Published:Updated:

2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?

2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?
2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயார் என்ற ரஜினி, பின் வாங்குகிறாரா?

க்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், பிரதமராகப் பதவியேற்க இருக்கும் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். `மோடி என்ற தனிநபரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி இது' என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமா அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, `ராகுல் தன்னை நிரூபிக்க வேண்டும்' என்று பதிலளித்தார். 

அதேநேரம், ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிற கேள்விக்கு மட்டும் தெளிவான பதிலை அவர் தரவில்லை. பி.ஜே.பியின் வெற்றி, கமலின் வாக்கு விவரங்கள் குறித்த கேள்விக்கெல்லாம் உற்சாகமாகப் பதிலளித்துக்கொண்டு வந்தவரின் முகம், `இன்னும் ஒரு வருஷம்தான் இருக்குசார், 2021-க்குத் தயாராகி விட்டீர்களா?' என்ற கேள்வியைக் கேட்டதும், சட்டென மாறத் தொடங்கியது. அந்தக் கேள்விக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?

பி.ஜே.பியின் வெற்றி என்பது ரஜினி எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்திருக்கும். தேர்தலுக்கு முன்புகூட பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நதிநீர் இணைப்பு குறித்த வாக்குறுதியை ரஜினி வரவேற்றிருந்தது நினைவிருக்கலாம். இப்படி இருக்க, தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விகளை இப்போது அவர் தவிர்ப்பதைப் பார்க்கும்போது, வடிவேலு பாணியில் `மறுபடியும் முதல்ல இருந்தா' என்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

`தமிழக சட்டப்பேரவையைப் பொறுத்தவரை தற்போதைக்கு அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்தில்லாததுபோல் தெரிந்தாலும் ஆட்சி மீது அதிருப்தி கொண்ட டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், இன்னமும் கட்சிக்குள் இருக்கிறார்கள். தவிர, சபாநாயகருக்கு எதிராக தி.மு.க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற சூழலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். இப்படியான சூழலில் இவர் பாட்டுக்கு சினிமா ஷூட்டிங்கில் மட்டும் பிஸியாக இருக்கிறார்' என அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் ரசிகர்கள்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?

`அரசியலுக்கு வர மீண்டும் தயங்குகிறாரா ரஜினி?' என்ற கேள்வியை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.
அவர்கள், ``தமிழக சட்டப்பேரவையைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இந்த ஆட்சி தப்பித்துவிட்டது. அந்தச் சூட்டோடு, பலமுறை தள்ளிப் போடப்பட்ட உள்ளாட்சித் தேர்தலையும் அடுத்த சில மாதங்களில் நடத்தப் போறதா அரசுத் தரப்பில் சொல்றாங்க. ஆனா, உள்ளாட்சித் தேர்தல் எங்க இலக்கு இல்லைன்னு தலைவர் முன்னாடியே சொல்லிட்டார். ஆனா, 2021 தேர்தல்ல எங்க கட்சி போட்டியிடறது உறுதி" என்கிறார்கள்.

ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கராத்தே தியாகராஜனிடம் பேசினோம். ``பொதுவா எல்லாக் கட்சிகளிலுமே தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகே பூத் கமிட்டிகள் அமைக்கப்படும். ஆனா, ரஜினி மக்கள் மன்றத்துல மட்டும் அந்த பூத் கமிட்டிகளுக்கே ஆட்கள் தயாராகிட்டதா தெரியுது. மன்ற நிர்வாகிகள் சைலன்டா வேலை பார்த்திட்டு இருக்காங்க என்பது உண்மை. ரஜினி தலைமையிலான கட்சி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்கிறார் அவர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல்... மீண்டும் தயங்குகிறாரா ரஜினி!?

ரஜினிக்கு நெருக்கமான வேறு சில முக்கியப் பிரமுகர்களோ, ``முதல்முறை சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கப் போறார். அதனால பல்வேறு தரப்புல இருந்தும் கூட்டணிக்கு அழைப்புகள் வருகின்றன. எல்லாக் கட்சிகள்லயும் அவருக்கு நண்பர்கள் இருக்காங்க. அதனால சாந்தமான அரசியலையே முன்னெடுக்கணும்னு ஆசைப்படறார். தேர்தல் வியூகம், கொள்கை முதலியவை குறித்து முன்கூட்டியே பேசினா, அதனால நிறைய சங்கடங்கள் வரலாம்னு அவர் நினைக்கிறார். அதனாலேயே பேசத் தயங்குகிறார்"  என்கின்றனர்.

எப்படியோ, ரஜினி வரவேண்டிய நேரத்தில கரெக்டா வந்தா சரிதான்...

Vikatan
அடுத்த கட்டுரைக்கு