Published:Updated:

"தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்!" - கவிஞர் சினேகன்

"தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்!" - கவிஞர் சினேகன்
"தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்!" - கவிஞர் சினேகன்

"வெற்றிக்காக இருதரப்பும் என்னென்னவோ செய்தார்கள். அதிலொருவர், வெற்றியும் பெற்றார். இவர்களை எதிர்த்துதான் போட்டியிட்டேன். எனக்கு வந்த வாக்குகள் குறைவானதாக இருக்கலாம். ஆனால் அவை, உண்மையானவை."

மிழகத்தில் வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக் கிடைத்த வாக்குச் சதவிகிதம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் பலரும் முதன்முறை வேட்பாளர்கள் எனினும், கவனிக்கத்தக்க வாக்குகளைப் பெற்றார்கள். இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்ட கவிஞர் சினேகனிடம், தேர்தல் அனுபவம் குறித்துப் பேசினோம்.

"முதல் தேர்தல் அனுபவமும் அதன் முடிவும்?"

"தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்!" - கவிஞர் சினேகன்

"அதீத உற்சாகத்தில் இருக்கிறேன். மக்கள் பணிக்கான மிகப்பெரிய கதவு இப்போது திறந்திருக்கிறது. முதல் தேர்தலிலேயே எனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத இடத்தில் வேட்பாளராகத் தேர்தலைச் சந்தித்த அனுபவம், தமிழகத்தில் இனி எங்கு வேண்டுமென்றாலும் நான் நிற்கலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது."

"நீங்கள் வாங்கிய 2 சதவிகித ஓட்டு, எப்படி உங்களுக்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்கிறது?"

"நான் எதிர்த்துப் போட்டியிட்டது மறைந்த தலைவர்களான காமராஜர், கக்கன் போன்ற உத்தமர்களை அல்ல... ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகளைச் சுமந்துகொண்டிருக்கும் குற்றவாளிகளை! அதிலொருவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்கிற கட்டாயம் இருந்தது. வெற்றிபெற்றால் மட்டுமே வழக்குகளிலிருந்து மீள முடியுமென்கிற நெருக்கடி இருந்தது. இன்னொருவருக்கு மாநில, மத்திய ஆளுங்கட்சிகளின் செல்வாக்கு இருந்தது. வெற்றிக்காக இருதரப்பும் என்னென்னவோ செய்தார்கள். அதிலொருவர், வெற்றியும் பெற்றார். இவர்களை எதிர்த்துதான் போட்டியிட்டேன். எனக்கு வந்த வாக்குகள் குறைவானதாக இருக்கலாம். ஆனால் அவை, உண்மையானவை."

"தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வாக்குகளுக்கு, உண்மையாகவே கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்தி அடைந்திருக்கிறாரா?" 

"தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்!" - கவிஞர் சினேகன்

"ஆம், தலைவர் உட்படத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என எல்லோரும் மிகுந்த உற்சாகத்திலிருக்கிறோம். பெரிய கட்சிகளெல்லாம் இரண்டு மாதங்களாகப் பிரசாரம் செய்தார்கள். ஆனால், எங்களுக்குத் தேர்தலுக்கான சின்னமே 15 நாள்களுக்கு முன்னர்தான் கொடுக்கப்பட்டது. 15 தினங்களில் நாங்கள் செய்த பிரசாரமே இந்த அளவுக்கு வாக்குகளை அறுவடை செய்து கொடுத்திருக்கிறது என்றால், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டோம். இந்தத் தேர்தலில் எங்களின் பலம், பலவீனம் என்னவென்பதையும் தெரிந்துகொண்டோம். அதைச் சரி செய்தபடியே முன்னேறுவோம்."

"உங்கள் கட்சியின் பலம், பலவீனம் என நீங்கள் கண்டறிந்தது என்னென்ன?"

"பலம்: நகரம். பலவீனம்: கிராமம். தமிழக நகரங்களில் நாங்கள் மக்களிடம் சென்று சேர்த்த அளவுக்குக் கிராமப்புறங்களில் சேரவில்லை. தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன. ஆகவே, இனி மக்கள் நீதி மய்யம் கிராமங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது. நானும், இனி அதிக கிராமங்களில் பயணிக்க இருக்கிறேன். சொல்லப்போனால், இனிதான் என்னுடைய தீவிர அரசியலே ஆரம்பமாகிறது. ஏன் தெரியுமா? கவிதையால் புரட்சி செய்ய இது ஒன்றும் பாரதி வாழ்ந்த காலகட்டம் அல்ல. களத்தில் நின்று செயலாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்துவிட்டேன். என் குருநாதர் கண்ணதாசன் அரசியலில் தவறவிட்ட இடத்தை நான் பிடிப்பேன்."

``தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டோம் என அ.தி.மு.க மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிவிட்டோமென தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. தமிழகத்தில் இல்லையெனினும், மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஊக்கத்தில் தமிழக பி.ஜே.பி இருக்கிறது. ஆனால், தமிழக மக்களின் மனநிலை இவர்களைப்போல மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய வாக்கால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலவில்லையே எனச் சோர்ந்துபோயிருக்கிறார்கள். இதுதான் தேர்தலுக்குப் பின்னான தமிழகத்தின் தற்போதைய நிலை. இந்தியாவைப் பொறுத்தவரை, மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தன்னுடைய கடந்தகால தவறுகளைத் திருத்தி நல்லாட்சி தருவாரா எனக் காத்திருக்கிறார்கள்."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு