Published:Updated:

வாட்ஸ்அப்பில் பரவிய சுப.வீரபாண்டியன் படம் ... நாம் தமிழர் கட்சியினர் காரணமா?

வாட்ஸ்அப்பில் பரவிய சுப.வீரபாண்டியன் படம் ... நாம் தமிழர் கட்சியினர் காரணமா?
வாட்ஸ்அப்பில் பரவிய சுப.வீரபாண்டியன் படம் ... நாம் தமிழர் கட்சியினர் காரணமா?

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் புகைப்படத்துக்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க-வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. இதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சியினர் இருப்பதாக சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

வாட்ஸ்அப்பில் பரவிய சுப.வீரபாண்டியன் படம் ... நாம் தமிழர் கட்சியினர் காரணமா?

சமூகவலைதளங்களில் தி.மு.க-வினரும் நாம் தமிழர் கட்சியினரும் கடுமையாக மோதிக்கொள்வது சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துப் பேசிவந்தார். அதையடுத்து, தி.மு.க-வின் முரசொலி ஏட்டில் சீமான் பெயரைக் குறிப்பிடாமலே, அவரைக் கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியானது. அன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க-வை சீமான் கடுமையாக விமர்சித்தார். 

அதன் பிறகு, நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் விமர்சித்து, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஒரு மேடையில் பேசினார். அதில், `நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தன் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் 400 கோடி ரூபாய் தருவதாக தி.மு.க-வினர் சொன்னார்கள் என்று சீமான் சொல்கிறார். அதைச் சொன்னது யார் என்று சீமான் சொல்வாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சமூகவலைதளங்களில் தம்மைத் தரக்குறைவாகத் தாக்கிவருவதாக சுப.வீரபாண்டியன் தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள். 

நம்மிடம் பேசிய சுப.வீரபாண்டியன் தரப்பினர், ``400 கோடி ரூபாய் தருவதாகச் சொன்னது யார் என்று சுப.வீரபாண்டியன் கேட்கிறாரே‘ என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘செத்துப்போனவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று சீமான் பதில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான், சுப.வீரபாண்டியன் இறந்துவிட்டதுபோலவும், அவரது புகைப்படத்துக்கு ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி செலுத்துவதுபோலவும் படங்கள் பரப்பப்படுகின்றன” என்றனர். சுப.வீரபாண்டியன் நம்மிடம், ``நான் இறந்துவிட்டதாகவும் என் படத்துக்கு தளபதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதாகவும் போட்டோஷாப் மூலம் படங்களைத் தயாரித்து வாட்ஸ்அப்பில் பரப்புகிறார்கள். இதுதான் நாம் தமிழர் கட்சியினரின் அரசியல். வேறென்ன சொல்ல..?” என்றார்.

வாட்ஸ்அப்பில் பரவிய சுப.வீரபாண்டியன் படம் ... நாம் தமிழர் கட்சியினர் காரணமா?

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசனிடம் கேட்டபோது, ``இந்தப் படம் நாம் தமிழர் குழுக்களிலோ, நாம் தமிழர் கட்சியினர் முகநூல் பக்கத்திலோ பகிரப்பட்டதாகத் தெரியவில்லை. இணையத்தில் இயங்கும் நாம் தமிழர் கட்சியினர் இப்படியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தலைமையிலிருந்து கடுமையான அறிவுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, இது நாம் தமிழர் தம்பிகளின் வேலையாக இருக்காது. எங்கள் அடையாளங்களை வைத்துக்கொண்டு ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டு எங்கள் பெயரை கெடுக்க வேண்டுமென்று சிலர் தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இது, அவர்களின் வேலையாக இருக்கலாம். அப்படி ஒரு வேலை இதைப் பரப்பியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபராக இருந்தால், கட்டாயம் அவர் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார் என்பது உறுதி. ஐயா சுப.வீ அவர்களோடு எங்களுக்கு இருப்பது முழுக்க முழுக்க சித்தாந்த முரண் தானே ஒழிய, தனிப்பட்ட எந்த முரணும் இல்லை. இந்தச் செயலைச் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் கண்டனத்துக்குரியவர், தண்டிக்கப்பட வேண்டியவர்” என்றார்.

Vikatan