Published:Updated:

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்
``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``மோடி தன்னுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், `நாங்கள் வாக்கு இயந்திரத்தில் எந்தக் கோளாறுகளையும் செய்யவில்லை' என்று. ஒரு கடைக்குள்ளிருந்து 350 வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டிகளை எடுக்கிறார்கள், ஒருவர் ஆட்டோவில் கொண்டு செல்கிறார், ஒருவர் தலையில் சுமந்து செல்கிறார். வீடுகளில் பெட்டிகள் இருந்தன. அதிகாரிகளே வாக்கு செலுத்திய கொடுமையும் நடந்தது."

நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சி, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் 3, 4 இடங்களைப் பெற்றுள்ளனர் அக்கட்சியின் வேட்பாளர்கள். 2010ம் ஆண்டு கட்சி தொடங்கிய சீமான், 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இந்த முறை இந்த விகிதம் உயரத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், தேர்தல் முடிவுகளால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். 

சீமானிடம் பேசினோம். 

தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``என்னத்த பார்க்கிறது... படித்த இளைஞர்களும் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களுடைய உழைப்பு அசாத்தியமானது. அதற்கான அறுவடை என்பது குறைவாக உள்ளது. பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுவிட்டனர். எங்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் ஊடகங்கள் பார்த்தன. நாங்கள் போட்டியிடுகிறோம் என்பதைக்கூட எந்த ஊடகங்களும் சொல்லவில்லை. கடைசிநேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கள் சின்னத்தைத் தெரியவிடாமல் செய்தபோதும், மக்கள் எங்களை ஆதரித்ததை மகத்தான ஒன்றாகப் பார்க்கிறோம். `எனக்கு ஓட்டு போட்டால் பிஜேபி வந்துவிடும்' எனத் தி.மு.க பிரசாரத்தை முன்னெடுத்தது. கிறிஸ்துவ, முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளில் ஒன்றுகூட எனக்கு வந்து விழவில்லை. மாற்று அரசியலுக்கான விதையாகத்தான் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கிறேன். அடுத்த தேர்தலில் பல மடங்கு வெறிகொண்டு வேலை பார்ப்போம்". 

பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறாரே கமல்? 

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``தேர்தலில் அவருடைய பங்களிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்படத்தைப் போலவேதான் அரசியலையும் பார்க்கிறார். 50 வருடம் நடித்திருக்கிறார். என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவரை ஒரு பெர்சனாலிட்டியாகப் பார்ப்பவர்கள்தான் அதிகம். நாங்கள் உழைக்கும் மக்கள். எங்களை அழுக்கு மனிதர்களாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இதே தோல்வியை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பாரா எனத் தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் நான் தனித்துப் போட்டியிடுவேன். 117 இடங்களை ஆண்களுக்கும் 117 இடங்களைப் பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்துப் போட்டியிட வைப்பேன். அதற்கான வேலைகளை இப்போதிருந்தே செய்யத் தொடங்குவோம். என்னுடைய நோக்கம் பெரிது. கனவு பெரிது. அவர்களுக்கு அதெல்லாம் இல்லை. ரஜினி வரும்போது இதைவிடப் பெரிய சலசலப்பு இருக்கும்". 

தேசிய அளவில் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெறும்போது, தமிழகச் சூழல்கள் பா.ஜ.கவுக்கு எதிராக மாறிவிட்டதே? 

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``அதெல்லாம் ஒன்றும் இல்லை. அரியானாவில் மோடிக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் போனார்கள். மோடி தன்னுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், `நாங்கள் வாக்கு இயந்திரத்தில் எந்தக் கோளாறுகளையும் செய்யவில்லை' என்று. ஒரு கடைக்குள்ளிருந்து 350 வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டிகளை எடுக்கிறார்கள், ஒருவர் ஆட்டோவில் கொண்டு செல்கிறார், ஒருவர் தலையில் சுமந்து செல்கிறார். வீடுகளில் பெட்டிகள் இருந்தன. அதிகாரிகளே வாக்கு செலுத்திய கொடுமையும் நடந்தது. நான் ஒன்றை மட்டும் எதிர்பார்த்தேன், மோடி ஆட்சியில் இருந்தால்தான் மக்கள் புரட்சிக்குத் தயாராவார்கள் என்று. நேரடியாகப் புரட்சி நடக்கும். அதை நோக்கிய பாதையை மோடியே உருவாக்கித் தருவார். எனவே, மோடி ஆட்சியில் தொடர்வதே நல்லது. இந்தப் பொருளாதார அமைப்புக்குள் இருந்து கொண்டு நம்மால் எதையும் செய்ய முடியாது. முதலாளிகளின் நலனைத் தவிர மக்கள் நலனுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்". 

தி.மு.க பெற்ற வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள்!'' - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்

``அவர்கள் நல்ல விலை கொடுத்து வெற்றியை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் பெற்றிருக்கிற கடைசி வெற்றியும் இதுதான். பா.ஜ.க என்ற பூச்சாண்டியைக் காட்டி தேர்தல் வண்டியை ஓட்டினார்கள். கடந்த கால சாதனைகளைச் சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை. சட்டசபையில் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் எனப் பார்க்கத்தானே போகிறோம். தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. இது ஒரு நாடகக் கம்பெனி. தேர்தல் கமிஷன் என்கிறார்கள். உண்மையில், கமிஷன் மட்டும்தான் நடக்கிறது. ஆணையத்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 4 தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். ஏன் கண்டுகொள்ளவில்லை? வேலூரில் மட்டும்தான் பணம் கொடுத்தது கண்ணுக்குத் தெரிந்தது. காந்தி இருந்திருந்தால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருப்பார். `இதற்காகவா நாங்கள் போராடினோம்' என நொந்து போயிருப்பார்". 

தேர்தலில் உங்களுக்கு நம்பிக்கை கொடுத்த தொகுதிகள் எவை? 

``எனக்கு எப்போதுமே கொங்கு மண்டலம் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும். இந்த முறை அந்த வாக்குகளைக் கமல் வாங்கிவிட்டார். ஆனால், சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குகளை நாங்கள் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பரவலாகப் பல தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஒரு பொதுக் கட்சியாக எங்களைப் பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி".

Vikatan
அடுத்த கட்டுரைக்கு