Published:Updated:

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?
காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

‘இளங்கோவன் என்ன, கார்த்தி சிதம்பரத்தைத் தலைவராகப் போட்டால்கூட, கடலூர் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க பத்து கதர்ச்சட்டைகள் இருப்பார்கள்’ என்பதும் அவர் சொல்தான். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் சொல்வதற்கு ஒரு சொல் இருக்கிறது...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகப்போவதாக, செய்திகள் வருகின்றன. இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது ராகுலைப் பற்றி பேசாமல், வேறு எப்போது பேசுவது? பேசுவோம்.

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

அண்மைக்காலங்களில், ராகுல் அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை. “நீ ஒரு கோமாளி” என்றார்கள். ஆனால், `அப்படியா?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார், ராகுல். `நீ ஒரு பச்சா” என்றார்கள். ஆனால், `ஆகட்டும்’ என்று சொல்லிச் சென்றார் ராகுல்.

அடிப்படையில், அன்பானவர் அவர். அதனால்தான், கல்லூரி மாணவியிடம், ‘கால் மீ ராகுல்’ என்று சொல்ல அவரால் முடிந்தது. அடிப்படையில், ஆணவமற்றவர் அவர். அதனால்தான், தனது பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தவரைக்கூட, அவரால் தட்டிக்கொடுத்து நகர முடிந்தது. இப்படிப்பட்டவரை, இந்திய மக்களின் முன்பு வேறுமாதிரி பிம்பப்படுத்தின, சில வட இந்திய ஊடகங்கள். அதை ஒரு ‘அசைன்மென்டாகவே’ எடுத்துச் செய்தார்கள், அவர்கள்.

ஆதாரம் வேண்டுமா, குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. நாடே நகம் கடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு ரவுண்டில் பி.ஜே.பி லீட் எடுத்தால், இன்னொரு ரவுண்டில் காங்கிரஸ் லீட் எடுக்கிறது. அந்த நேரத்தில், பாப்கார்ன் சாப்பிட்டபடி ‘ஸ்டார் வார்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்தார் ராகுல். போதாதா `ஆர் யூ சீரியஸ் ராகுல்?’ என்று ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். ‘பொறுப்பற்றவரா ராகுல்?’ என்று, இரண்டு நாள்களுக்கு விடாமல் விவாதம் நடத்தினார்கள். ஆனால், அதே வாய்தான், பின்னாளில் பிரதமர் மோடி அக்‌ஷய்குமார் எனும் சினிமாக்காரனுடன் ஆறு மணி நேரம் அளவளாவி மகிழ்ந்தபோது, ’எவ்வளவு எளிமை பாருங்கள்’ என்று பாராட்டித் தள்ளியது. இப்போது விளங்குமே, ’பப்பு’ பிரசாரத்துக்குப் பின்னால் இருந்த பகீரத பிரயத்தனங்கள்!

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

எதற்கு அந்த அறிவாளிக் கூட்டம் அவ்வளவு சிரமப்பட்டதோ, தெரியவில்லை. ராகுலைக் கேட்டிருந்தால் ‘ஆமாம், பார்த்தேன்’ என்று அவரே சொல்லியிருப்பார். ஜி.எஸ்.டி அமலானபோது, நிதியமைச்சர் அருண் ஜெட்லியை இப்படி விமர்சித்தார் ராகுல்... ’May the farce be with you'. இதுவே, `ஸ்டார் வார்ஸ்’ வசனம்தான்!

இதே கூட்டம்தான், `மோடி அளவுக்கு ராகுலுக்குக் கவர்ச்சியில்லை’ என்றும் கிளப்பிவிட்டது. அட, கவர்ச்சி என்பதுதான் என்ன? காந்தியைவிடக் கவர்ச்சிகர அரசியல்வாதி இந்திய அரசியலில் உண்டா. அவர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவன்தான் இங்கு இருக்கிறானா. ஆனால், அப்போதிருந்த கவர்ச்சியின் வரையறை, இன்றைய காலத்துக்குப் பொருந்தாது. ஏனென்றால், இப்போதைய கவர்ச்சி அரசியல், 'நான்' என்ற பிம்பத்தால் கட்டமைக்கப்படுகிறது. 'நான் இரும்புப் பெண்மணி, நான் அகன்ற மார்பு கொண்டவன்' என்ற வாக்கியங்களால், அது நிலைநிறுத்தப்படுகிறது.

