Published:Updated:

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்
''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்

'' கட்சி பிரிந்ததெல்லாம் தோல்விக்குக் காரணமில்லை. பிரிந்துசென்றவர்களின் நிலையும் இதேதான். கட்சிக்குள்ளேதான் எங்கள் தோல்வியின் காரணம் இருக்கிறது.''

''2014 நாடாளுமன்றத் தேர்தல்... தமிழகத்தில் அ.தி.மு.க 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. துல்லியமாக 94.87 வெற்றி சதவிகிதத்தைத் தனதாக்கிக் கொண்டது அந்தக்கட்சி. 'மோடியா, இந்த லேடியா' என்ற காரசாரமான பிரசாரத்தை முன்னிறுத்தி அ.தி.மு.க-வை, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் கொண்டு சென்று அமர்த்தினார், அப்போதைய முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா. 

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்


காலங்கள் மாறுவதுபோலவே, காட்சிகளும் மாறின. முதல்வராகவும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மறைந்தார். அரியணைக்கு ஆசைப்பட்டு, பிரிந்தது கட்சி. 'தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்பதுபோல், தொண்டர்களே குழம்பிப்போகும் அளவுக்குத் தலைமை மாறிமாறி அமைந்தது. கூவத்தூரில் நடந்த நிகழ்வுகள் அரசியல் கேவலத்தின் உச்சம் என்று அ.தி.மு.க தொண்டர் ஒருவரே சொன்னதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து சறுக்கத்தொடங்கிய அ.தி.மு.க-வுக்கு, இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அவர்கள் இந்தப் பேரிடியிலிருந்து மீண்டுவருவார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால், அகில இந்திய அளவில் தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.''

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்

முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி, தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க தேர்தல் முடிவுகள் தொடக்கத்திலிருந்தே இவர்களுக்குப் பின்னடைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. இது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில், அதிமுக-வுக்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது. ஆனால், பூஜ்ஜியத்திலிருந்து 38 தொகுதிகளை அறுவடை செய்திருக்கிறது தி.மு.க கூட்டணி. ஆனால், 'நாற்பதும் நமதே' என்ற முழக்கத்துடன் களமிறங்கிய அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. 

'இந்தத் தோல்வி எதிர்பாராதது' என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர். தோல்விக்கான காரணம் குறித்து மேலும் அவர் கூறுகையில், ''தமிழகத்தில் அ.தி.மு.க போட்டியிட்ட 20 தொகுதிகளில், 12 தொகுதிகளிலாவது வெற்றிபெறும் என்று நினைத்தோம். இன்றைய சூழலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், கட்சித் தொண்டர்களை ஊக்குவித்து, கூட்டணிக் கட்சிகளுக்காக ஓயாது களப்பணியாற்றச் சொன்னோம். ஆனால், நாங்கள் இந்த அளவு மோசமான தோல்வியைச் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும், 38 இடங்கள் என்பது மிகப்பெரிய தோல்வியே. இதற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். எங்கே சறுக்கினோம் என்பதைத் தேர்தல் சுற்று முடிவுகள் எங்களுக்கு எடுத்துக்கூறின.

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்


இப்போது பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததைத் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இப்போதுதான் அதைப் புரிந்துகொண்டோம். நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று நினைத்த தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க எப்படித் தோற்றது என்றே தெரியவில்லை. இதேபோல் இன்னும் சில தொகுதிகள் இருக்கின்றன. கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை. அதிலும் பெரிய அடி விழுந்துள்ளது. அதேபோல், சேலம் தொகுதிக்கு முதல்வர் நிறைய செய்திருக்கிறார். சேலத்தின் முகத்தையே மொத்தமாக மாற்றியிருக்கிறார். ஆனால், சேலம் தொகுதியிலும் தோற்றிருக்கிறோம். மக்கள் வேறு எதையோ நினைத்திருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாதான் எங்கள் நம்பிக்கை. அவர் இல்லாத இந்தத் தேர்தல், நிறையவே எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. கட்சி பிரிந்ததெல்லாம் தோல்விக்குக் காரணம் இல்லை. பிரிந்து சென்றவர்களின் நிலையும் இதேதான். கட்சிக்குள்ளேயேதான் எங்கள் தோல்விக்கான காரணம் இருக்கிறது. கட்சி நம்பிய சிலர், கட்சி மாறினார்கள். பதவிக்காகத் தலைமையை மிரட்டுவது; அதனால் தேர்தல் பணி செய்யாத அமைச்சர்கள் எனக் காரணங்களைப் பட்டியலிடலாம். அதேபோல், இன்னும் சிலர் வேறு கட்சிக்கு மாறத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இயக்கம் முக்கியமல்ல. அதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில முக்கிய அமைச்சர்கள் 40 தொகுதிக்கும் சேர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் எனப் பட்டியலிட்டோம். ஆனால், அவர்கள் பிரசாரம் செய்ய செல்லவே இல்லை. சிலர் முக்கிய வேட்பாளர்களுக்கு மட்டுமே பிரசாரம் செய்தார்கள். முதல்வர் மட்டும்தான் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தார். அதேபோல், செலவு செய்யப்பட வேண்டிய இடமும் சொதப்பி இருக்கிறது. முதல்வர் மட்டும்தான் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றில்லை. இது எங்கள் எல்லோருடைய தோல்வி. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். மீண்டு வருவோம்.

''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்!?'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்மாவும் இதே பி.ஜே.பி-யுடன்தான் கூட்டணி வைத்தார். அப்போது, இதைவிட நிலைமை மோசம். ஆனால், அதிலிருந்து அம்மா மீண்டெழுந்து இயக்கத்தைக் கட்டி எழுப்பி, இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நாடாளுமன்றத்துக்குச் கொண்டுசென்றார். அதைத்தான் இப்போது நாங்களும் செய்ய வேண்டும். இனி அணிகள் இணையுமா, சிலர் கட்சியைவிட்டு வெளியேறுவார்களா என்று மீடியாக்கள் பேசிவருகிறார்கள். யார் இணைந்தாலும், யார் சென்றாலும் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறும் என நினைக்கிறேன். ஏனென்றால், மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். தலைமை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுக்குக் கட்டுப்பட்டால்தான், கட்சியை வழிநடத்த முடியும். நிர்வாகிகளே இப்படி இருந்தால், தொண்டர்கள் என்ன செய்வார்கள்?'' என்றார் விரக்தியுடன்.

தனி ஒருவராக, அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் நாடாளுமன்றம் செல்கிறார். அ.தி.மு.க-வின் இந்த படுதோல்வியை மனதில் வைத்தாவது, இனிவரும் காலத்தில் அவர் செயலாற்ற வேண்டும்.

Vikatan
பின் செல்ல