Published:Updated:

கேப்டன் ஆட்டம் ஆரம்பம்!

கையை நீட்டி... நாக்கை துருத்தி..!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ட்டசபையில் ... 'சிம்மா... சிம்மா... நரசிம்மாவாக’ கர்ஜித்த விஜயகாந்த்தான் இந்த வாரத்தில் ஹாட் டாபிக்காக மாறிப்போனார்.

சட்டமன்றத்தில் முதன்முறையாக அ.தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் மல்லுக்கட்டி இருக்கின்றன. விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் கூண்டோடு அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். '10 நாட்கள் சபைக்கு வரக்கூடாது’ என்று விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில் நடந்த அமளியைப் பற்றி இரண்டு தரப்பினரின் கருத்துகள்.

சஸ்பெண்ட் உத்தரவு வந்த நிலையில் இன்னும் கொதிப்​புடன் மீடியாவை எதிர் கொண்டார் விஜயகாந்த்!

கேப்டன் ஆட்டம் ஆரம்பம்!

''எம்.எல்.ஏ-க்களைதேர்ந்து எடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதே, மக்கள் பிரச்னை​களை பேசுவதற்குத்தான். ஆனா பேச​ விடுவதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி அவங்க பேசுறாங்க. நாங்க பேசுவதற்கான உரிமையைப் பறிக்கிறார்கள். 'தனியாக நிற்கத் திராணி இருக்கிறதா... தைரியம் இருக்கிறதா?’ என்றெல்லாம் கேட்கிறார்கள். 'திருநெல்வேலிக்கே அல்வாவா? திருப்பதிக்கே லட்டா? மதுரைக்கே மல்லிப்பூவா?’ என்று ஊர் பக்கம் சொல்லுவார்கள். இப்போது அதையே நான் திருப்பிச் சொல்கிறேன். தே.மு.தி.க-வுக்கே சவாலா? நாங்கள் ஆதரவு கொடுத்ததால்தான் அ.தி.மு.க-வே இன்று அரியணையில் அமர்ந்திருக்கிறது? கடந்த தி.மு.க. ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. எல்லாத் தேர்தலிலும் துணிச்சலோடு தன்னந்தனியாக களம் இறங்கியது எங்கள் கட்சி. ஆனால், ஐந்து இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கி நின்ற துணிச்சலை என்னவென்று சொல்வது? இடைத் தேர்தலைக்கூட சந்திக்காமல் பயந்து ஓடி ஒளிந்து கொண்ட அ.தி.மு.க., கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்திருக்கிறதா? ஊர்கூடித் தேர் இழுத்துவிட்டு இப்போது நாங்கள்தான் இழுத்தோம் என்கிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும்.

'எங்களோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்​படுகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. உங்களோடு ஏன் சேர்ந்தோம் என்று எங்களுக்கு அருவெறுப்​பாக இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சி நடக்கிறது.!

சட்டசபையில் நான் கை நீட்டிப் பேசுவதை மட்டுமே டி.வி.யில் காட்டுகிறார்கள்... அந்தப் பக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் என்ன செய்தார்கள் என்பதையும் காட்டியிருந்தால் உங்கள் நடுநிலை மீது நம்பிக்கை வந்திருக்கும். பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா, லோக் சபா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்காக தனியாக டி.டி. சேனல் இருக்கிறது. பாராளுமன்றத்தில் எது நடந்தாலும் அதை அப்படியே லைவ்வாகக் காட்டுகிறார்கள். அதுபோல் 'பொதிகை’ சேனலில் காட்ட வேண்டியதுதானே? அவர்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டுமே எடிட் செய்து ஒளி​பரப்பி ஆனந்தப்படுகிறார்கள்.