’பிரதமர் மோடி அமெரிக்காவையும் சீனாவையும் அலறவிடுகிறார்’ என்று சொல்லும்போது, 'அது உண்மையா பொய்யா' என்பதையே அறிய முயலாமல், கைதட்டி மகிழ்கிறார்கள் மக்கள். ஆனால், ராகுல் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்ல. அவர், லால்பகதூர் சாஸ்திரி மாதிரியான அரசியல்வாதி. கனமானவர், திடமானவர். ஆனால், இவர்கள் எதிரிபார்க்கும் கவர்ச்சிகளற்றவர். இதனால்தான், ராகுல் அதிகம் கவனிக்கப்படவில்லை. அவரது பேச்சுகளின் அர்த்தமும் சரியாக விவாதிக்கப்படவில்லை. `மக்களுக்காக 18 மணிநேரம் உழைக்கிறேன்’ என்று சொல்வதுதான் இப்போது கவர்ச்சி அரசியல். `கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப அளிப்பேன்’ என்று சொல்வது அல்ல.

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

நாமே அறிவோம்... அநாகரிக அரசியலும் வெறுப்புப் பேச்சுகளும் வாகைசூடும் நிலைக்கு வந்து நிற்கிறது நாடு. `இந்த முறைபோல, எந்த முறையும் வெறுப்புப் பேச்சுகள் உச்சம் தொட்டதில்லை’ என்று, முன்னாள் தேர்தல் அதிகாரிகளே புலம்பி வருகிறார்கள். கோட்சேவைத் தேசப்பற்றாளர் என்றவர், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கிறார். இதுபோன்ற சூழலில், `வெறுப்பை நான் வெறுக்கிறேன். அன்பை மட்டுமே விரும்புகிறேன்’ என்று சொல்லும் அரசியல்வாதியாக ராகுல் இருந்தது எவ்வளவு பெரிய ஆறுதல்? எந்த இடத்திலும் தனிப்பட்ட தாக்குதல்களையோ, தரம்குறைந்த வார்த்தைகளையோ ராகுல் தப்பித்தவறிக்கூடப் பயன்படுத்தவில்லை. இதற்கும் ஆதாரம் வேண்டுமா... ராகுலின் குடும்பத்தைக் குறிவைத்து இழிவுபடுத்தினார் பிரதமர் மோடி. ராகுலை மனநலம் குன்றிய குழந்தை எனப் பாரதப் பிரதமர் கீழான அவல நகைச்சுவை செய்தபோதும், ராகுல் அமைதியாகவே இருந்தார். ஆனால், ‘நான் இறந்தாலும் இறப்பேனே தவிர, மோடியின் பெற்றோரை அவமதிக்க மாட்டேன்’ என்றே சொல்லெடுத்தார் ராகுல்.

இங்கு பிரியங்கா காந்திபோல், 'யார் ஸ்மிருதி' என்று கேட்டால் வரும் 'கவர்ச்சித் தலைவர்' மதிப்பு, ஏனோ ஸ்மிருதிக்கு வாழ்த்துச் சொல்லும் ராகுலுக்கு வருவதில்லை. 

மோடி மட்டுமல்ல, சரத்பவார் அமைதியிழந்தார், மாயாவதி அத்துமீறினார், மம்தாவும் ’லேடி மோடி’யாக மாறினார். ஆனால், ராகுல் நிதானமாகவே அரசியல் செய்தார். தோல்விக்குப் பிறகு ஸ்மிருதி இரானிக்கு அவர் சொன்ன வாழ்த்துச் செய்தி, அவ்வளவு தன்மையானது. அதுவும் ராகுல் சொன்னபோது, வாக்குகள் எண்ணப்பட்டு முடிக்கவில்லை. ஆயினும், ஸ்மிருதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். `மக்களின் முடிவை மதிக்கிறேன். அதற்குச் சாயம் கொடுக்க விரும்பவில்லை’ என்றதும்கூட, அவ்வகையையே சேரும். 

இன்னொரு புறம், விவசாயிகளையும் இளைஞர்களையும் அரசியலரங்கில் அதிகளவில் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசியவராகவும் ராகுலே இருந்தார். விவசாயக்கடனையும் வேலைவாய்ப்பையும் ராகுல் உச்சரித்த அளவுக்கு வேறு எவருமே உச்சரிக்கவில்லை. இதற்காகவேனும் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். வெற்றி தோல்விகளைக் கடந்து பார்க்கும் பார்வை, நமக்கு வேண்டும்.

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

என்ன சொன்னாலும் ஆளும்கட்சியின் பொருளாதாரத் தோல்விகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்ததில் ராகுலுக்குப் பெரும்பங்கு உண்டு. `பணமதிப்பிழப்பு முட்டாள்தனமான நடவடிக்கை’ என்று விமர்சித்ததாக இருக்கட்டும், `இது Goods and Service Tax இல்லை. Gabbar Singh Tax’ என்று விவாதத்தைக் கிளப்பியதாக இருக்கட்டும் ராகுல் கலக்கினார். அவரின் விமர்சனங்களுக்குப் பிறகே, மோடி வாய்திறந்தார். `பணமதிப்பிழப்பையும் ஜி.எஸ்.டி-யையும் வைத்து மட்டும் என்னை மதிப்பிடாதீர்கள்’ என்று விளக்கம் கொடுத்தார். 

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்களில், சத்தமில்லாமல் சிலவற்றைச் சாதித்தார் ராகுல். கட்சிக்காரர்கள் மக்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள `சக்தி’ செயலியை அறிமுகப்படுத்தினார். ஆளும்கட்சியின் முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகை வெளியிட்டார். மக்களிடம் கருத்துகள் கேட்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்தார். ஆனால், இத்தனை பாசிட்டிவ்களையும் அசோக் கெலாட்டையும் கமல்நாத்தையும் முதலமைச்சராக்கியதன் மூலம் நெகட்டிவாக்கினார்.

ஊருக்கே தெரியும்... ராஜஸ்தானின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவர் சச்சின் பைலட், மத்தியப் பிரதேச வெற்றிக்கு அயராது உழைத்தவர் ஜோதிராதித்யே சிந்தியா. இப்படிப்பட்ட இளம் தலைவர்களைக் கையில் வைத்துக்கொண்டு, மீண்டும் முதியவர்களுக்கே வாய்ப்பு அளித்தது என்னவகை அரசியலோ? இளைஞர் காங்கிரஸை இழைத்து இழைத்து வலுவாக்கிய ராகுலிடம், இதை எதிர்பார்க்கவில்லை, இளைஞர் தரப்பு. என்ன சொல்வது? அந்த இரண்டு மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை வென்றிருந்தாலே, எதிர்க்கட்சி அந்தஸ்தை எளிதாக அடைந்திருக்கலாம். ஆறுமாதங்களுக்கு முன்னால் ஆட்சியைப் பிடித்த மாநிலத்தில்கூட வெல்ல முடியவில்லையென்றால், அப்புறமென்ன பாரம்பர்ய கட்சி? `ஏதோ ஒருமுறை ராங் ரூட் என்றால் பரவாயில்லை. எல்லா முறையும் ராங் ரூட் என்றால் எப்படி ராகுல்?’ என்று, காங்கிரஸ் தொண்டர்கள் கதறுவதில் அர்த்தம் இருக்கவே இருக்கிறது. இப்போதும் கெட்டுவிடவில்லை. பைலட்டும் சிந்தியாவும் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அதை அளியுங்கள் ராகுல். அப்புறம் பாருங்கள் வேடிக்கையை!

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

இன்றைய நிலையில், இந்தியாவில் அதிக கடமைகள் கொண்ட கட்சித்தலைவர் ராகுல்தான். கட்சியின் மாநில அமைப்புகளை முற்றிலும் சீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் அவர். முற்றிலும் என்றால் முற்றிலும்தான்! காந்தி ஜயந்தி அன்றுகூட, காங்கிரஸ் காரிய கமிட்டி அலுவலகங்கள் காத்துவாங்குவது அவலத்திலும் அவலம். குழு பிரிப்பதிலும் கூட்டணி பேசுவதிலும் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வம் கொண்டிருப்பது அதைவிடவும் அவலம். இதைச் செய்வது பெரிய தப்பில்லைதான். ஆனால், இதை மட்டுமே செய்துகொண்டிருப்பது பெரிய தப்பு. அப்புறம், ஜோதிமணிகள் கலக்கிக்கொண்டிருக்கும் காலத்தில், அரசரையும் அழகிரியையும் மட்டுமே கண்ணில் காட்டுவது இன்னும் பெரிய தப்பு.

அதேபோல, ‘ஆளும் மாநிலம், ஆளா மாநிலம்’ என்று பாகுபாடு பார்த்து அரசியல் செய்ததும் மாபாவம். மக்களைப் பாதிக்கும் பிரச்னை எழுந்த எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி குரல் கொடுத்திருந்தால், ஏன் தோற்றோம் என்று ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இனிமேலேனும், `எல்லா மாநிலமும் என் மாநிலமே’ என்று எண்ணவேண்டும் ராகுல். அப்போதுதான், `நாட்டுக்கான தலைவன் நான்’ என்று காங்கிரஸ் தலைவரால் காலர் தூக்க முடியும். அதாவது, டெல்லியில் உட்கார்ந்துகொண்டு மட்டும் அரசியல் செய்வதால் எந்தப் பயனுமில்லை. எழுந்து பார்க்க வேண்டும், நடந்து வர வேண்டும்.

காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று `போராட்டம் என்றால் என்ன விலை’ என்று கேட்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள். போர்க்குணம் இல்லையென்றால், புலிகூடப் புழுக்களால் அரிக்கப்படும் என்பதை அறிய வேண்டும். சென்ற ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில், இரண்டு போராட்டங்கள் மட்டுமே, இந்திய அளவில் பேசப்பட்டன. ஒன்று, தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம். இரண்டு, மராட்டியத்தில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய `மகா பாத யாத்திரை’ போராட்டம். இரண்டு போராட்டங்களிலும், காங்கிரஸின் பங்கு என்பது வெறும் பார்வையாளர் என்ற அளவிலேயே நின்றுவிட்டது. இது தகுமா?

காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ன... ராஜினாமா செய்ய வேண்டியவரா, ராகுல்?

போகட்டும். `தவறுகள் குற்றமல்ல, சரிவுகள் வீழ்ச்சியல்ல’ என்று அன்றே எழுதினான் ஒரு தமிழ்க் கவிஞன். இதை இப்போது, ராகுலுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. கவர்ச்சியை எளிமையால் மட்டுமே வீழ்த்த முடியும். சர்வாதிகாரத்தை ஜனநாயகத்தால் மட்டுமே சாய்க்க முடியும். ஆக, காந்தியை ஒரு கையிலும், நேருவை மறு கையிலும் ஏந்தி களம் வாருங்கள், காங்கிரஸ் தலைவரே. எதிரே எத்தகைய எத்தன் வந்தாலும் காணாமல் போவான்.  

` `பாரத நாடு பழம்பெரும் நாடு. நீரதன் புதல்வர். இந்நினைவகற்றாதீர்’ என்ற பாரதி பாட்டை நெஞ்சில் ஏந்திய ஒரே ஒருவன் இருக்கும் வரை, காங்கிரஸ் இருக்கும்’ என்று சொன்னார். ஒரு மூத்த பத்திரிகையாளர். ‘இளங்கோவன் என்ன, கார்த்தி சிதம்பரத்தை தலைவராக போட்டால்கூட , கடலூர் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க 10 கதர்ச்சட்டைகள் இருப்பார்கள்’ என்பதும் அவர் சொல்தான். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் சொல்வதற்கு ஒரு சொல் இருக்கிறது...

ஓடுங்கள் ராகுல்... ஒருநாள் வரும்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு