Published:Updated:

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி
''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

ரூர் நாடாளுமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற எம்.பி-யாக இருந்த தம்பிதுரையைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் கரூர் வேட்பாளரான ஜோதிமணி. நேர்மை, எளிமை... இவை இரண்டும்தான் இவருடைய வெற்றிக்குக் காரணமென பலரும் கூறி வருகிறார்கள். 'லேடி' காமராஜர் என மக்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படும் ஜோதி மணியிடம் அவருடைய வெற்றி குறித்த காரணங்களை நம்மிடையே பகிரச் சொல்லிக் கேட்டோம். அவருக்கே உரித்தான எளிமையோடு பேசத் தொடங்கினார்.

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

"நேர்மைக்கும் உண்மைக்கும் உழைப்புக்கும் சமூகத்தில் எப்போதுமே அங்கீகாரம் உண்டு. அதை நான் உறுதியா நம்புறேன். என்னுடைய 23 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் அதைப் பல இடங்களில் நான் உணர்ந்திருக்கேன். நாங்க நேரடியாகத் தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என்கிற வாக்குறுதிகளைச் சொன்னோம். என்ன மாதிரியான எம்.பி-யாக நான் இருப்பேன் என்பதையும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பது பற்றியும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய நேர்மையான அரசியல் வாழ்க்கை எனது மிகப்பெரிய பலம். மக்கள் நம்முள் ஒருவர் வேட்பாளராக நிற்கிறாங்கன்னு ஏத்துக்கிட்டாங்க. தேர்தல் முடிவு வந்தப்போ எனக்கு விழுந்த 6,95,697 வாக்குகளைப் பார்த்து நானே பிரமித்துப் போயிட்டேன். நமக்கு ஒரு பூத்ல 600 ஓட்டுகள் இருந்தா 10 ஆண்டுகள் எம்.பி-யாக இருந்தவருக்கு 100 ஓட்டுகள்தான் இருக்கு. சில பூத்களில் நமக்கு 600 ஓட்டுகள் இருந்தா அவருக்கு வெறும் 5 ஓட்டுகள்தான் இருக்கு. இது வெறும் வாக்கு அல்ல! மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் தான்! அதை பிரசாரத்தின்போதே என்னால பார்க்க முடிந்தது.  

என்னுடைய பலம்னா அது என் அம்மா தான். அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சரி, ஓட்டு எண்ணிக்கையின் போதும் சரி அம்மா என் கூடவே இருக்காங்கன்னு தான் நினைச்சிட்டே இருந்தேன். அவங்க எப்பவும் என் கூட என்னுடைய பலமா இருப்பாங்கங்கன்னு நம்புறேன் என்றார்.

நான் பேசுகிறதைக் கேட்குறதுக்காகவே மணிக்கணக்காக காத்துட்டு இருந்துருக்காங்க. குழந்தைகளை கூட்டிக்கிட்டு வெயில்ல நின்னு நான் பேசுறதைக் கேட்டிருக்காங்க. பேசலைன்னாலும் பரவாயில்ல ஜோதியை முகத்தை மட்டும் காட்டிட்டுப் போகச் சொல்லுங்கன்னு வெளிப்படையாக அவங்க காட்டின அன்பை நிறைய இடங்களில் பார்க்க முடிஞ்சது. களத்தில் தி.மு.க-வின் பங்கு மிக மிக முக்கியமானது. இப்படி ஒரு வேட்பாளர் இருக்காங்க... இவங்க நேர்மையானவங்க... ஜெயித்தால் மக்களுக்கு நல்லது செய்வாங்கங்கிற விஷயத்தை வேகமா களத்துக்குக் கொண்டு போனாங்க. அதே மாதிரி, எங்களுக்கான களம் ரொம்பவே கடினமாக இருந்தது. அதிகார பலம் நிறைந்த கட்சியுடன் போட்டி போடுகிறோம் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அவங்ககிட்ட அதிகார பலமும் பண பலமும் இருந்தது. ஆனா, எங்ககிட்ட மக்கள் பலமும் நேர்மையும் இருந்தது. அதுதான் எங்களுக்கு மகத்தான வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்தது. கரூர் பாராளுமன்ற வரலாற்றில் யாரும் இத்தனை ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது கிடையாது. கரூர் பாராளுமன்றத்தில் முதல் பெண் எம்.பி என்கிற பெருமையையும் மக்கள் என்கிட்ட கொடுத்திருக்காங்க. இது முக்கியமான டீம் வொர்க். எல்லோரும் ஒன்றுகூடி போராடித் தான் இந்த வெற்றியை அடைஞ்சிருக்கோம்.

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

மக்களுக்கு அரசியல்வாதிகள் பற்றி ஒரு பிம்பம் இருக்கு. அரசியல்வாதிகள்னா இப்படித்தான் இருப்பாங்க என்கிற எண்ணம் மக்களுக்கு உண்டு. அந்தப் பிம்பத்தை நாங்க உடைச்சிருக்கோம்னு சந்தோஷமா இருக்கு. எனக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னாடி ஒரு மிகப்பெரிய விவாதம் கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் நடந்தது. இவங்க நல்லவங்கதான், நேர்மையானவங்கதான்... மக்கள் மத்தியில் நேர்மையாக வேலை செய்யக்கூடியவங்கதான். ஆனா, இவங்ககிட்ட பணம் இல்லையே... அதனால, இவங்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்கிற விவாதம் நடந்தது. சாதாரண விவசாயப் பின்புலத்திலிருந்து வந்திருக்கிற நேர்மையான இவங்களுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்கணும். பொருளாதார பலம் இல்லைங்கிறதைக் காரணம் காட்டி அவங்க போட்டியிட வாய்ப்பு மறுக்கக் கூடாது. அது அநீதி. அதை அரசியல்கட்சிகள் செய்யவே கூடாது. குறிப்பா, அதைக் காங்கிரஸ் கட்சி செய்யவே கூடாதுன்னு ரொம்ப உறுதியா இருந்தது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவருடைய உறுதிதான் இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பாக அமைஞ்சது. அரசியலுக்குறிய பொறுப்புணர்ச்சிகளுடன் நேர்மையா இருக்கிறவங்களைக் காங்கிரஸ் தலைவர் கைவிடமாட்டார் என்பது 10 வருடங்களாக அவர்கூட பயணிக்கும் எனக்குத் தெரியும். அவருடைய முடிவு சரின்னு மக்கள் இப்போ நிரூபிச்சிட்டாங்க. 

எனக்குப் பொருளாதார பலம் இல்லைங்கிறதை நான் ஒரு குறையாக நினைக்கலை. அதை நான் என்னுடைய பலமாகத்தான் நினைக்கிறேன். பாராளுமன்றத் தேர்தலுக்கும் சரி, இடைத்தேர்தலுக்கும் சரி நானும், செந்தில் பாலாஜியும் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தோம். குழுக்களாகச் சேர்ந்து நேரடியாக மக்களை சந்திச்சு அவங்களுடைய பிரச்னைகளைக் கேட்டோம். என்னவெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதை மத்தியில் ஆட்சி அமையாத போதிலும் போராடியாவது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். 

''கவுன்ட்டிங் லீட் வர வர... திகைச்சு திக்குமுக்காடிட்டேன்..!?’’ - நெகிழ்ந்து கலங்கும் ஜோதிமணி

நான் போட்டியிட்டபோதும் சரி, வெற்றி பெற்று தற்போது எம்பியான பின்னரும் சரி... தனிப்பட்ட முறையில் நான் போட்டியிட்டதாகவோ தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்றதாகவோ நினைக்கலை. உங்களுள் ஒருவராகத்தான் இந்த வெற்றியைப் பார்க்கிறேன். ஒரு பெண், எளிய பின்புலம் கொண்டவங்க, பொருளாதார பலம் இல்லாதவங்கன்னு வாழ்க்கையில் ஒரு தலைவராக என்னென்ன தடைகள் எல்லாம் இருக்குமோ அந்தத் தடைகளை எல்லாம் எதிர்கொள்ளக்கூடிய சூழலில் நான் இருந்திருக்கேன். இவற்றையெல்லாம் தாண்டி ஜெயிக்க முடியும் என்பது மத்தவங்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும். என்னை மாதிரி நிறைய பேர் வருவாங்கன்னு நம்புறேன். அந்த விதத்தில் என் வெற்றியைத் தனிப்பட்ட முறையில் இல்லாமல், சமூகம் சார்ந்து அரசியல் சார்ந்து மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். 

காலையில் தலைமையில் இருந்து அழைத்துப் பேசினாங்க. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினோம். அடுத்த ஐந்தாண்டுக் காலம் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ஒரு கடினமான காலமாக இருக்கும்னு நாங்க நினைக்கிறோம். அந்தச் சமயத்தில் ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக களத்தில் மக்களுக்காக நிற்கணும் என்கிற உறுதியில் இருக்கோம். மக்களிடம் பேசி, மக்களுடைய குறைகளை எடுத்துக் கூறி சுமுகமாக அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க மக்களுடன் போராடுவேன். நான் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலராக 22 வயசுல செலக்டாகி பத்து வருஷம் அடிப்படையான அரசியல் சமூக அமைப்பில் வேலை செய்து அதிலிருந்து மேலே வந்திருக்கேன். அதனால ஒரு அதிகார வர்க்கத்தை அதனுடைய அமைப்பை எப்படி அணுகணும்னு எனக்குத் தெளிவாகத் தெரியும். அந்த மாதிரி சூழலில் வேலை நடக்கலைன்னா மக்களைத் திரட்டி போராடத் தயங்க மாட்டேன். மக்கள் என்னை அவங்க வீட்டுப் பொண்ணா நினைச்சு ஓட்டுப் போட்டிருக்காங்க. எந்த காரணத்துக்காகவும், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அந்த நம்பிக்கையையும் அன்பையும் நிச்சயமா கைவிட மாட்டேன். தொகுதிகளில் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியிருக்கு. ஏராளமான பெண்கள் தொழில்துறைகளில் வேலை செய்றாங்க. அவங்க மேல தனிக் கவனம் செலுத்த வேண்டியிருக்கு. மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட தொகுதி கரூர் தொகுதி. அதனால அங்கே இருக்கக்கூடிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காக சில விஷயங்கள் செய்யணும். நிறைய பொறுப்புடன் இந்த வெற்றி என்கிட்ட வந்திருக்கு. இது எளிதானது இல்லை. ஆனா, நிச்சயம் முடியாததும் இல்லை. நான் முழுநேரம் பொது வாழ்க்கையில் உள்ள ஒரு ஆளு. பல்வேறு தளங்களில் வேலை செஞ்சுருக்கேன். அரசியல் தளத்தைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்னு பல்வேறு களம் இருக்கு. தேர்தலுக்கு முன்னாடி என்னுடைய வாழ்க்கையில் எப்படி இருந்தேனோ இனியும் அப்படித்தான் இருப்பேன் என்பதில் ரொம்பவே தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன்" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு