Published:Updated:

தேனியில் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்! - தி.மு.க-வின் புது வியூகம்

தேனியில் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்! - தி.மு.க-வின் புது வியூகம்
தேனியில் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்! - தி.மு.க-வின் புது வியூகம்

"தேனி தொகுதியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அரசியல் செய்ய, ஒரு வலுவான ஆள் தேவைப்படுவதாகத் தி.மு.க-வும் கருதுகிறது. விரைவிலேயே தங்கம் தடம் மாறலாம்!" என்கிறார்கள் அ.ம.மு.க. இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலர்.

ஒவ்வொரு முறையும் அ.ம.மு.க. சர்ச்சைப் புயலில் சிக்கும்போது, அடிபடும் பெயர் தங்க தமிழ்ச்செல்வன். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர், தற்போது தி.மு.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகப் பரவும் தகவல்தான் அ.ம.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்து தகுதியிழப்பில் பதவியை இழந்தவர். சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியைக் குறிவைத்தவருக்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கினார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை எதிர்த்து களம் கண்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு, 1,44,050 வாக்குகளே கிடைத்தன. 50 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், வெறும் 12.28 சதவிகித வாக்குகளையே அவரால் பெறமுடிந்தது.

தேனியில் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்! - தி.மு.க-வின் புது வியூகம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலாவின், தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர்தான், தினகரன் எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு எதிராகத் தைரியமாகக் குரல்கொடுக்கக்கூடியவர். முக்குலத்தோர் சமுதாயத்தில் தினகரனுக்கு அடுத்து பிரபலமாக இருப்பவர். அவர் விருப்பத்துக்கு முரணாக, தேனி நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கி தினகரன் பழிவாங்கிவிட்டார் என அ.ம.மு.க-வுக்குள் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தி.மு.க-விலிருக்கும் மாவட்டச் செயலாளர் ஒருவரோடு, தங்க தமிழ்ச்செல்வன் தொடர்பில் இருப்பதாகவும், தி.மு.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அ.ம.மு.க-வுக்குள் செய்தி காட்டுத்தீயாகப் பரவுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க. இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலர், ``எடப்பாடி ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்குத் துளியும் உடன்பாடில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தகுதிநீக்கத்தை உறுதி செய்தபின்னர், உச்ச நீதிமன்றம் செல்லலாம் என முடிவெடுத்தார். அதற்கு தினகரன் முட்டுக்கட்டைபோட்டதால், மீண்டும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி தொகுதியை எதிர்பார்த்து பணிசெய்தவருக்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை. தன்னால் செலவு செய்யமுடியாது என தினகரனிடமே சொல்லிவிட்டார். கடைசிக்கட்டத்தில்தான் மேலிடத்திலிருந்து பணம் வந்தது. அந்தப் பணம் விநியோகம் ஆகும் நேரத்தில்கூடச் சிக்கல் எழுந்தது. அ.தி.மு.க-வில் ஆறாக ஓடிய பணவெள்ளத்தில் தங்கம் அடித்துச் செல்லப்பட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு நல்ல தொடர்பில் இருந்தாலும், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ். இருக்கும்வரை தங்க தமிழ்ச்செல்வனால் அங்குச் செல்ல முடியாது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ரூட்டில் தி.மு.க-வில் ஐக்கியமாக யோசித்துக்கொண்டிருக்கிறார். தென்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவருடனும், மாவட்டச் செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தங்கம் வைக்கும் கோரிக்கைகள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தேனி தொகுதியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அரசியல் செய்ய, ஒரு வலுவான ஆள் தேவைப்படுவதாகத் தி.மு.க-வும் கருதுகிறது. விரைவிலேயே தங்கம் தடம் மாறலாம்” என்றனர்.

தேனியில் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன்! - தி.மு.க-வின் புது வியூகம்

இதுகுறித்து விளக்கமளித்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள், ``அவர்மீது இதுபோன்ற சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. இனி தி.மு.க-வில் இணைவதால் அவருக்கு என்ன பயன்? பத்தோடு பதினொன்றாகத்தான் அக்கட்சியில் இருக்க முடியும். 30 வருடங்களாக அ.தி.மு.க. கரை வேஷ்டி கட்டியவர், தி.மு.க. கரைவேஷ்டி கட்டுவார் எனக் கூறுவது அபத்தம். இந்த ஆட்சி இருக்கும்வரையில்தான், எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பாதுகாப்பு. ஆட்சி கவிழ்ந்த மறுநிமிடமே, கட்சி எங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அப்படி வரும் நேரத்தில், தங்கம் அ.ம.மு.க-வில் இருக்கக் கூடாது எனக் கருதும் சிலர், இப்படியான வதந்திகளைப் பரப்புகிறார்கள். இப்படி, பரப்புபவர்களில் அ.தி.மு.க-வினர் மட்டுமல்ல, அ.ம.மு.க-வினரும் இருப்பதுதான் வேதனையளிக்கிறது” என்றனர்.

வரும் ஜூன் 1-ம் தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ள அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு, தொகுதி வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலரும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை முன்வைப்பார்கள் எனக் கூறப்படுகிறது. கூட்டத்தில் சலசலப்புக்குப் பஞ்சமிருக்காது என இப்போதே அக்கட்சி வட்டாரங்கள் பரபரப்பாகிவிட்டன. அதற்குப் பிறகே தங்கம், வேறு முடிவை எடுப்பார் எனச் சொல்லப்படுகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு