Published:Updated:

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

ராவணாயணத் தில்தான் ஆரம்பித்தார் கழுகார்!

##~##

 ''போலீஸ் வேட்டையில் சிக்கி இப்போது சிறையில் இருக்கும் ராவணன் மீது, அடுக்கடுக்காய் அடுத்த கட்ட வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதனால், எந்த நேரத்திலும் அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம். முதன் முறையாய் சிறைக்குள் கால் வைத்திருக்கும் ராவணனால், உள்ளே உள்ள நிலைமைகளைக் கொஞ்சமும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 'எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.''

''அவர் என்றால் யாராம்?''

''சசிகலாவின் தம்பி திவாகரனைத்தான் ராவணன் சொல்கிறார். ராவணன் போலீஸ் பிடியில் சிக்கிய உடனேயே மீடியாக்களுக்குத் தகவல் சொல்லாமல், ஆஃப் தி ரெக்கார்ட் விசாரணை அவரிடம் நடத்தப்பட்டது. ராவணனிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட, அதைக் கையில் வைத்தபடி குடைந்திருக்கிறது போலீஸ். பல கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்காத ராவணன், 'கொடநாட்டில் 600 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறேன். அது மட்டும்தான் அம்மாவுக்குத் தெரியாமல் நான் சம்பாதித்தது’ எனக் கேட்காத கேள்விக்கு, மலைக்க வைக்கும் பதிலைச் சொல்லி இருக்கிறார். அந்தச் சொத்து எங்கே இருக்கிறது, யார் மூலமாக வாங்கியது, அதற்கான பணம் எப்படி வந்தது என்கிற தகவல்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார்!''

''பிடிபட்ட ராவணனை கார்டனுக்கே அழைத்து வந்து கவனிப்பு நடத்தப்பட்டதாகச் சொல்கி றார்களே?''

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

''அது தெரியவில்லை. ஆனால், இரண்டு நாட்கள் யாருக்கும் தெரியாமல் ராவணனை ரகசிய இடத்தில் வைத்துத் துளைத்தெடுத்த போலீஸ், சில அதிரடி மண்டகப்படிகளைச் செய்ததாகவும் சொல்கிறார்கள். 'போலீஸுக்குப் போக்குக் காட்டிவரும் திவாகரன் எங்கே இருப்பார்?’ என்கிற விசாரணையும் ராவணனிடம் நடத்தப்பட்டது!''

''அவர்கள் இருவருக்கும்தானே பிரச்னையே..?''

''அதைத்தான் ராவணனும் சொன்னார். 'அவரால்தான் இவ்வளவு பிரச்னைகளும்... அவருக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. நான் அம்மாகிட்ட செல்வாக்காக வளர்ந்ததை அவரால் பொறுத்துக்க முடியலை. ஒரு கட்டத்தில் என்னை மன்னார்குடிக்குத் தூக்கிட்டு வரச்சொல்லி, ஒரு தனி டீம் செட் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம்தான் நான் உஷார் ஆனேன். அவருக்கு எதிரான காரியங்களையும் பண்ண ஆரம்பிச்சேன். திருச்சி தொடங்கி புதுக்கோட்டை வரைக்கும் மணல்குவாரி கான்ட்ராக்ட் எடுத்திருந்த அவரோட ஆதரவாளர் மணமேல்குடி கார்த்திகேயனிடம் இருந்து பறித்து அதைக் கைமாற்றிவிட்டேன்!’ என திவாகரன் உடனான தனது மோதல்களையும் ராவணன் பட்டியல் போட்டாராம். திவாகரனின் இருப்பிடம் பற்றிக் கேட்டபோது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், மத்திய  அளவில் பெரிய பொறுப்பில் இருப்பவரின் தம்பி, வேதாரண்யம் வி.ஐ.பி. ... ஆகிய மூவர் பெயரைச் சொல்லி, 'அவர்களை வாட்ச் பண்ணுங்கள்.’ என அண்டை மாநிலங்களில் உள்ள திவாகரனின் நண்பர்கள் குறித்த தகவல்களையும் சொல்லி இருக்கிறார்!''

''எப்போது இந்தக் கோஷ்டிக்குள் மோதல் துவங் கியது?''

''அரசியலில் பிஸியாக ஆனதும், எந்த ஒரு புதுப்பொருளை வாங்கினாலும் தனது பெயரில் வாங்க மாட்டாராம் ராவணன். வேறு ஒருவர் பெயருக்கு வாங்கித்தான் இவர் பயன்படுத்துவாராம். இப்படித்தான், சமீபத்தில் பரமத்தி வேலூரில் உள்ள ஆயில் நிறுவனத்தின் பங்குதாரரை அழைத்து, 'கடன் வாங்கணும். கையெழுத்துப் போடுங்க' என்றாராம். இது ஒரு கண்துடைப்புக்குத்தான் என்பதை உணர்ந்த அவர் தயங்கினாராம். இந்த வகையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். எவ்வளவு உஷார் பேர்வழி ராவணன் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.''

''அப்படியா?''

''இளவரசியின் மகன் புனேவில் படிக்கிறாராம். அவருக்காக வெளிநாட்டுக் கார் ஒன்றைப் பரிசாக வழங்கினாராம் திவாகரன். இது நடந்த ஒரே மாதத்துக்குள் தனக்கென அதே மாடல் காரை வரவழைத்தாராம் ராவணன். யார் பெயருக்கு வாங்கினார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், காரில் பயணித்தாராம். இந்தத் தகவல் திவாகரனுக்கு எட்ட... 'என்னுடைய ஸ்டேட்டஸுக்கு இணையாக ராவணன் வளர்ந்து விட்டாரா?' என்று கோபப்பட்ட திவாகரன், உடனே இதுபற்றி ராவண னிடம் கேட்க.. ராவணனும் விட்டுக் கொடுக்காமல் வாதம் பண்ண... இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதைக் கேள்விப்பட்ட சசிகலா தலையில் அடித்துக்கொண்டாராம். இருவருமே ஒரு கட்டத்தில் சசிகலா முன்னிலையில் வாய்த் தகராறில் ஈடுபட, கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாராம்.''

''ம்!''

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

''எனக்குக் கிடைத்த தகவல்படி... திவாகரனை புதன்கிழமை இரவு 7 மணிக்கு  போலீஸார் அமுக்கி விட்டார்கள். அதன் பிறகுதான் அவரது மனைவி நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். 'திவாகரனிடம் முழுமையான விசாரணை நடந்து முடிந்த பிறகு, அரெஸ்ட் காட்டினால் போதும்’ என்று மேலிடம் சொல்லிவிட்டதாம். அதனால், ரகசியமாக வைத்துள்ளார்கள். மற்ற இடங்களுக்குத் தேடப்போன போலீஸுக்குக்கூட இதைச் சொல்லாமல் வைத்துள்ளார்களாம்!''

''பிடிபட்ட இடம்?''

''மகாராஷ்டிரா என்று ஒரு குரூப் சொல்கிறது. மர்மத்தை போலீஸாரே அவிழ்க்கிறார்களா என்று பார்ப்போம்!'' என்ற கழுகார் அடுத்து சட்டசபை மேட்டருக்குத் தாவினார்!

''முதன்முறையாக அ.தி.மு.க.வோடு மோதியிருக்கிறது தே.மு.தி.க. சட்டசபைக்கு வர மாட்டார், பெரிதாக எதுவும் பேச மாட்டார் என்ற இமேஜ் ஏற்படுத்தி இருந்த விஜயகாந்த், அன்று எதிர்க் கட்சித் தலைவராக சட்டசபையில் காட்டிய பெர்ஃபாமென்ஸ் சூப்பர் என்றே வர்ணிக்கிறது மீடியா வட்டாரம்!''

''அதற்காக இப்படியா?''

''விஜயகாந்த் வெளியேற்றப்பட்ட அன்று அவருக்கு ஆதரவாக கருணாநிதி பேசியதும், அடுத்த நாள் தே.மு.தி.க.வுக்கு ஆதரவாக தி.மு.க. வெளிநடப்பு செய்ததும், அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறது. சஸ்பெண்ட் அறிவிப்பு வருவதற்கு முன்பே, 'பிரச்னை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்களும் குரல் கொடுக்க எழுந்து நிற்போம்’ என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ.களிடம் சொன்னார் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். ஸ்டாலின் உத்தரவின் பேரில்தான் அவர் இப்படிச் சொன்னாராம். மனதளவில் தி.மு.க. அவரோடு கைகோக்கத் தயாராகி விட்டதாகத் தெரிகிறது!''

''ஜெயலலிதா சும்மா இருக்க மாட்டாரே?''

'' இப்போது, தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு 23 பேர் உள்ளனர். எப்படி யாவது ஏழெட்டு எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வுக்கு வளைத்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பு முடிவெடுத்து இருக்கிறதாம். அவர்களிடம் விலை பேசும் வியாபாரம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது என்கிறார்கள். போகப் போகத் தெரியும்.

அப்புறம்... கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டது. எனவே விரைவில் அங்கு நடக்கும் போராட்டத்தை சட்டரீதியாக அடக்குவதற்கான வேலைகள் தொடங்கும். அதற்கு முன்னோட்டமாகச் சில சம்பவங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன!'' என்றபடி எகிறிப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன்,

தி.விஜய்

முன் வரிசையில் கனி... கடைசியில் அழகிரி...

தி.மு.க. பொதுக்குழுவுக்கு முன்னதாக உயர்நிலை செயல்திட்டக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை அறிவாலயத்தில் நடந்தது. முன்வரிசையில் தயாநிதி மாறன் அருகில் உட்கார்ந்து இருந்தார் கனிமொழி. கடைசி வரிசை எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்து அங்கேபோய் உட்கார்ந்து கொண்டார் அழகிரி. அவருக்குப் பக்கத்தில் பொன்முடி.

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!

தி.மு.க.வின் சட்டவிதிகளில் நிறைய மாறுதலைச் செய்யப்போகிறார் கள். அதை எல்லாம் வரிசையாக டி.கே.எஸ். இளங்கோவன் வாசிக்க அனைவரும் உட்கார்ந்து கேட்டார்களாம். 'மூன்று முறைக்கு மேல் ஒருவர் மாவட்டச் செயலாளராக இருக்க முடியாது’ என்ற ரீதியில் ஒரு திருத்தம் வந்த போது வீரபாண்டி ஆறுமுகம் துள்ளி எழுந்து இதை மறுத்துள்ளார். 'அப்படி எல்லாம் செய்தால் கட்சி நடத்த முடியாது. இப்போது என்ன அவசரம் வந்தது... இப்படி எல்லாம் தீர்மானம் கொண்டு வருவதற்கு?’ என்று சொல்லி இருக்கிறார். ஆறுமுகம் சொன்னதை அனைவரும் வழிமொழிந்தார்கள். அவருக்கு இன்னும் இரண்டு மா.செ.க்கள் ஆதரவும் இருந்துள்ளது. நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு மட்டும் இதைச் செய்வார்கள் போல.

'இளைஞர் அணியைப் பலப்படுத்துவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று கோ.சி.மணி போன்றவர்கள் எடுத்துக் கொடுக்க... வேறு பூகம்பம் இல்லாமல் கலைந்தது கூட்டம்.

''பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டியதை செயற்குழுவில் வைத்துப் பேசுவதுதான் முறை. அது இல்லாமல் இப்படி ஒரு கூட்டம் நடத்தியதே தவறு. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை உட்கார வைத்ததும் தவறு. எந்த விதியும் இல்லாமல் எல்லாம் செய்கிறார்கள்’ என்று சொல்லிச் சென்றார் ஒரு உறுப்பினர்.

மிஸ்டர் கழுகு: திவாகரனை காட்டிக் கொடுத்த ராவணன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு