் மக்களுடன் ஆடும், ஆடுபுலி ஆட்டத்தில் திட்டம் போடுபவர்கள் யார்; சட்டம் போடுபவர்கள் யார்?" என்பது கண்டுபிடிக்க முடியாத வலிமிகுந்த நகைமுரண்.