Published:Updated:

பறித்தார் ராகுல்... கொடுத்தார் வாசன்!

விகடன் விமர்சனக்குழு
பறித்தார் ராகுல்... கொடுத்தார் வாசன்!
பறித்தார் ராகுல்... கொடுத்தார் வாசன்!
பறித்தார் ராகுல்... கொடுத்தார் வாசன்!

தூத்துக்குடி: ராகுல் காந்தியால் பதவி பறிக்கப்பட்ட யுவராஜாவுக்கு, தூத்துக்குடி துறைமுக சபை உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறார் கப்பல் துறை அமைச்சர் வாசன். இது ராகுல்காந்தியை மீறிய செயல் என கட்சியினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு ஆண்டு பதவி காலம் கொண்ட துறைமுக சபை உறுப்பினர் பொறுப்பிற்கு, துறைமுகம் சார்ந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், வர்த்தகசங்க பிரமுகர்கள், உப்பு இலாகாவை சேர்ந்தவர்கள், மீன் வள சொசைட்டியை சேர்ந்தவர்கள், பெரிய அளவிலான தொழிற்சாலையை சேர்ந்த பிரதிநிதிகள், கடலோர காவல்படை, துறைமுக முதன்மை பொறியாளர்கள், துறைமுக போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள், இவர்களோடு கப்பல் துறை அமைச்சர் சிபாரிசு செய்கிறவர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வழக்கம் போல் இந்தாண்டுக்கான துறைமுக சபை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கப்பல் துறை அமைச்சரின் தீவிர ஆதரவாளரான யுவராஜா, தஞ்சாவூரை சேர்ந்த சிதம்பரம் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

புதிய உறுப்பினர்கள் பதிவியேற்பு விழா இன்று நடந்தது. துறைமுக சபை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், தொழிலதிபர்கள் ஜோ.வில்லவராயர், பிரேம்வெற்றி, பொன்வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா, எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பி.எஸ்.ஏ.சிதம்பரம், உடையப்பன் இவர்களோடு சத்தியநாராயணன், ஆர்.செல்வக்குமார், ஸ்ரீநிவாஸ், ஏ.கே.சரண், கமாண்டன்ட் ஆனந்தகுமார் உட்பட 16 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

உடனே புதிய சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் துறைமுக வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய யுவராஜா, ‘‘சேதுசமுத்திரதிட்டம் நிச்சயமாக வர வேண்டும். அதற்கான வேலைகளை மும்முரபடுத்துவோம்’ என்றார்.

##~~##
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜா மீது புகார் கூறப்பட்டதை தொடர்ந்து, அவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சஸ்பெண்ட் செய்தார். அதன் பிறகும் மாணவர் காங்கிரஸில் தலையிடுகிறார் என்கிற புகார் கிளம்பியது. இதையடுத்து, தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் காங்கிரஸின் மாநில நிர்வாகத்தையே கலைத்தார் ராகுல்காந்தி.

இத்தகைய சூழ்நிலையில் அதே யுவராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறார் அமைச்சர் வாசன். இது ராகுல்காந்தியையே மீறிய செயலாக காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கட்சியில் நீண்டகாலமாக உழைக்கும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தவர்களை விட்டு, விட்டு வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார்’ என்கிற மனவருத்தம் காங்கிரஸார்கள் மத்தியில் உலா வருவதை பார்க்க முடிகிறது

-எஸ்.சரவணப்பெருமாள்