எங்களுக்கு இறங்கு முகம் தொடங்கி விட்டதாம். இதை, ஓட்டுப் போட்ட மக்கள்தான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று நினைத்தோம். அவர் திருந்தவில்லை. அதே ஆணவப் போக்கோடுதான் நடக்கிறார். போன ஆட்சியில் ஜெயலலிதா அவைக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிவிட்டு, 'என்னைப் பேச விடவில்லை’ என்று சொன்னதை எல்லாம் மறக்க முடியுமா? எனக்கு எந்தப் பயமும் இல்லை. மிரட்டிப் பணிய வைத்து வேலை வாங்க நினைத்​தால் எதுவும் எங்​களிடம் நடக்காது. தகுதி இல்லா​தவர் தலைவர் ஆகியிருக்கிறார் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். உங்க கட்சி எம்.பி. சேடப்பட்டி முத்தையா பாராளுமன்றத்தில் ஓட்டுப் போடக்கூட தெரி​யாமல் இருந்தாரே. ஓட்​டுப் போடக்கூட தகுதி இல்லாத கட்சியோடு கூட்​டணி வைத்தற்காக நான் வெட்கப் படுகிறேன்.

கேப்டன் ஆட்டம் ஆரம்பம்!

'தே.மு.தி.க.வோடு கூட்டணி வைக்க எனக்கு விருப்பமில்லை. கட்சிக்காரர்கள்தான் விரும்பி​னார்கள். அதனால்தான் கூட்டணி சேர்ந்தோம்’ என்று சொல்லியிருக்கிறார். எங்​களோடு கூட்டணி சேர எப்படி​யெல்லாம் கெஞ்சி​னார்கள் என்று எடுத்துவிட முடியும். இப்போது எம்.எல்.ஏ-க்களாவும் மந்திரி​களாக​வும் இருக்கிறவர்களில் யார் யாரெல்லாம் தூது வந்தார்கள் என்று சொல்லட்டுமா?

இது சவால்... ஏற்கத் தயாரா?''

_ சொல்லி முடிக்கும்  போது கண் சிவக்கிறது!  

சட்டமன்றம் என்பது மற்போர் களம் அல்ல...

கேப்டன் ஆட்டம் ஆரம்பம்!

பழ. கருப்பையா (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.): ''சட்டசபையில் விஜய காந்த் நடந்துகொண்ட விதம் பலரை​யும் முகம் சுளிக்கவைத்தது. தன்னை நோக்கிக் கூச்சல் இடுகிறார்கள் என்றவுடன், கையை நீட்டியும், உதட்டைக் கடித்துக்கொண்டும், நாக்கை துருத்திக் கொண்டும் பேசுவது யாராலும் ஜீரணிக்கக்கூடியது இல்லை. கூச்சல் என்பது எல்லாத் தரப்பிலும் வாடிக்கைதான். விஜயகாந்தின் ஆட்கள் எழுந்து நின்று அவையை ரணகளப்படுத்தவில்லையா?

ஒரு நடிகரிடம், ஒரு இயக்குநர் சென்று, 'உங்களை எதிர்த்து சத்தம் போடுகிறபோது நீங்கள் என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள்’ என்று சொன்னால், ஒரு நடிகர் அந்த சூழலைக் கற்பித்துக்கொண்டு என்ன செய்வாரோ... அதைத்தான் விஜயகாந்த் அவையில் செய்தார். அவர் இன்னும் நடிகர் என்ற மனநிலையில் இருந்து மாறவில்லை. குறிப்பாக ஹீரோ என்ற மனநிலையில் இருந்து விடுபடவில்லை.

பொறுப்புமிக்க அவையில், சட்டம் செய்யும் அவையில், தான் ஒரு எதிர்க் கட்சித் தலைவர் என்ற நினைவே அவருக்கு இல்லை. ஏற்கெனவே தேர்தல் காலத்தில், தன் கட்சி வேட்பாளரையே அடித்து விட்டார். அவருடைய கட்சி வேட்பாளர் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றாலும், மக்கள் அந்தச் செயலை அநாகரிகமாகவே கருதினார்கள். சட்டமன்றம் என்பது மற்போர் களம் அல்ல... சொற்போர் களம். கருத்தில் வலிமை இருக்குமானால், ஒருவர் கையை நீட்டாமலேயே அந்தக் கருத்து, அவையில் சம்மணம் போட்டு அமர்ந்துவிடும். அவரால் அம்மாவின் கருத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதைத்தான், அவருடைய பதைபதைப்பான நடத்தை காட்டியது. அவர் முற்றாக மனச் சமநிலையை இழந்து விட்டார்.

அன்று என்ன நடந்தது என்றால், தே.மு.தி.க. உறுப்பினர், அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதற்கு மந்திரிகள் உடனுக்குடன் பதில் அளித்தார்கள். முடிந்தால் அவர் மறுபடியும் கேள்வி கேட்கலாமே தவிர, மிரட்டக் கூடாது.

கருணாநிதி அரசு மீது மக்களுக்குப் பெரும் சினம் மூண்டிருந்தது. கருணாநிதியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என்று துடிதுடித்துக் கிடந்தார்கள் மக்கள். அதற்கு மாற்றாக அம்மாவையே பார்த்​தார்கள். சென்ற தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி சேராத ராமதாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அம்மா​வுடன் சேர்ந்த விஜயகாந்த் சட்ட​மன்றத்துக்குள் நுழைந்​தார்.

ஆனால், நாங்கள் முட்டுக்கொடுத்துதான் இந்த மரம் நின்றது என்று விஜயகாந்த் கருதினார். இந்தப் பிழையான எண்ணத்தை அகற்ற அம்மா, உள்ளாட்சித் தேர்தலில் அவரை மட்டும் அல்ல... எவரையும் அழைக்காமல் விட்டுவிட்டார். தனித்து நின்றதால் ஒன்றுமே இல்லை என்கிற உண்மை வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபம் விஜயகாந்துக்கு எழுந்திருக்கிறது.

'கடவுளுடனும் மக்களுடனும்தான் கூட்டு’ என்று சொன்ன விஜயகாந்த், 2006 தேர்தலில் 234 தொகுதிகளிலும் விதைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அறுவடை செய்தார். அதன் பின் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் நின்றார். ஆனால் எந்த ஒன்றிலும் வென்றார் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய மானம், மரியாதை எல்லாம் போய்விட்டது. இந்தப் பின்னணியில் அவர், இன்னொரு ராமதாஸ் ஆகிவிடாமல் எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்க முடிவதே அம்மாவோடு சேர்ந்ததால்தான். அதை அவருக்குப் புரியவைப்பதற்காகத்தான், அம்மா அவரை உள்ளாட்சித் தேர்தலில் கைவிட்டார். குளத்தைவிட்டுக் கரையில் எடுத்துப் போடப்பட்ட மீன் போல அவர் துடிதுடிக்கிறார். 'சங்கரன் கோவில் வருகிறது. நின்று பாருங்களேன்’ என்று அம்மா நேரடியாக விட்ட அறைகூவல், விஜயகாந்த்தை ஆட்டம் காணச் செய்துவிட்டது.

விஜயகாந்த் சட்டமன்றத்துக்கு வெளியே போய், 'ஆளுநர் ஆட்சி இருந்தால் நான் நின்று காட்டுவேன்’ என்று சொன்னாராம். ஒவ்வொரு இடைத் தேர்தலின்போதும் ஓர் அரசு இரண்டு மாதம் பதவி விலகி, மீண்டும் ஆட்சி நடத்துவது விளையாட்டுக் காரியம் இல்லை. விஜயகாந்த் சொன்னார் என்பதற்காக, நம் அரசியல் சாசனத்தை கேலிக்கு உள்ளாக்க முடியாது. இது, 'மலையைத் தூக்கி தலையில் வை. நான் சுமக்கிறேன்’ என்பது போன்ற சவால்தான்!''

- எம்.பரக்கத் அலி

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு